சென்னை:  அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் பணி நீக்கம் செய்யப்படுவர் என்ற தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குநரின் சுற்றறிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித் துள்ளது.
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2010 ஆகஸ்ட் 23 முதல் நடை முறைக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில் 2011 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் 2011க்கு முன்பு பணியில் சேர்ந்தவர்கள் மூன்று ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதன் பிறகு 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை தகுதித் தேர்வு நடந்துள்ளது. மூன்று ஆண்டுகள் கழித்து தமிழகம் முழுவதும் கடந்த 29, 30ம் தேதிகளில் தகுதித் தேர்வு நடைபெற்றது.
இதற்கிடையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் கடந்த மார்ச் 1ஆம் தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘‘ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணிபுரிவோருக்கு இந்தத் தேர்வு கடைசி வாய்ப்பு. இந்த தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் பணி நீக்கம் செய்யப்படுவர்’’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கைக்கு தடை விதிக்கவும், அதை ரத்து செய்து, தங்களை ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும்படி கட்டாயப்படுத்த கூடாது என உத்தரவிடவும் கோரி சென்னை திருவேற்காடு எஸ்கேடிஜெ மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் சத்தியமூர்த்தி என்பர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜா சுற்ற றிக்கைக்கு இடைக்கால தடை விதித்த வழக்கு விசாரணையை ஜூன் இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.