பரத்பூர்(ராஜஸ்தான்);
இராஜஸ்தானில் திருமண மண்டப சுவர் இடிந்து விழுந்ததில் 24 பேர் பலியாகினர். அவர்களது குடும்பத்துக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளதுடன், தலா ரூ.2 லட்சம் நிவாரணமும் அறிவித்து உள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு கடுமையான புயல் வீசியது. அப்போது பரத்பூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடந்து கொண்டிருந்தது. புயல் காற்றில் இருந்து தப்பிப்பதற்காக திருமணத்துக்கு வந்திருந்தவர்கள், மண்டபத்துக்குள் அமர்ந்து இருந்தனர்.
அப்போது திடீரென அந்த மண்டபத்தின் சுவர் இடிந்து விழுந்தது. இந்த கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 24 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் மணப்பெண்ணின் உறவினர்கள் ஆவர். மேலும் இந்த விபத்தில் சுமார் 40 பேர் படுகாயமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 2 பேர் ஜெய்ப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்த பிரதமர் மோடி அதிர்ச்சியும், வேதனையும் வெளியிட்டு உள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் எனவும் பிரதமர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.