சென்னை, மே 16 –
அனுபவம் இல்லாதவர்கள் அரசு பேருந்துகளை இயக்குவது ஆபத்தானது என்று தொழிற்சங்கத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர். ஓய்வூதியர் நிலுவை வழங்க வேண்டும், தற்போது பணியில் உள்ள தொழிலாளர்களிடம் படித்தம் செய்யப்பட்ட தொகையை வழங்க வேண்டும், கழகங்களின் நட்டத்தை அரசு ஏற்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். வேலைநிறுத் தத்தத்தின் 2வது நாளான செவ்வா யன்று (மே 16) 95 விழுக்காடு பேருந்துகள் இயங்கவில்லை.

வருவாய் இழப்பு
போக்குவரத்துத் தொழிலாளர்களின் முதல் வேலைநிறுத்தத்தால் போக்குவரத்துக் கழகங்களின் வருவாய் அடியோடு சரிந்துள்ளது. போக்குவரத்து கழகங்களில் சுமார் 24 ஆயிரம் பேருந்துகள் உள்ளன. இவற்றில் 22ஆயிரம் பேருந்துகள் வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு 2 கோடி பேர் பயணித்து வந்தனர். நாளொன்றுக்கு 22 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிவந்தன. முதல் நாள் வேலை நிறுத்தத்தால் 90 விழுக்காடு பேருந்துகள் இயக்கவில்லை. இதனால் 20.50 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள் ளது. 15 ஆயிரம் தொழில்நுட்ப ஊழியர்களும் போராட்டத்தில் உள்ளதால் பேருந்துகள் பராமரிக்காமல் கிடக்கின்றன. இதனால் ஒரு முறை பணிமனையை விட்டு வெளியேச்சென்று வந்த பேருந்தை மறுமுறை இயக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.

அச்சத்தில் பயணிகள்
இந்நிலையில், இப்போராட்டத்தை நடத்தி வரும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் எழும்பூரில் உள்ள எச்எம்எஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் தொமுச தலைவர் சண்முகம் கூறியது வருமாறு: தொழிலாளர்களின் போராட் டத்தை அரசு பேசி தீர்க்காமல், தனியார் பேருந்துகளை இயக்குவது மோட்டார் வாகனச் சட்டத்திற்கு விரோதமானது. ஐஎல்ஓ விதிகளுக்கு முராண அதிகாரிகள் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. பயற்சி இல்லாதவர்களையும், வயதானவர்களையும் வைத்து இயக்குவது ஆபத்தானது. இதன் காரணமாகவும், தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாலும் பொதுமக்கள் பயணத்தை தவிர்க்கின்றனர்.

2.3.2016 அன்று போக்குவரத்துத் துறை அமைச்சர் முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் ஆண்டுக்கு கழகங்களுக்கு 156 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனை அரசு ஈடுகட்டினால்தான் கழகங்களை இயக்க முடியும் என்று கூறியபிறகும், அரசு நிதி ஒதுக்க மறுக்கிறது. எனவே, இழப்பை அரசு ஈடுகட்டும் என்ற அரசாணை பிறப்பிக்க வேண்டும், நட்டத்தை ஈடுகட்டாமல் எப்படி பேச்சுவார்த்தை நடத்த முடியும். ஓய்வூதியர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை, தற்போது பணியில் உள்ள தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட 4500 கோடி ரூபாய் தொகைகளை உரிய கணக்குகளில் செலுத்த வேண்டும். மாநிலத்தில் உள்ள பொதுத்துறை நிறுவன ஊழியர்களை விட போக்குவரத்து ஊழியர்கள் ஊதியம் குறைவாக உள்ளது.

எனவே, ஊதிய உயர்வுக்கான பணத்தை ஒதுக்கி 13வது ஒப்பந்தப் பேச்சு வார்த்தையை தொடங்க வேண்டும். மே 15ஆம் தேதி அதிகாரிகள் வராததால் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடக்கவில்லை. செவ்வாயன்று (மே 16) முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு வரவில்லை.  இவ்வாறு அவர் கூறினார்.

தொழிலாளர்கள் மீது பழி
சிஐடியு தலைவர் அ.சவுந்தரராசன் கூறியது வருமாறு: தொழிலாளர்கள் பணிமனைக்கே வராதபோது எப்படி பேருந்துகளை சேதபடுத்த முடியும். மெரினா போராட்டத்தை ஒடுக்க வாகனங்கள், குடிசைகளுக்கு தீ வைத்ததை போன்று, டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தில் வேனை உடைத்ததை போன்று தற்போது ஆளும்கட்சியும், காவல்துறையும் இணைந்து பேருந்துகளை உடைக்கிறார்கள். அந்தப்பழியை தொழிலாளர்கள் மீது சுமத்துகிறார்கள். இதன்மூலம் வன்முறை செய்து போராட்டத்தை உடைக்கப் பார்க்கிறார்கள். வன்முறையில் எங்களுக்கு நம்பிக்கையில்லை.

விபரீதம்
பராமரிப்பு ஊழியர்கள் முழுமையாக வேலைநிறுத்தத்தில் உள்ளனர். வழித்தடத்தில் சென்று வரும் பேருந்துக்கு ஆயில் மாற்ற, தண்ணீர் ஊற்ற, பிரேக் சரிபார்க்க ஆள் இல்லை. அத்தகைய பேருந்துகளை மணல் லாரி, கல்லூரி பேருந்து
ஓட்டுநர்களை கொண்டு பேருந்துகளை இயக்குகின்றனர். பயிற்சி இல்லாத, வயதுமுதிர்ந்தவர்களை கொண்டு இயக்கினால் பயணிகள், பொதுமக்கள் பாதுகாப்பு, பேருந்து என அனைத்திற்கும் ஆபத்து உள்ளது. இதுபோன்ற விபரீதத்தில் அரசு ஈடுபடக் கூடாது.

மாவட்டங்களில் ஏற்கெனவே ஓடிக் கொண்டிருக்கும் தனியார் பேருந்துகளை சென்னைக்கு கொண்டு வந்துவிட்டால், அங்குள்ள மக்கள் என்ன செய்வார்கள்? தனியார் பேருந்துகளை வைத்து இயக்குவோம் என்பது ஏமாற்றுவேலை. ரயில், தனியார் பேருந்துகளில் கூட்டமே இல்லை. தொழிலாளர்களின் நியாயத்தை புரிந்து
கொண்டு மக்கள் பயணத்தை தவிர்த்து போராட்டத்தை ஆதரிக்கின்றனர். அரசு மேற்கொள்ளும் சில்லுவண்டித்தனங்களை எதிர்கொள்வோம்.

30 ஆயிரம் தொழிலாளர்களின் பணத்தை வைத்துக் கொண்டு தர மறுப்பது என்ன நியாயம்? 1692 கோடி ரூபாயில் 500 கோடி இப்போது தருகிறோம். இன்னொரு 500 கோடி ரூபாயை செப்டம்பர் மாதம் தருகிறோம். மீதம் உள்ள தொகை பற்றி ஏதும் கூற மறுக்கிறார்கள். அடுத்த 3 மாதத்திற்குள் 1000 தொழிலாளர்கள் ஓய்வு பெறப் போகிறார்கள். அந்தத் தொகையுடன் ஒரு 400 கோடியை புதிதாக சேர்ந்துகொள்ளும்.அது குறித்து கேட்டால் பதில் இல்லை. வாய்மொழியாக கூறுவதை எழுத்துப்பூர்வமாக கேட்டால் தர மறுக்கிறார்கள். தொழிலாளர்களின் கோரிக்கை களில் ஏதாவது ஒரு தவறு இருக்கிறதா?

நிலை தடுமாறும் அரசு
கழகப் பேருந்துகளுக்கு டோல் கட்டணம் (சுங்க கட்டணம்) கட்டுவதில் விதிவிலக்கு வேண்டும் என்று கோரி வருகிறோம். அதனை அரசு பரிசீலிக்க மறுக்கிறது. தற்போது போராட்டத்தை உடைக்க தனியார் பேருந்துகளை அரசு பயன்படுத்துகிறது. அத்தகைய தனியார் பேருந்துகளுக்கு டோல் பணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது. அதேசமயம் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் ஒன்றிரண்டு கழகப் பேருந்துகள் டோல் பணம் செலுத்த வேண்டும்.

அரசு நிலைதடுமாறி செயல்படுகிறது.அசோக் லைலேண்ட் பேருந்து ஒரு லிட்டர் டீசலுக்கு 4 கி.மீ.தான் ஓடும். ஆனால் போக்குவரத்துத் தொழிலாளர்கள் 6.5கி.மீ. தூரம் இயக்குகின்றனர். இதுபோன்று தொழிலாளர்களின் அயராத உழைப்பால் இந்த ஆண்டு போக்குவரத்துக் கழகம் 10 விருதுகளை பெற்றுள்ளது. தொழிலாளர்கள் பறிக்கப்பட்ட தங்கள் பணத்தை கேட்கிறார்கள். மத்திய தொழிற்சங்கங்கள் போராட்டத்தை ஆதரித்து நாளை (மே 17) தமிழகம் முழுவதும் போராட் டம் நடத்த உள்ளன. அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள் ளன. இதனைத் தொடர்ந்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக மக்கள் போராட்டம் நடத்துவார்கள். எங்கள் போராட்டத்திலிருந்து அரசு தப்பிக்க முடியாது. நெறியற்ற முறைகளை விடுத்து முதல்வர் உடனடியாக தலையிட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

divi theme free download nulled

Leave A Reply