சென்னை, மே 1 –
தன்னைப் பற்றி அவதூறு பரப்பி வரும், பாஜக தேசியச் செயலர் எச். ராஜாவுக்கு, விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்று அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.

பாஜக-வின் தேசிய செயலர் ஹெச். ராஜா தொடர்ந்து தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி வருகிறார். ஏதோ ஒரு ஊர்வலத்தில் பின்லேடன் படம் எடுத்து செல்லப்பட்டதைக் காட்டி, அது ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது நடந்ததாக பொய்யை பரப்பினார். நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் போராட்டப் பின்னணியில் பாகிஸ் தான் இருக்கிறது; மாவோயிஸ்டுகள் இருக்கிறார்கள் என்றெல்லாம் புதுப்புது கதைகளை உருவாக்கினார்.

மோடி அரசுக்கு எதிராக தில்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராடியபோது, அய்யாக்கண்ணுவுக்கு, 200 ஏக்கர் நிலமும், ஆடி காரும் இருக்கிறது என்றார். 200 ஏக்கரும், ஆடி காரும் இருப்பதை நிரூபித்தால் நான் தூக்கில் தொங்குகிறேன் இல்லாவிட்டால் எச். ராஜா தூக்கில் தொங்கத் தயாரா?என்று அய்யாக்கண்ணு கேட்டதும் அமைதியானார். தற்போது, அய்யாக்கண்ணுவுக்கும் தீவிரவாதி அப்சல்குருவுக்கும் தொடர்பு இருக்கிறது என்று உளறி இருப்பதுடன், அய்யாக் கண்ணுவை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில், தன் மீதான எச். ராஜாவின் விமர்சனங்களுக்கு அய்யாக்கண்ணு பதிலடி கொடுத்துள்ளார். ‘எச். ராஜா வெளிமாநிலத்தில் இருந்து வருவாரு.. இங்க எதை வேணும்னாலும் பேசுவாரு… தமிழ் நாட்டுல இருக்கிறவங்க எல்லாம் இளிச்சவாயங்க.. காதுல பூ சுத்தி இருக்காங்கன்னு நினைக்கிறாரா?; பாரதிய கிஷான் சங்கத்தில் நாங்கள் இருந்தபோது யோக்கியர்கள்… அதைவிட்டு வெளியே வந்துவிட்டதால் நாங்கள் அயோக்கியர்களா? என்னய்யா நாட்டுல அக்கிரமம்… தவறாக, கேவலமாக பேசுவதை எச்.ராஜா நிறுத்திக் கொள்ள வேண்டும்; நான் போய் எச்.ராஜா வீட்டில் 25 வருஷமாக படுத்திருந்தேன்னு சொல்றாரே… அதுக்கு என்ன அர்த்தம்? கேவலமாக பேசுகிறார் எச். ராஜா; அளந்து பேசுங்க… சாது மிரண்டால் காடு கொள்ளாது’ இவ்வாறு அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.