புதுதில்லி, மே 5 –
வராக்கடன்களை வசூலிக்க ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெருமுதலாளிகள் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் உள்ள கடன் முக்கியப் பிரச்சனையாக உள்ளது. டிசம்பர் 2016-வரை வங்கிகளின் மொத்த வராக் கடன், 6 லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. இதில் பொதுத்துறை வங்கிகளுக்கு வரவேண்டிய கடன் தொகை மட்டும் 5 லட்சத்து 2 ஆயிரம் கோடியாகும்.

இவற்றை வசூலிப்பதற்கான உருப்படியான நடவடிக்கைகள் எதையும் எடுக்காத மத்திய பாஜக அரசு, கறுப்புப் பணத்தை மீட்கிறேன்; வராக் கடனை வசூலிக்கிறேன் என்ற பெயரில் கண்துடைப்பு நாடகங்களையே அரங்கேற்றி வருகிறது. அந்த வகையில், வராக் கடன்களை வசூலிக்கும் வகையில் ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதாக கூறி, அவசரச் சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன்மூலம், கடன் செலுத்தும் தகுதி இருந்தும் கடனை திரும்பச் செலுத்தாதவர்கள் மீது ரிசர்வ் வங்கி நேரடியாக நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை இரண்டு நாட்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், மத்திய அரசின் புதிய அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெள்ளியன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.