திருச்சிராப்பள்ளி, ஏப். 28 –
பயிர்க் கடனை ஜூன் 16-ஆம் தேதிக்குள் வட்டியுடன் செலுத்தாவிட்டால் விளைநிலங்கள், வீடுகள் பறிமுதல் செய்யப்படும் என திருச்சி விவசாயிகளுக்கு பாரத ஸ்டேட் வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திருச்சி மாவட்டம் குழுமணி, மேக்குடி, கோப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், பாரத ஸ்டேட் வங்கியில் கடந்த 2013-ஆம் ஆண்டு பயிர்க்கடன் பெற்றிருந்தனர். ஆனால் விவசாயம் தொடர்ந்து பொய்த்துப் போனதன் காரணமாக அவர்களால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதையடுத்து கடனை திருப்பிச் செலுத்தக்கோரி 6 விவசாயிகளுக்கு நீதிமன்றம் மூலம் எஸ்.பி.ஐ. வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் ஜூன் 16-ஆம் தேதிக்குள் வாங்கிய கடனை வட்டியுடன் செலுத்தாவிட்டால் விளை நிலங்கள், வீடுகள் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் வெள்ளிக்கிழமையன்று திருச்சி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து முறையிட்டனர். அப்போது, பாலமுத்து என்ற விவசாயி கூறியதாவது:‘நான் எஸ்.பி.ஐ. வங்கியில் கடந்த 2013 ஆம் ஆண்டு ரூ. 2 லட்சம் பயிர்க்கடன் வாங்கினேன்; ஆனால் தற்போது வட்டியுடன் சேர்த்து ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும் என்று எஸ்.பி.ஐ. வங்கி நீதிமன்றம் மூலம் சம்மன் அனுப்பியுள்ளது; ஜூன் 16 ஆம் தேதிக்குள் செலுத்தாவிட்டால் விளை நிலங்கள், வீடுகளை பறிமுதல் செய்வதாகவும் தெரிவித்துள்ளது; வறட்சியின் காரணமாக எங்களால் எந்த பயிரும் விளைவிக்க முடியவில்லை; இதன் காரண மாகவே வங்கிக் கடனையும் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது; இது பற்றி அரசிடம் முறையிட்டதோடு, பல்வேறு போராட்டங்களையும் நடத்தியுள்ளோம்;

ஆனால் அதனையெல்லாம் பொருட்படுத்தா மல் கடனைச் செலுத்தக்கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்; மேலும் வங்கி அதிகாரி கள் எங்களை தரக்குறைவாக பேசுகின்றனர்; இதுகுறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 142 ஆண்டுகளில் இல்லாத வறட்சி காரணமாக தமிழகத்தில் ஓராண்டில் 400 விவசாயிகள் உயிரை இழந்துள்ளனர். விவசாயிகள் மரணத்தை தடுக்க வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், வங்கிக் கடனை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் தில்லி வரை சென்று போராட்டம் நடத்தினர்.

அவர்களுக்கு ஆதரவாக கடந்த 25-ஆம் தேதி தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேலைநிறுத்தம் மற்றும் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில்தான் 6 விவசாயிகளின் நிலம், வீடுகளை பறிமுதல் செய்யப் போவ தாக எஸ்.பி.ஐ. வங்கி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது இது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.