கூட்டாட்சிக் கோட்பாட்டின் அடிப்படையே மாநில அரசுகள் மத்திய அரசின் குறுக்கீடின்றிச் செயல்பட முடியும், மாநிலங்களின் அத்தகைய சுதந்திரமான செயல்பாட்டிற்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்பதேயாகும். இதற்கு மாறாக, மாநிலங்களின் அதிகாரங்களை மத்திய அரசு கைப்பற்றுவது, சில அதிகாரங்களைப் பொதுப்பட்டியலுக்கு மாற்றி அதன் மூலம் தன்னிச்சையாகக் குறுக்கிடுவது என்ற அத்து மீறல்கள் அவ்வப்போது நடந்து வந்திருக்கின்றன.

மாநிலங்களுக்குள் உள்ளாட்சிகளுக்கே முழுமையான நிர்வாக அதிகாரங்களும் நிதி அதிகாரங்களும் வழங்கப்பட்டாக வேண்டும் என்ற ஜனநாயகக் குரல் மேலோங்கி வரும் நிலையில், மாநில அரசுகளையே ஒரு உள்ளாட்சி நிர்வாகம் போல மத்திய ஆட்சியாளர்கள் நடத்துகிறார்களே என்ற விமர்சனம் கடந்த காலத்திலும் எழுந்ததுண்டு. தற்போது, அந்த அத்து மீறல்களுக்கெல்லாம் கிரீடம் சூட்டியது போல தமிழக அரசின் செயல் பாட்டில் மத்திய அரசின் அப்பட்டமான தலையீடு ஒன்று ஏதோ ஒத்திகை பார்ப்பது போல நடந்திருக்கிறது. கடந்த ஞாயிறன்று (மே 14) சென்னையில் திருமங்கலம் – நேரு பார்க் இடையேயான சுரங்க ரயில் போக்குவரத்துத் தொடக்கவிழாவுக்காக வந்திருந்த மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, விழா முடிந்ததும் தலைமைச் செயலகத்திற்குச் சென்றார்.

அங்கே தனது துறை சார்ந்த கோப்புகளை வரவழைத்து ஆய்வு செய்த அவர், அந்த ஆய்வின்போது உடனிருக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் வரவழைத்தார். ஆய்வு முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கய்ய நாயுடு, தான் அரசியலுக்காகத் தலைமைச் செயலகத்திற்கு வரவில்லை என்பதாகச் சொல்லிக்கொண்டார். முதலமைச்சரோ எழுதிவைத்த அறிக்கை ஒன்றைப் படித்துவிட்டு மவுனமாகிவிட்டார். தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழலை முடிந்த வழிகளிலெல்லாம் தனக்கு ஆதாயமாகப்பயன்படுத்திக்கொள்ள மத்திய ஆளுங்கட்சி கூச்சமின்றி முயல்வதையும், அதைத் தடுக்கவோ, தட்டிக்கேட்கவோ திராணியற்றதாகத்தான் தமிழக ஆளுங்கட்சி இருக்கிறது என்ற நிலைமையையும்தான் காட்டுகிறது இந்த நிகழ்ச்சிப்போக்கு.

இது வரையில் எதிர்க்கட்சிகளாலும் அரசியல் விமர்சகர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்த, பாஜக தலைவர்களால் அப்படியெல்லாம் இல்லை என்று மறுக்கப்பட்டு வந்த ஒன்று, இது பற்றிய சந்தேகம் இருக்கக்கூடியவர்களுக்கு அந்தச் சந்தேகத்தைப் போக்கும் வகையில் இப்போது மிக அப்பட்டமாகக் காட்சிக்கு வந்திருக்கிறது. மத்திய அமைச்சரின் இந்தச் செயலில் தவறு இல்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியிருக்கிறார். எந்த அளவுக்கு அதிமுக தலைவர்கள் வருமான வரித்துறை சோதனை உள்ளிட்ட அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளால் அரண்டு போயிருக்கிறார்கள் என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை.

இதே போல் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் தில்லி சென்று மத்திய அமைச்சரை வரவழைத்து கோப்புகளை ஆய்வு செய்ய முடியுமா? மத்திய ஆட்சியாளர்களின் இந்த நாட்டாமைத் தனம் கடும் கண்டனத்திற்குரியது, உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டியது.

Leave A Reply