புதுதில்லி;
தில்லியில் ஓடும் பேருந்தில் கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட நிர்பயா வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் தில்லி நீதிமன்றம் வழங்கிய தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
குற்றத்தின் கொடூரத் தன்மையைப் பார்க்கையில், குற்றவாளிகளுக்கு கருணை காட்டுவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர். பானுமதி அமர்வு தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி, தில்லியில் நிர்பயா என்ற 23 வயது மாணவி, ஓடும் பேருந்தில் 6 பேர் கும்பலால் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார். பின்னர் நிர்பயா பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டார்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிர்பயாவுக்கு தில்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. அதில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் நிர்பயா சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு 13 நாட்களுக்குப் பின் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தில், 18 வயது சிறுவன் உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் மீது தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரும், ஓட்டுநருமான ராம் சிங், 2013-ஆம் ஆண்டு சிறையிலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகிய 4 பேர் மீதான குற்றத்தை உறுதிப்படுத்திய தில்லி சிறப்பு நீதிமன்றம், அவர்களுக்க 2014-ஆம் ஆண்டு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.ஒருவர் இளம் குற்றவாளி என்பதால் அவரை, மூன்றாண்டுகளுக்கு சிறார் கூர்நோக்குப் பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டது.
இந்நிலையில், அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகிய 4 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து, தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், அந்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், 2015-ஆம் ஆண்டு 4 பேரின் தூக்கை உறுதிப்படுததியது.
இதையடுத்து, நான்கு பேரும் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றனர். அங்கு கடந்த ஓராண்டாக நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர். பானுமதி மற்றும் அசோக் பூஷண் அமர்வு இவ்வழக்கை விசாரித்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அப்போது, “பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஏற்பட்ட கடுமையான காயங்களையும், இந்தக் குற்றம் நிகழ்த்தப்பட்ட கொடூரமான முறையையும் கருத்தில் கொண்டு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்கிறது” என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
“இது மிகவும் பயங்கரமாகவும், கொடூரமாகவும் நடத்தப்பட்ட ஒரு கூட்டு பாலியல் வல்லுறவு சம்பவம். அந்தப் பெண்ணை சித்ரவதை செய்து, அவரது பிறப்பு உறுப்பை சிதைத்து, குடல் சேதமடையும் அளவுக்கு இரும்புக் கம்பியால் தாக்கியிருக்கிறார்கள். அந்தப் பெண்ணையும், அவரது நண்பரையும் பேருந்திலேயே சித்ரவதை செய்து, ஆடையின்றி பேருந்திலிருந்து கீழே தள்ளிவிட்டு, பேருந்தை ஏற்றிக் கொல்ல முயற்சித்திருக்கிறார்கள்” என்றும் தங்கள் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ள நீதிபதிகள், “சிறையில் இருந்த காலத்தில் திருந்திவிட்டோம்;தங்களுக்கு இளம் வயதுதான், நாங்கள் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர்கள், பெற்றோரைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறி, அந்தக் காரணங்களால் தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று குற்றவாளிகள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்; ஆனால், அவர்களுக்கு இரக்கம் காட்டக் கூடாது; நாட்டையே உலுக்கிய இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க அவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படத்தான் வேண்டும்” என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மேலும், “அரிதினும் அரிதான வழக்கில்தான் தூக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும்; அதற்கு மிகவும் பொருத்தமான வழக்கு என்றால் அது இதுதான்; இதுபோன்ற வழக்குகளில் கடுமையான தண்டனை வழங்காவிட்டால், மக்களுக்கு நீதித்துறை மீதுள்ள நம்பிக்கை குறைந்துவிடும்” எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ள அவர்கள், “இதுபோன்ற கடுமையான குற்றங்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாததால்தான், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இது வருந்தத்தக்கது;
மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்; ஆணும், பெண்ணும் சமம் என்ற உணர்வை பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும். குழந்தைகளிடம் அந்த மனநிலையை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும்” எனவும் குறிப்பிட்டுள்ளனர்.இதனிடையே, தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் ஏ.பி. சிங், தீர்ப்பைப் படித்த பிறகு, மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
“அந்த குளிர்கால இரவு லேசாக நிர்பயாவுக்கு தெரியப்படுத்தியிருக்கும், அதுதான் அவரின் கொடூரமான கடைசி இரவு என்று; குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட மாணவியையும் அவரது தோழனையும் சாகட்டும் என விட்டுச்சென்றனர்; குற்றவாளிகள் அவரை கொள்ளையிட்டு பகிர்ந்துக் கொண்டனர்; வக்கிர இன்பத்துக்காக அவள் ஒரு பொருளாக பயன்படுத்தப்பட்டாள்; பிசாசு போன்று அவளது கவுரவத்துடன் விளையாடியுள்ளனர்;
இந்தக் குற்றம் சமூதாயத்தின் மீது உள்ள நம்பிக்கையை அழித்து விட்டது; இது நினைத்துக்கூட பார்க்க முடியாத மிருகத்தனமான ஒரு குற்றமாகும்; ஒரு இரும்புக் கம்பியால் பாதிக்கப்பட்டவரின் குடலை சேதப்படுத்தி, அவளின் உடைகளை கிழித்து மிருகத்தனமான பாலியல் வன்கொடுமை அரங்கேறியிருக்கிறது; இது அரிதினும் அரிதானது”.
– உச்ச நீதிமன்ற நீதிபதிகள்
நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உறுதிப் படுத்தப் பட்டுள்ளது. ஏற்கெனவே தில்லி விரைவு நீதிமன்றமும் பின்னர் உயர்நீதிமன்றமும் அளித்த தீர்ப்பு இது. சுனாமி போன்று அதிர்ச்சி அலைகளை உருவாக்கிய குற்றம் என உச்சநீதிமன்றம் பதிவு செய்துள்ளது. மிகக் குரூரமான குற்றம் என்பதோடு, மக்கள் தன்னெழுச்சியாக வீதிக்கு வந்து, வர்மா குழு அமைப்பு, சட்ட திருத்தம் என்று பல முக்கிய எதிர் வினைகளை உருவாக்கிடக் காரணமாக இருந்த குற்றம் இது. இன்றுள்ள சட்டப்படி அதிகபட்ச தண்டனை இது.
கொள்கை அளவில் மரண தண்டனை ஏற்புடையதல்ல என்றாலும் இத்தீர்ப்பு வரவேற்கத்தகுந்தது. குற்றவாளிகள் சிறைக்கு உள்ளே இருந்து அளித்த பேட்டி, அவர்கள் கொஞ்சம் கூட வருந்தவில்லை என்பதையே காட்டியது.
நிர்பயா தான் காரணம்; உடை மற்றும் ஆண் நண்பர், நேரம் காரணம்; பெண்ணின் இடம் வீடு தான்; அவள் எங்களுடன் சண்டை போட்டிருக்க கூடாது என்று அடுக்கினர்.
சமூகத்தின் ஒரு பகுதியும் இதையே சொல்கிறது. நிர்மலா பெரியசாமியும் தான்.
எனவே இத்தண்டனை குற்றவாளிகளுக்கு மட்டும் அல்ல, பெண்ணையே பழி சுமத்தும் ஆணாதிக்க மனப் போக்கிற்கும் தான்.
தமிழக காவல்துறை இந்தத் தீர்ப்பிலிருந்து பாடம் கற்கட்டும். எத்தனை வழக்குகளில் அமைப்புகள் நீதிமன்றத்திற்கு ஓடுவது? எத்தனையில் சிபிசிஐடி கேட்பது? சட்டப்படி நடக்கத் தெரியாதா? காவல்துறைக்கும் இதில் படிப்பினை உண்டு.
அரியலூர் நந்தினி வழக்கும், தில்லி நிர்பயா வழக்கும் குரூரத்தில் எந்த வேறுபாடும் இல்லாதது. அதில் காவல்துறையின் அணுகுமுறை என்ன?
உ.வாசுகி
நிர்பயா வழக்கும் பல்கிஸ்பானு வழக்கும்!
பிருந்தா காரத் கருத்து
நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் வரவேற்றுள்ளார்
“கொள்கை அளவில் மரண தண்டனைக்கு எதிரானவள் நான்; ஆனால், இதுபோன்ற கொடூரமான செயல்களுக்கு மரண தண்டனையானது தேவையானது; நம்முடைய நாட்டில் நீதித்துறைதில் பாரபட்சமான நடைமுறை காணப்படுவதே நான் மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு காரணம் ஆகும்” என்று பிருந்தா காரத் கூறியுள்ளார்.
உதாரணமாக “பில்கிஸ் பானு வழக்கில் நடந்தது என்ன?” என்ற கேள்வியை பிருந்தா காரத் எழுப்பியுள்ளார்.
குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது, பில்கிஸ் பானு என்ற இஸ்லாமியப் பெண்ணை 12 பேர் கொண்ட சங்-பரிவாரக் கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கியது. அப்போது, பில்கிஸ் பானு 5 மாத கர்ப்பிணி. சங்-பரிவாரக் கும்பல் பானுவை வல்லுறவுக்கு உள்ளாக்கியதுடன், அவரது 3 வயது குழந்தை உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை ஒரே இடத்தில் வைத்து படுகொலை செய்தது. இவ்வளவு பெரிய கொடுங்குற்றத்தை இழைத்தவர்களுக்கு ஆயுள் தண்டனை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதையே பிருந்தா காரத் சுட்டிக் காட்டியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.