புதுதில்லி;
‘இரட்டை இலை’ சின்னத்திற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டிடிவி தினகரன், சுகேஷ் ஆகியோரின் குரல் மாதிரிகளை சோதனை செய்ய காவல்துறைக்கு தீஸ்ஹசாரி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
முடக்கி வைக்கப்பட்டுள்ள, ‘இரட்டை இலை’ சின்னத்தை, சசிகலா தலைமையிலான அதிமுக அணிக்கு பெறுவதற்காக, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரூ. 50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக, அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி தில்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
இவ்விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக கூறப்படும் சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா ஏஜெண்ட் நரேஷ், தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், டிடிவி தினகரன் – இடைத்தரகர் சுகேஷ் இடையே தொலைபேசி உரையாடல் தொடர்பான பதிவுகள் குறுந்தகடு வடிவில் உள்ளதாகவும், இந்த குரல் மாதிரிகளின் அடையாளங்களை உறுதி செய்யும் வகையில் தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தின் தடயவியல் பரிசோதனை மையத்தில் ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் தில்லி காவல்துறையினர், நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிடிவி தினகரன் – சுகேஷ் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
வியாழனன்று இம்மனுக்கள் விசாரணைக்கு வந்தது. அப்போது, தினகரன், சுகேஷ் ஆகியோரின் குரல் மாதிரிகளை சோதனை செய்ய காவல்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
ஜாமீன் மனு ஒத்திவைப்பு;
இதனிடையே ‘இரட்டை இலை’ க்காக லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் ஜாமீன் கேட்டு, டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனா தாக்கல் செய்திருந்த மனுக்களும் வியாழனன்று விசாரணைக்கு வந்த நிலையில், அவற்றை மே 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, நீதிபதி பூனம் சவுத்ரி உத்தரவிட்டார்.
மேலும் ஒரு ஹவாலா ஏஜெண்ட் கைது!
‘இரட்டை இலை’ சின்னத்தைப் பெறுவதற்காக, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரூ. 50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா ஏஜெண்ட் நரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், பாபுபாய் என்ற மற்றுமொரு ஹவாலா ஏஜெண்டையும் தில்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தில்லி தீஸ்ஹசாரி நீதிமன்றத்தில் நடைபெற்ற வியாழனன்று நடைபெற்ற விசாரணையின் போது இத்தகவலை அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.