புதுதில்லி, மே 18 –
உத்தரப்பிரதேசத்தில் தலித் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், சுபாஷினி அலி அந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்று குடியரசுத்தலைவரைக் கோரியுள்ளனர்.
பிருந்தா காரத், சுபாஷினி அலி ஆகியோர் உத்தரப்பிரதேச மாநிலம், சகரான்பூர் மாவட்டத்தில், சப்பிர்பூர் கிராமத்தில் பாதிப்புக்கு உள்ளான தலித் குடும்பத்தினருடன்  புதனன்று குடியரசுத் தலைவரை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் குடியரசுத்தலைவரிடம் கூறியதாவது:
சப்பிர்பூர் கிராமத்தில் உள்ள ரவிதாஸ் கோவிலில் டாக்டர் அம்பேத்கர் சிலையை நிறுவிட கிராமத்தில் உள்ள தலித்துகள் விரும்பியிருக்கிறார்கள். இதனை அந்த ஊரிலுள்ள உயர்சாதியினர் ஆட்சேபித்து, அந்தத் தொகுதி பாஜக எம்எல்ஏயை சந்தித்திருக்கின்றனர். அவர் இது தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் கொடுத்திருக்கிறார். காவல்துறையினர் வந்து அம்பேத்கர் சிலை நிறுவும் பணியை நிறுத்திவிட்டனர்.
மே 5ஆம் தேதியன்று தாகூர் இனத்தைச் சேர்ந்த உயர்சாதியினர் ரானா பிரதாப் ஜெயந்தியைக் கொண்டாடியபோது, தலித் தெருக்களின் வழியே சென்று, சிம்லானா பகுதியில் அவரது சிலையை நிறுவிடத்திட்டமிட்டுள்ளனர். அவ்வாறு அவர்கள் ஊர்வலமாகச் செல்கையில் வாட்கள்,  நாட்டு வெடிகுண்டுகள் ஆகியவற்றுடன் ஆட்சேபகரமான கோஷங்களை எழுப்பியவண்ணம் சென்றுள்ளனர். தங்களுடைய உயர்சாதி அந்தஸ்தை நிலைநிறுத்தும் ஒரு முயற்சியாகவே இதனை அவர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள்.  இவர்களின் அடாவடித்தனமாக காவல்துறையினரிடம் முறையிட்டபின் சிலர் அங்கே வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களின்  வன்முறை வெறியாட்டங்களைக் கட்டுப்படுத்திட எதுவுமே செய்திடவில்லை.  தலித்துகளின் 58 வீடுகளைத் தீக்கிரையாக்கினர், 25-26 மோட்டார் சைக்கிள்களையும், சிறிய வேன்களையும், மளிகை சாமான்கள் மற்றும் ரேஷன் கார்டுகள், குழந்தைகளின் புத்தகங்கள் அனைத்தும் இதில் சாம்பலாயின. விவசாய உபகரணங்களும் வீணாகிவிட்டன. நான்கு கடைகளும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. தீயை அணைக்க வந்த தீயணைப்பு ஊர்திகளைக் கிராமத்திற்குள் வராதவாறு தடுத்துவிட்டனர். இதில் 14க்கும் மேற்பட்டோர் காயங்கள்  அடைந்துள்ளனர். இவர்களில் 5 பெண்களும் 1 சிறுவனும் அடங்குவர். இவர்கள் அனைவரும் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த சம்பவத்தின்போது மூச்சுத்திணறலினால் தாகூர் இனத்தைச்சேர்ந்த ஒருவர் இறந்துவிட்டார். அவரது குடும்பத்தாருக்கு 15 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கியுள்ளனர். ஆனால், பாதிப்புக்குள்ளான தலித் குடும்பத்தினருக்கு இழப்பீடு எதுவும் கிடையாது. மாறாக ஏராளமான பொய் வழக்குகள் அவர்கள்மீது புனையப்பட்டுள்ளன.
யோகி ஆதித்யநாத் முதல்வரானபின் அவரது இந்து யுவ வாகினி என்னும் மதவெறி அமைப்பும், அதேபோன்று பசுப் பாதுகாப்புக்குழுக்கள் போன்று மதவெறி அமைப்புகள் பலவும் மிகவும் வேகமான முறையில் விரிவாக்கப்பட்டு வருகின்றன.  இவ்வாறான தாக்குதல்களில் பாஜக தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் நேரடியாகவே பங்கேற்று வருகின்றனர். ஏப்ரல் 20 அன்று சகரான்பூரில் நடைபெற்ற தாக்குதல் ஒன்றின்போது, பாஜக எம்பி ஒருவர் தலைமையில் கும்பல் ஒன்று  மூத்த காவல் கண்காணிப்பாளர் இல்லத்தையே தாக்கி இருக்கிறது. இதனைத்தொடர்ந்த அந்த அலுவலர் மாற்றப்பட்டிருக்கிறார்.
இவ்வாறு மாநிலத்தில் ஆட்சியாளர்களின் ஆதரவுடனேயே இத்தனை அக்கிரமங்களும் நடந்து வருகின்றன. இதன் மீது உரிய  நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று பிருந்தா காரத் மற்றும் சுபாஷினி அலி குடியரசுத் தலைவரிடம் கூறினார்.
வழக்கம்போல் அவரும் மிகவும் அமைதியுடன் அவர்கள் கூறுவதைக்கேட்டுவிட்டு ஆவன செய்வதாக உறுதி அளித்திருக்கிறார்.
(ந.நி.)

Leave A Reply