புதுதில்லி;
டிடிவி தினகரனை மே 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
‘இரட்டை இலை’ சின்னம் பெறுவதற்காக தேர்தல் அதிகாரிகளுக்கு ரூ. 50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை தில்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனாவையும் கைது செய்த அவர்கள், இருவரையும் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர்.
சென்னை அடையாற்றில் உள்ள டிடிவி தினகரனின் இல்லம், அண்ணா நகரிலுள்ள மல்லிகார்ஜூனாவின் இல்லம், பெசன்ட் நகரிலுள்ள ராஜாஜி பவன் ஆகிய இடங்களுக்கும் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
தினகரனின் மனைவி அனுராதாவிடமும் விசாரணை நடத்திய தில்லி காவல்துறையினர், சென்னை ஆதம்பாக்கம், கொளப்பாக்கம், திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று, அங்கு சிலரை விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி சம்மன் அளித்தனர்.
3 நாட்களாக நடைபெற்ற இந்த விசாரணைக்குப் பின், டிடிவி தினகரனையும், மல்லிகார்ஜூனாவையும் சனிக்கிழமையன்று இரவு மீண்டும் தில்லிக்கு அழைத்துச் சென்றனர்.
இதனிடையே, ரூ. 50 கோடி லஞ்சப் பணத்தை கொச்சி வழியாக தில்லியில் சுரேஷ் சந்திரசேகரிடம் கொண்டு சேர்த்ததாக கூறப்படும் ஹவாலா ஏஜெண்ட் நரேஷ், தில்லி காவல்துறையிடம் பிடிபட்டார்.
அவரது வீடு அலுவலகத்தில் நடத்திய சோதனையில் ரூ. 50 லட்சம் பணம் சிக்கியது. விசாரணையில், அந்த பணம் தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க டிடிவி தினகரன் அளித்ததில் மீதிப் பணம் என்று நரேஷ் தெரிவித்ததாக கூறப்பட்டது.
இதையடுத்து டிடிவி தினகரன் முன்னிலையில் ஹவாலா ஏஜெண்ட் நரேஷை வைத்து நேரடியாக விசாரணை நடத்தினர். அப்போது அந்தப் பணம், தான் கொடுத்து அனுப்பியதுதான் என்பதை டிடிவி தினகரன் ஒப்புக் கொண்டதாக கூறும் காவல்துறையினர், அதன்பேரில் பாரத ஸ்டேட் வங்கியில் இருந்த தினகரனின் 5 வங்கிக் கணக்குகளை முடக்கி வைத்தனர்.
வங்கிகள் மூலம் தினகரன் யார்-யாருக்கு பணம் பட்டுவாடா செய்துள்ளார். எந்த வகையில் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது என்ற விவரத்தையும் சேகரிக்கும் பணியைத் துவக்கினர்.
டிடிவி தினகரன், மல்லிகார்ஜூனாவுக்கு தில்லி நீதிமன்றம் வழங்கியுள்ள 5 நாள் போலீஸ் காவல் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்ததையொட்டி, காவல்துறையினர் அவர்களை மீண்டும் திங்கட்கிழமையன்று தில்லி நீதிமன்றத்தில் நீதிபதி பூனம் சவுத்ரி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
அப்போது, டிடிவி தினகரனையும், மல்லிகார்ஜூனாவையும் மே 15 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இவர்களின் காவலை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்து விட்ட நீதிபதி காணொலி காட்சி மூலம் தினகரனை விசாரிக்க அனுமதி வழங்கியது.
இதையடுத்து டிடிவி தினகரன் தில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

You must be logged in to post a comment.