லக்னோ, மே 2 –
காயமடையும் மற்றும் நோய்வாய்ப்படும் பசுக்களுக்காக உத்தரப்பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. முதன்முதலாக, லக்னோவில் உள்ள கேசவ் பிரசாத்தின் அரசு இல்லத்தில் 5 ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவை யை, உத்தரப்பிரதேசத்தின் துணை முதல்வரான கேசவ் பிரசாத் மவுர்யா, திங்கட்கிழமையன்று கொடியசைத்துத் துவங்கி வைத்தார். ஒவ்வொரு ஆம்புலன்ஸிலும் ஒரு கால்நடை மருத்துவரோடு, ஓர் உதவியாளரும் இருப்பார். முதற்கட்டமாக லக்னோ, கோரக்பூர், வாரணாசி, மதுரா மற்றும் அலகாபாத்தில் பசு ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்படுகிறது.

பசு சேவைக்காக ‘டோல் ப்ரீ’ எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அந்த எண்ணைத் தொடர்பு கொண்டு, காயமடைந்த, நோயுற்ற பசுக்கள் ஆம்புலன்ஸ் மூலம் கோ சாலைகளுக்கோ, கால்நடை மருத்துவமனைக்கோ கொண்டு செல்லப்படுவதற்கு உதவலாம். அரசின் இத்திட்டத்தை செயல்படுத்தும் பணி, தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்த நிறுவனத்தின் தலைவரான சஞ்சய் ராம் என்பவர், தற்போதே பொதுமக்களுக்கு மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார்.

“பசுவின் பால் மடி வற்றியவுடன், அவற்றை விரட்டி விடுவோருக்கும், பாலிதீன், பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்து பசுக்களை உண்ணச் செய்யும் மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானித்திருக்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான மத்தியப் பிரதேசத்திலும் கார்கோன் என்னும் மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்புதான் இதேபோல பசு ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அது உத்தரப்பிரதேசத்திற்கும் விரிவுபடுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.