மதவாதி: நீ சொல்வது போல சிறுபான்மை மதத்தவரிடம் அவ்வளவு வெறுப்புடனா
இருக்கிறார்கள் ஆர்எஸ்எஸ் காரர்கள்?
மார்க்சியர்: 1923ல் வெளிவந்தது சாவர்க்கரின் “இந்துத்துவா” நூல். அதில் முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் குறிவைத்து தாக்கியிருந்தார். “அவர்களது புண்ணியபூமி வெகுதொலைவில் உள்ள அரேபியாவில் அல்லது பாலஸ்தீனத்தில் உள்ளது. இந்த நாட்டின் மீதான அவர்களின் நேசம் பிளவுபட்டதாக உள்ளது” என்று அவர்களது தேசபக்தியை கேள்விக்குள்ளாக்கினார்.
மதவாதி: இது என்ன அநியாயமாக இருக்கிறது! இங்கிலாந்து கிறிஸ்தவர்களுக்கும் ஜெர்மன் கிறிஸ்தவர்களுக்கும் புண்ணியபூமி இயேசுபிறந்த பாலஸ்தீனம்தான். அதற்காக அவர்கள் தத்தம் நாடுகளுக்கு துரோகம் செய்தார்களா? அவரவர் நாடுகளுக்காக உலகப்போரில் ரத்தம் சிந்தினார்களே! புண்ணிய பூமிக்கும் தாய் நாட்டுக்கும் என்ன சம்பந்தம்?
மார்க்சியர்: நன்றாகக் கேட்டாய். இன்னும் வேடிக்கை என்னவென்றால் இதே சாவர்க்கர் புனிதமாகக் கருதும் வேதங்கள் பிறந்த இவர்களது புண்ணிய பூமியாகிய சிந்து நதி தீரம் இப்போது பாகிஸ்தானில் இருக்கிறது! அப்படியெனில் இவர்களது நேசமும் பிளவுபட்டதுதானா?
மதவாதி: சரித்திரம் அவரைப் பழிவாங்கி விட்டது.
மார்க்சியர்: அது தெரியாமல் அவரையும் அவரது நூலையும் வியந்து போற்றினார்
ஹெட்கேவார்.

மதவாதி: அவர் யார்?
மார்க்சியர்: அவர்தான் ஆர்எஸ்எஸ்சை 1925ல் துவக்கியவர். அதன் கொள்கையாக
இந்துத்துவா ஆகிப்போனது.

மதவாதி: அதாவது, பிறமத வெறுப்பு.
மார்க்சியர்: இதை மேலும் பரப்பியவர் அந்த அமைப்பின் பொதுச்செயலாளராக 1939ல் ஆன கோல்வால்கர். அதே ஆண்டு அவர் எழுதிய “நாம் அல்லது நமது தேசியத்தின் வரையறை” எனும் நூலில் கூறினார்: “இந்துஸ்தானத்தில் உள்ள அந்நிய சாதியினர் இந்து கலாச்சாரம் மற்றும் மொழியை தமதாக்கிக் கொள்ள வேண்டும். இந்துமதத்தை மதிக்கவும் அதைப் போற்றி துதிக்கவும் கற்றுகொள்ள வேண்டும். இந்து சாதி மற்றும் கலாச்சாரத்தைப் புகழ்வதைத்
தவிர வேறுசிந்தனைகளுக்கு இடம் தரக்கூடாது. அல்லது இந்து தேசத்திற்கு முழுமையாக அடங்கியிருந்து எதையும் கோராமல், எந்தஉரிமையும் வேண்டாமல், தனிச்சலுகை எதையும் தேடாமல், குடியுரிமைகூட இல்லாமல் இந்த நாட்டில் இருந்து கொள்ளலாம்.”

மதவாதி: இந்து அல்லாதவர்கள் என்பதால் பிற மதத்தவர்கள் எல்லாம் அடிமைகள்
போல வாழ வேண்டும் என்றாரா?

மார்க்சியர்: ஆம்.அதுதான் தாங்கள் உருவாக்க நினைக்கும் “இந்துராஷ்டிரத்”தின், நீகூடச் சொன்னாயே “இந்து அரசு” என்று, அதன் கொள்கையாக இருக்கும் என்றார்.
மதவாதி: ஐயோ, நான் இப்படி நினைத்துச் சொல்லவில்லை. ஆகப் பெரும்பாலோர் இந்துக்கள் என்பதால் இந்து அரசு என அறிவிப்பதில் என்ன தவறு என்று நினைத்தேன்.ஆனால் அது சிறுபான்மையோரை அடக்கிஒடுக்கும் கருவியாக மாறும் என்றால் வேண்டவே வேண்டாம். ஆனால் ஒரு சந்தேகம். அவரது பிந்திய காலத்திலும் அவரது கொள்கை இப்படித்தான் இருந்ததா?
மார்க்சியர்: 1940ல் ஆர்எஸ்எஸ் சின் தலைவராகிப் போனார். அதன் பிறகான அவரின் கருத்துக்கள் “சிந்தனைக் கொத்து” என்று ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது. அதிலிருந்து சில”முத்துக்களை” உன்முன் கொட்டுகிறேன்.நீயே ஒருமுடிவுக்கு வா.
(இன்னும் பேசுவார்கள்)

-Ramalingam Kathiresan

Leave a Reply

You must be logged in to post a comment.