தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் மணல் லாரி உரிமையாளர்கள் மனு ஒன்றை அளித்துள்ளனர்.கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 17 மணல் குவாரிகளும் மூடப்பட்டுவிட்டதால் லட்சக்கணக்கானோருக்கு வேலையில்லாமல் போய்விட்டது எனவும், மூடப்பட்ட குவாரிகளை திறக்க வேண்டுமெனவும் முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதற்கு முதல்வர் என்ன சொன்னார் என்பது குறித்து தகவல் எதுவும் இல்லை.ஆனால் பல ஊடகங்கள் மணல் குவாரி மூடப்பட்டதால் தமிழகமே இருண்டுவிட்டது போன்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். ஒரு பத்திரிகை ‘குவாரி மூடப்பட்டதால் மணல் விலை உயர்வு:’ ‘கட்டுமானப் பணிகள் நிறுத்தம்’ என தலைப்புடன் அதிர வைத்துள்ளது.

இதையொட்டி மௌனம் சாதிக்கும் முதல்வரும்,மணல் அள்ளுவோருக்கு ஆதரவாகப் பேசும் ஊடகங்களும்,நமக்கு சொல்லும் செய்தி என்ன? அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் இருப்போர், மாவட்ட, மாநில அதிகாரிகள், நீடித்த மணல் கொள்ளையால் கொழுத்துப்போன பணமுதலைகள் இணைந்த கூட்டம் தமிழக ஆறுகளில் மணல் அள்ளுவதும், மணலை கடத்தி விற்பதும் தவறில்லை என்ற கருத்தை திட்டமிட்டு பரப்பி வருகின்றன.

இந்த மணல் கொள்ளை பல ஆண்டுகளாக நடந்து வந்துள்ளது.இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்தே குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வந்தன.முன்பெல்லாம் ‘வறட்சியால் குடிநீர் கிடைக்கவில்லை’ என்று மட்டுமே கருதப்பட்ட நிலைமை மாறி,மணல் கொள்ளை நடக்காமல் இருந்தால் வறட்சி காலத்திலும் ஓரளவு தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டிருக்கும் என்ற உண்மை மக்களுக்கு புரிந்தது. இதனால், குடிநீருக்கான கோரிக்கையை முன்வைக்கும்போதே, ‘மணல் கொள்ளையை தடுத்து நிறுத்து என்ற கோரிக்கையையும் மக்கள் முன்வைத்தனர்.

சமீபத்தில்,கரூர் மாவட்டம் கீழ் சிந்தலவாடி கிராம மக்கள் காவிரி கரையோரம் உள்ள மணல் குவாரியை முற்றுகையிட்டு, ஆற்றிலிருந்து மணல் எடுத்து ஸ்டாக் பாயிண்ட்டிற்கு செல்லும் லாரிகளை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.இது போன்ற போராட்டங்கள், கடந்த பல மாதங்களாக, விழுப்புரம் மாவட்டம், தென்பெண்ணையாற்றின் கரையோரத்தில் கிராம மக்களும், காலிக்குடங்களுடன் பல்லாயிரக்கணக்கான பெண்களும் பங்கேற்ற போராட்டங்கள் நடந்தன. இதே போன்று காவிரி டெல்டாவில் உள்ள மணல் குவாரிகளை எதிர்த்து அங்குள்ள கிராம மக்களும் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

மணல் கொள்ளைக்கும் குடிநீர் பற்றாக் குறை பிரச்சனைக்கும் உள்ள தொடர்பு தெளிவானது. மணல் கொள்ளையர்கள் அரசு அனுமதித்த 1 மீட்டர்-2மீட்டர் ஆழத்திற்கு மேல் மணல் அள்ளக் கூடாது என்கிற விதி எதனையும் மதிப்பதில்லை:இருபது,முப்பது அடிக்கும் மேல் ஆழமாக ஆற்றுமணலை தோண்டி,அள்ளிக்கொண்டு செல்கிறார்கள்:இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து போய்,முப்பது அடியில் கிடைத்த தண்ணீர் இப்போது 150 அடிக்கும் கீழே போய்விட்டது. குடிநீர்த் தட்டுப்பாடு தாண்டவமாடுவதும், விவசாயத்துக்கு நீர் இல்லாமல் அந்தப் பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகும் நிலையும் ஏற்படுகிறது.

தென்பெண்ணை ஆறு:
தமிழகத்தின் முக்கிய ஆறான தென் பெண்ணை முக்கியமான தண்ணீர் ஆதாரமாக திகழ்கிறது.தென்பெண்ணையாற்றில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி நகர பகுதியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு நகரப்பொதுமக்களின்  குடிநீர் ஆதாரமாக உள்ளது. தற்போது மணல் கொள்ளையர்களால் தென்பெண்ணையாறு உருக்குலைந்து போன நிலையில் உள்ளது. திருக்கோவிலூர் முதல் கடலூர் மாவட்டத்தின் கடைசி வரைகளிமண்ணை தொடுமளவிற்கு மணல் ஒட்ட சுரண்டி எடுக்கப்பட்டுள்ளதால், தற்போது,

அங்குள்ள கூட்டு குடிநீர் திட்டம் என்பது வரலாற்று சாட்சியங்களாக மாறிவிட்டன.பிடாகம், பேரங்கியூர், திருவெண்ணெய்நல்லூர் போன்ற பல பகுதியில் அளவுக்கு மீறி மணல் சுரண்டப்பட்டு விட்டதால் ஆறு காணாமல் போயுள்ள பரிதாபம் நிகழ்ந்துள்ளது.இருப்பதையாவது பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக மீண்டும் மணல் குவாரிக்கு அனுமதி கொடுத்து, மேலும் கொள்ளையடிக்க திட்டமிட்டு வருகின்றனர்.

தென்பெண்ணை ஆற்றிலிருந்து ஏராளமான கிளை ஆறுகள், ஏரி, குளங்கள் தண்ணீர் பெறுகின்றன.இந்தப் பகுதிகளில் குடிநீர் தேவைக்கு அவை பயன்பட்டு வந்தன.பருவமழை பொய்த்ததாலும், மணல் கொள்ளை காரணமாகவும்,நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது.இதனால் குடிநீருக்குக்கூட தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

வழக்கமாக,கோடையில், விழுப்புரம், கடலூர் மாவட்டத்திற்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும். அவ்வாறு, இந்த ஆண்டு திறந்துவிட்ட போது, வந்த தண்ணீர் மணல் தோண்டப்பட்ட பள்ளங்களிலேயே தேங்கி, விழுப்புரத்திற்கே வந்துசேரவில்லை.இதனால் அந்த நகரத்திலும் இதர பகுதிகளுக்கும் குடிநீர் பஞ்சம் தீராமல் நீடிக்கிறது.

ருசி கண்ட பூனைகள்:
இந்த அளவில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடினாலும்,எப்படியாவது மூடப்பட்ட குவாரிகளை மீண்டும் திறக்க வைக்க,ஏன் முயற்சிக்கின்றனர்?இவர்கள் ருசி கண்ட பூனைகள்! விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது மூடப்பட்ட கப்பூர் பகுதியில் இருந்த மணல் விற்பனை நிலையத்தில் பொதுப்பணித்துறையிடம் ஒரு யூனிட் மணல் ரூ.575க்கு வாங்கி ரூ.2 ஆயிரத்திற்கு மறுவிற்பனை நடந்து வந்துள்ளது. அரசு விதிகளை மீறிமுறைகேடாக ஆற்றிலிருந்து மணல் அதிக அளவில் கொண்டு வரப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.

பொதுப்பணித்துறை, வருவாய்த் துறையினர் ‘ஆசியோடு’ நடந்து வந்துள்ள மணல் விற்பனையால்,கோடிகோடியாக பண ஆதாயம் அடைந்த கூட்டம் சும்மா இருக்குமா? சட்ட விரோதமாக நடந்து வரும் மணல் கொள்ளையால் அரசுக்கு வருமான இழப்பு எவ்வளவு?ஆண்டுதோறும் சுமார் 20 ஆயிரம் கோடி இருக்கக்கூடும் என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.இந்தப் பணம் அனைத்தையும் மணல் கொள்ளையர்கள் சுருட்டிக்கொள்கின்றனர். மணல் விலையை அதிகம் வைத்து விற்பது மட்டுமல்ல;எடுக்கப்படும் மணலின் அளவும் பணம் சுருட்ட உதவுகிறது.காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் தான் மண் எடுக்க‘வேண்டிய நேரம் என்று அரசு விதி பேசுகிறது.

ஆனால்,எப்போது வேண்டுமானாலும் வரைமுறையில்லாமல் மண்ணை வெட்டி எடுப்பதுதான் மணல் கொள்ளையர்களின் அன்றாட வாடிக்கை.அதே போன்று, இரண்டு ஜேசிபி வாகனம்தான் ஆற்றில் மணல் அள்ளவேண்டும் என்பது அரசு விதி . ஆனால், பல இடங்களில் பத்துக்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்களை வைத்து மணல் அள்ளுவதுதான் மணல் கொள்ளையர்கள் வகுத்துக் கொண்ட விதி. அரசாங்க உத்தரவுகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, மேல்மட்டத்திலிருந்து, கீழ்மட்டம் வரை அனைவரையும் தங்களது பணபலத்தால் காலடியில் விழுந்து கிடக்க வைத்து, ஒரு சாம்ராஜ்யத்தையே நடத்திவருபவர்கள்தான் மணல் கொள்ளையர்கள்.

சுற்றுச்சூழல் பாதிப்பு:
தமிழகத்தில் தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்ட மக்களின் குடிநீர், விவசாய தேவைக்கு தென்பெண்ணையாறு முக்கிய ஆதாரமாக உள்ளது. விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு தென்பெண்ணையாறுதான் அடிப்படை ஆதாரமாக இருந்து வந்துள்ளது. தமிழகத்தில் 247 கிலோ மீட்டர் தூரம் செல்லும் பெண்ணையாறு மேம்பட்ட மண் வளம் கொண்டது.இதனால்தான் இந்த வளத்தை முடிந்தவரை சுரண்டி தங்களது பணமூட்டைகளை மேலும் பெருக்கிக் கொள்ள முயல்கின்றனர்.

எந்த வரன்முறையும் இல்லாமல் அதிக மணல் அள்ளுவது, சுற்றுச்சூழலையும் பாதிக்கும் என மனோஜ் மிஸ்ரா எனும் ஆய்வாளர் குறிப்பிட்டார். ‘திட்டமிடாமல் தொடர்ச்சியாக, ஆற்றிலிருந்து மணலை எடுத்தால், அங்கு வாழும் பல நுண்ணிய உயிரினங்கள் அழிந்துபோகும்.இந்த வகை உயிரினங்கள் கண்ணுக்குத் தெரியாத அளவில் நுண்ணியதாக இருந்தாலும், மண் தரத்திற்கும்,மண் வளத்திற்கும் ஆதாரமாக இருப்பவை.மணலை ஆழமாக தோண்டி எடுக்கிற போது அந்தப் பணியுடன் உயிரினங்கள் அழிவும் சேர்ந்தே நடக்கிறது.’ பணமே குறியாக இருக்கும் மணல் கொள்ளையர்கள் கண்டு கொள்ளாமல் இருக்கலாம்;ஆனால் பொதுமக்கள் விழிப்படைய வேண்டும்.

ஆறு, தண்ணீர், மணல் உள்ளிட்ட இயற்கை வழங்கியுள்ள அனைத்து வளங்களையும் சந்தைப் பொருளாக மாற்றி இலாப வேட்டை நடத்துவது முதலாளித்துவம். அந்த இலாப வேட்டைக்கு பக்கபலமாக இருப்பது நரேந்திர மோடியிலிருந்து எடப்பாடி வரையுள்ள ஆளும் கூட்டம்.மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதில் முனைப்புடன் செயல்படும் அந்த முதலாளித்துவ சக்திகளை சந்திக்க வலுவான மக்கள் இயக்கமே ஒரே தீர்வு.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களோடு இணைந்து மணல் காக்கும் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.கடந்த மாதம் தென்பெண்ணை ஆற்றில் நடக்கும் சட்ட விரோத மணல் அள்ளும் இடங்களை நேரடியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆய்வு செய்து,மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள குவாரிகளை தடை செய்ய வேண்டுமென கோரிக்கை எழுப்பி, போராட்ட அறிவிப்பையும் வெளியிட்டது.அதன் பின்னர் கப்பூர் விற்பனை நிலையம் மூடப்பட்டது.

பிறகு கீழக்கொண்டூர் கிராமத்தில் இயங்கி வந்த அரசு குவாரியும் மூடப்பட்டது.இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி. குறிப்பிட்ட இடங்களில் மணல் அள்ளுவதை முற்றாக நிறுத்தவும்,குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கக்கோரியும், மே 4 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் திருக்கோயிலூரில் நடைபெறுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.