மும்பை, மே 4 –
குஜராத்தில் மோடி ஆட்சியின் போது, பில்கிஸ் பானு என்ற முஸ்லிம் இளம்பெண்ணின் 3 வயது குழந்தை உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் ஒரே இடத்தில் வைத்து சங்-பரிவாரக் கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர். 6 மாதக் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவும், 12 பேர் கொண்ட சங்-பரிவாரக் கூட்டத்தால், மிகக் கொடூரமான முறையில் கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார்.

இந்த வழக்கில், 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 2008-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியிருந்தது.  இதை எதிர்த்து, குற்றவாளிகள் தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டு, 11 பேருக்குமான ஆயுள் தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில், கடந்த 2002-ஆம் ஆண்டு மோடி முதல்வராக இருந்தபோது, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைக் காரணம் காட்டி, சங்-பரிவாரக் கும்பல் முஸ்லிம் மக்களை நரவேட்டையாடியது. குழந்தைகளைக் கூட தீயில் போட்டு பொசுக்கியது. பெண்கள் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டனர். முஸ்லிம் இளைஞர்கள் என்கவுண்ட்டர் செய்யப்பட்டனர்.

இந்த வன்முறை வெறியாட்டத்தில் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட குடும்பம்தான் பில்கிஸ் பானுவுடையது. குஜராத்தின் தஹோத் மாவட்டத்தைச் சேர்ந்த பில்கிஸ் பானு (19), தனது 3 வயது குழந்தை உட்பட குடும்பத்தினர் 16 பேருடன், சபர்வாத் என்ற இடத்தில் இருந்து பானிவேலா என்ற இடத்தை நோக்கி, கடந்த 2002-ஆம் ஆண்டு மார்ச் 3-ஆம் தேதி பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய சங்-பரிவாரக் கும்பல், பில்கிஸ் பானுவின் 3 வயது குழந்தை உட்பட 14 பேரை அந்த இடத்திலேயே படுகொலை செய்தது.

3 வயது சிறுமி சலீகாவின் தலை கல்லில் அடித்துச் சிதைக்கப்பட்டது. அத்துடன், 6 மாதக் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவையும், 12 பேர் கொண்ட கும்பல் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியது. தனக்கு நேர்ந்த இந்த கொடுமையை மிகத் துணிச்சலுடன் வெளியுலகுக்கு கொ ண்டு வந்த பில்கிஸ் பானு, நீதிகேட்டு நெடியப் போராட்டம் நடத்தினார். காவல்நிலையத்தில் புகார் அளித்து வழக்கும் பதிய வைத்தார். ஆனால், வழக்கை திரும்பப் பெறச் சொல்லி அவருக்கு ஏராளமான மிரட்டல்கள் வந்தன.

ஒருகட்டத்தில், இந்த வழக்கு குஜராத்தில் நடந்தால் விசாரணையில் நியாயம் கிடைக்காது என்பதை உணர்ந்த பானு, வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தை நாடினார். பானுவின் முறையீட்டை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், வழக்கை மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது. அங்கு வழக்கை விசாரித்த மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி யு.டி. சால்வி, கடந்த 2008-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதி தீர்ப்பளித்தார். அதில், பில்கிஸ் பானுவை வல்லுறவுக்கு உள்ளாக்கியது; அவருடைய குடும்பத்தினரை கொலை செய்தது உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டிருப்பதாக கூறிய நீதிபதி, ஜஸ்வந்திபாய், கோவிந்த்பாய், சைலேஷ் பட், ராதீஷாம் ஷா, பிபின் ஜோஷி, கேசர்பாய் கோகானியா, பிரதீப் மோர்தியா, பாஹாபாய் வோஹானியா, ராஜன்பாய் சோனி, நித்தேஷ் பட், ரமேஷ் சந்தனா ஆகிய 12 பேரை குற்றவாளிகள் என்று அறிவித்தார்.

இவர்களுக்கு இந்திய தண்டனைவியல் சட்டம் 302 (கொலை), 120 பி (சதித் திட்டம்), 149 (குற்றம் செய்யும் நோக்குடன் ஒன்று கூடியது), 376 (2) (இ) (ஜி) (கர்ப்பிணியை வல்லுறவுக்கு உள்ளாக்குதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் ஆயுள் தண்டனையும் வழங்கினார். இவர்களில் ஒருவர் இறந்த விட்ட நிலையில், குற்றவாளிகளில் 11 பேர் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதேபோல, குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை போதாது; அவர்களுக்குத் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று சிபிஐ-யும் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

இவ்வழக்குகளை விசாரித்து வந்த மும்பை உயர் நீதிமன்றம், வியாழனன்று தனது தீர்ப்பை வழங்கியது. அதில், பில்கிஸ் பானுவின் வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி, மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதிப்படுத்தியுள்ள உயர் நீதிமன்றம், பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளுக்கு சாதகமாக ஆவணங்களை திருத்திய மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் என புதிதாக 6 பேருக்கு தண்டனை வழங்கியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.