தி ஹேக்;
குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு, சர்வதேச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இவ்வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, குல்பூஷனுக்கு மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்றும் பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச நீதிமன்றத்தின் 11 நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இந்திய கடற்படையின் ஓய்வுபெற்ற அதிகாரியான குல்பூஷண் ஜாதவ், கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி ஈரானில் இருந்து பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்திற்கு உட்பட்ட மாஸ்கெல் பகுதிக்குச் சென்றார். அங்கு அவரை பாகிஸ்தான் நாட்டு உளவுத்துறையினர் கைது செய்தனர்.

பாகிஸ்தானுக்கு எதிராக உளவு பார்த்தார் என்றும் கராச்சி குண்டுவெடிப்பில் தொடர்பு இருக்கிறது என்றும் குல்பூஷன் ஜாதவ் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குல்பூஷன் ஜாதவ் கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்தான் என்பதை ஒப்புக்கொண்ட இந்திய அரசு, அதேநேரம் ’ரா’ உளவு அமைப்புக்காக குல்பூஷன் உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தது.

ஆனால், குல்பூஷன் மீது கடந்த ஓராண்டாக நடைபெற்ற விசாரணையின் முடிவில், அவருக்கு மரண தண்டனை விதித்து, கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இது இந்தியாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

உரிய சட்ட விதிகளை பின்பற்றாமல், ஒரு முன் திட்டமிட்ட படுகொலையாகவே குல்பூஷன் ஜாதவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இந்தியா பார்க்கிறது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது கண்டனத்தை தெரிவித்தார்.
ஆனால், குல்பூஷன் ஜாதவ் மேல்முறையீடு செய்வதற்கு அவகாசம் வழங்கப்பட்டு இருப்பதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்தது.

அதைத்தொடர்ந்து, குல்பூஷன் ஜாதவ் மீதான குற்றப்பத்திரிகையின் நகலை வழங்குமாறு, பாகிஸ்தானுக்கான இந்திய உயர் ஆணையாளர் கவுதம் பாம்பவாலே வேண்டுகோள் விடுத்தார். குல்பூஷனை தூதரக அதிகாரிகள் சந்திப்பதற்கும் பாகிஸ்தான் அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் கோரினார். இந்த ஒரு கோரிக்கை தொடர்பாக மட்டும் 14 முறை பாகிஸ்தானிடம் இந்திய அரசு முறையிட்டது. எனினும் குல்பூஷனை ஜாதவை இந்திய அதிகாரிகள் சந்திப்பதற்கு கடைசி வரை பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்க வில்லை.

இதனைத் தொடர்ந்து, குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை எதிர்த்து நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் கீழ் இயங்கி வரும் சர்வதேச நீதிமன்றத்தில் கடந்த மே 10-ஆம் தேதி இந்தியா முறையிட்டது.
குல்பூஷன் ஜாதவுக்கு மரண தண்டனையை பாகிஸ்தான் நிறைவேற்றி விட்டதோ என்ற சந்தேகத்தையும் அப்போது இந்தியா எழுப்பியது.

இதனால், மரண தண்டனையை நிறுத்தி வைக்கும்படி பாகிஸ்தான் அரசுக்கு உத்தரவிட்ட சர்வதேச நீதிமன்றம், இவ்வழக்கில் இரு நாடுகளிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தது. “ குல்பூஷனுக்கு மரண தண்டனை விதித்திருப்பது பற்றி இந்திய தூதரகத்துக்கு உரிய தகவல் தெரிவிக்கப்படவில்லை; இதன்மூலம், வியன்னா பிரகடனத்தை பாகிஸ்தான் மீறி இருக்கிறது; மேலும், எவ்வித ஆதாரமும் இன்றி குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உள்ளது; எனவே, அவரை உடனே விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்” என்று இந்திய அரசு தரப்பில் வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டது.

“வியன்னா பிரகடனத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிடும் வகையில் உளவு பார்க்கும் விஷயத்தில் சம்பந்தப்பட்ட நாட்டின் தூதரகத்தை அணுகுவது குறித்து எதுவும் கூறப்படவில்லை; எனவே இந்த விவகாரத்தை பொறுத்தவரை சர்வதேச நீதிமன்றத்தை இந்தியா அரசியல் மேடையாக்கி விட்டது” என்று பாகிஸ்தான் தரப்பில் குற்றப்ட்டது.
இந்த வழக்கில், இரு தரப்பு வாதங்களும் கடந்த திங்கட்கிழமையோடு முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து, இந்திய நேரப்படி வியாழக்கிழமையன்று பிற்பகல் 3.30 மணியளவில், சர்வதேச நீதிமன்றம் தனது தீர்ப்பை அளித்தது.

“வியன்னா ஒப்பந்தப்படி இவ்விவகாரத்தில் தலையிட சர்வதேச நீதிமன்றத்திற்கு சட்ட அதிகாரம் உள்ளது; சர்வதேச நீதிமன்றம் தலையிடக்கூடாது என்ற பாகிஸ்தான் வாதத்தை சர்வதேச நீதிமன்றம் நிராகரிக்கிறது; அடுத்ததாக பாகிஸ்தான் சட்டத்தின்படி குல்பூஷன் ஜாதவ் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக 40 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம்; ஆனால் இதுவரையில் அவரது தரப்பில் முறையீடு செய்யப்பட்டதா என்பது தெரியவரவில்லை; குல்பூஷண் ஜாதவின் தயாரின் முறையீடு மற்றும் மனு பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது என இந்தியா தெரிவித்து உள்ளது;

எனவே, வியன்னா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் கடைபிடிக்க வேண்டும்; குல்பூஷன் ஜாதவை சந்திக்கும் இந்திய தூதரக அணுகுமுறைக்கு பாகிஸ்தான் அனுமதி வழங்க வேண்டும்; இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுமே குல்பூஷன் ஜாதவ் இந்திய குடிமகன் என்பதை உறுதி செய்து உள்ளன; வியன்னா மாநாட்டின் கீழ் இந்தியாவால் பெறப்பட்ட உரிமைகள் ஏற்கத்தக்கவை; மேலும், ஜாதவ் கைது செய்யப்பட்ட சூழலில் சந்தேகம் இருக்கிறது; எனவே இவ்விவகாரம் தொடர்பாக மறு உத்தரவு வரும் வரையில் குல்பூஷன் ஜாதவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்படாது என்பதை பாகிஸ்தான் உறுதி செய்ய வேண்டும்”.
இவ்வாறு நீதிபதிகள் தங்களின் உத்தரவில் குறிப்பிட்டனர்.
சர்வதேச நீதிமன்றத்தின் தலைவர் ரோன்னி ஆப்ரஹாம் தலைமையில் 11 நீதிபதிகள் ஏகமனதாக இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

சுஷ்மா ஸ்வராஜ் வரவேற்பு;
குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனைக்கு சர்வதேச நீதிமன்றம் தடை விதித்திருப்பது, அவரது குடும்பத்திற்கு பெரும் ஆறுதலை அளித்திருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். குல்பூஷன் ஜாதவின் தண்டனைக்கு தடை விதிக்கப்படும் வகையில் இந்தியாவின் வாதத்தை சரியான முறையில் சர்வதேச நீதிமன்றத்தில் எடுத்து வைத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேயை பாராட்டுவதாகவும் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல குல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இறுதித் தீர்ப்பும் இந்தியாவுக்கு ஆதரவாகத்தான் இருக்கும் என தான் உறுதியாக நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply