மதுரை;
‘நீட்’ தேர்வுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் கொடுக்கப்படாதது குறித்து விளக்கம் அளிக்குமாறு, மத்திய கல்வி வாரியத்திற்கு (சிபிஎஸ்இ) சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
அதேநேரம், ‘நீட்’ தேர்வு அடிப்படையிலான, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க, நீதிபதிகள் மறுத்து விட்டனர்.
இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ‘நீட்’ தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி கடந்த மே 7-ஆம் தேதி நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு நடைபெற்றது. அப்போது, தமிழக மாணவர்களிடம் ஏக கெடுபிடிகள் செய்யப்பட்டன. தமிழக மாணவர்களுக்கு மட்டும் கடினமான கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், நடைபெற்று முடிந்த ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும்; ‘நீட்’ அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்; ஏற்கெனவே நடைமுறையில் உள்ளபடி பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்; ‘நீட்’ தேர்வுக்கு மாநில வாரியாக கேள்வித்தாளை வடிவமைக்காமல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான கேள்வித்தாளை பயன்படுத்த வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் 9 பேர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு வியாழக்கிழமையன்று நீதிபதி சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ‘நீட்’ தேர்வு அடிப்படையிலான மாணவர் சேர்க்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிபதி சேஷசாயி மறுத்து விட்டார்.
இந்த வழக்கு மீதான விசாரணயை ஒருவார காலத்துக்கு ஒத்திவைத்த அவர், இதுதொடர்பாக மத்திய – மாநில அரசுகளுக்கும், ‘நீட்’ தேர்வுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்படாதது குறித்து சிபிஎஸ்இ வாரியம் மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Leave a Reply

You must be logged in to post a comment.