மதவாதி: கோல்வால்கரின் அந்த நூலில் அப்படி என்ன இருக்கிறது?

மார்க்சியர்: சாவர்க்கரின் “இந்துத்துவா”நூலை அதில் அவர் புகழ்ந்தது மட்டுமல்லாது,அதைஅடிப்படையாகக் கொண்ட “இந்துராஷ்டிர”த்தை-இந்து தேசத்தை- இந்து அரசை அமைப்பதே ஆர்எஸ்எஸ் சின் லட்சியம் என்று வெளிப்படையாக அறிவித்தார்

மதவாதி: சரிதான்.

மார்க்சியர்: அதுமட்டுமல்ல, அந்த இந்து அரசுக்கான “உள்நாட்டு எதிரிகள்” என்று மூன்றுகுழுவினரை அடையாளப் படுத்தினார்.

மதவாதி: அவர்கள் யார்?

மார்க்சியர்:  “முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள்”. இந்த ஒவ்வொரு குழுவினர் பற்றியும் தனித்தனியாக, விரிவாக வன்மத்தோடு உரைத்திருக்கிறார்.

மதவாதி: ஆஹா! அப்போது ஆங்கிலேயர்களின் ஆட்சியல்லவா நடந்து கொண்டிருந்தது, அவர்களை இந்த எதிரிகள் பட்டியலில் சேர்க்கவில்லையா?

மார்க்சியர்:  இல்லை. “ஆங்கிலேய ஆட்சியாளர்களை எதிர்த்து போராடி இந்துக்கள் தம்சக்தியை விரயம் செய்யக்கூடாது” என்பதே ஹெட்கேவார், கோல்வால்கரின் முடிவாக இருந்தது. அதனால்தான் ஆர்எஸ்எஸ் 1925 முதல் 1947 வரையில் நடந்த சுதந்திர போராட்டங்கள் எதிலும் கலந்து கொண்டதில்லை. அவர்களுடைய குறி எல்லாம் இந்த மூன்று குழுவினர் மீதே.

மதவாதி: இவர்கள் எப்படி இந்துக்களின் எதிரிகள் ஆவார்கள்? அவர்களும் ஆங்கிலேய ஆதிக்க ஆட்சியில் ஒடுக்கப்பட்டிருந்தவர்கள்தானே?

மார்க்சியர்: விஷயத்தின் மையப் பொருளைத் தொடுகிறாய். இந்து வெகுமக்களுக்கு மட்டுமல்ல இந்திய வெகுமக்களுக்கும் இவர்கள் அல்ல எதிரிகள்.காரணம் அவர்கள் எண்ணிக்கையிலும் சரி, சமூக ஆளுகையிலும்சரி, பொருளாதார வளத்திலும் சரி மிகவும் பின்தங்கியவர்கள், அவர்கள் எப்படி எதிரிகளாக இருக்க முடியும்?

மதவாதி:ஆனால் முஸ்லிம்களை காங்கிரஸ் தாஜா செய்தது எனப்படுகிறதே?

மார்க்சியர்: தாஜா செய்திருந்தால் அவர்கள் முன்னேறி இருக்கவேண்டுமல்லவா? ஆனால் அரசுஅமைத்த சச்சார்குழு மற்றும் ரங்கநாத்மிஸ்ரா கமிசன் அறிக்கைகளின்படி அவர்கள் கல்வியில், அரசுபணிகளில், கம்பெனிஉடமையில், பொதுவாழ்வில் என்று அனைத்து துறைகளிலும் பின்தங்கி இருக்கிறார்கள். இந்திய மக்கள் தொகையில்14%ஆகஉள்ளனர் முஸ்லிம்கள்.ஆனால் அதற்கும் இந்ததுறைகளில் அவர்களின் பங்கெடுப்புக்கும் சம்பந்தமேயில்லை. ராணுவம், ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளில் அவர்கள் 2% முதல் 4% வரைதான். எங்கே நடந்திருக்கிறது தாஜா?

மதவாதி: பிறகு ஏன் இந்த மூன்று குழுவினரையும் எதிரிகள் என்கிறார்கள்?

மார்க்சியர்: ஏன் தெரியுமா? உண்மையான எதிரிகளை இந்து மக்களிடமிருந்தும், இந்தியமக்களிடமிருந்தும் மறைப்பதற்காக. அதற்காகத்தான் இப்படிப் பொய்யான எதிரிகளைக் கட்டமைக்கிறார்கள்.

மதவாதி: உண்மையான எதிரிகள் யார்?

மார்க்சியர்: சமூகசீர்திருத்தமும் சமயசீர்திருத்தமும் நடக்கக் கூடாது என்று நினைக்கிற பிராமணியவாதிகள் மற்றும் அனைவருக்குமான வளர்ச்சியும் பொருளாதார சமத்துவமும் வந்துவிடக் கூடாது என்று நினைக்கிற பகாசுர முதலாளியவாதிகள். இந்த இரு கூட்டத்தாரும் கூட்டுச்சேர்ந்துதான் நமது நாட்டை நாசமாக்குகிறார்கள். அது மக்கள் தொகையில் ஆகப் பெரும்பான்மையாக இருக்கிற இந்துமக்களுக்கு தெரியக்கூடாது என்று அவர்களை திசைதிருப்ப முஸ்லிம்களை-கிறிஸ்தவர்களை-கம்யூனிஸ்டுகளை எதிரிகளாகக் காட்டுகிறார்கள்.
(இன்னும் பேசுவார்கள்)

-Ramalingam Kathiresan

Leave A Reply