புதுதில்லி, ஏப். 28 –
காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டு மெனில், பெல்லட் குண்டு தாக்குதல், கல் வீச்சு இரண்டுமே நிறுத்தப்பட்டாக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ‘இரண்டு கைகளும் சேர்ந்து தட்டி னால்தான் ஓசை வரும்’ என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

காஷ்மீரில் போராட்டம் நடத்தும் பொது மக்கள் மீது, ராணுவத்தினர் பெல்லட் குண்டுகளை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்து வதற்கு தடை விதிக்கக் கோரி, ஜம்மு – காஷ்மீர் மாநில உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களின் பார் அசோசியேசன் கவுன்சில் சார்பில், அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பெல்லட் குண்டுகளுக்கு மாற்றாக வேறு உபகரணங்களை பயன்படுத்துவது பற்றி ஆய்வு செய்வதற்கு மத்திய அரசு குழு அமை த்துள்ளதால், பார் அசோசியேசனின் மனுவை விசாரிக்க முடியாது என்று கூறி, அதனை கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி ஜம்மு – காஷ்மீர் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனையடுத்து பார் கவுன்சில் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றம் இம்மேல்முறையீட்டு மனுவை ஏற்று விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், ஒய். சந்திர சூட், சஞ்சய் கிஷன் கவுல் அமர்வு முன்பு, பார் கவுன்சிலின் மனு வெள்ளி யன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘காஷ்மீர் தெருக்களில் பெல்லட் குண்டு பிரயோகமும், கல் வீச்சு சம்பவங்களும் நிறுத்தப்பட்டாக வேண்டும்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கூறும்போது, அனைவருக்கும் கல்வி அளிப்பதும், வேலை யில்லாத் திண்டாட்டத்தை போக்குவதும்தான் காஷ்மீர் தெருக்களில் பொங்கும் கோபத்திற்கு தீர்வாக இருக்க முடியும் என்று கூறினார்.அதற்கு, ‘ராணுவத்தினர், பள்ளிகளிலும் கல்லூரி வளாகங்களிலும் புகுந்து மாணவர்களை அடிக்கின்றனரே, என்ன செய்வது?’ என்று ஜம்மு – காஷ்மீர் உயர்நீதிமன்ற பார் கவுன்சில் தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.

‘மாணவர்களை அடித்தால் அவர்கள் தெருவில் இறங்கி போராடவே செய்வார்கள்; கல்வீச்சு என்பது ஒரு எதிர்வினை; காஷ்மீர் மக்களிடம் மத்திய அரசு பேசத் தவறி விட்டது; தடையற்ற, நிபந்தனையற்ற பேச்சு வார்த்தையே காஷ்மீர் மக்களின் விருப்பம்’ என்றும் அவர் தெரிவித்தார்.இதற்கு பதில் அளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ‘முதலில், இந்த வழக்கின் மனுதாரரான பார் அசோசியேசன், சம்பந்தப்பட்ட வர்கள் வன்முறையைக் கைவிடுவதாக நீதிம ன்றத்தில் உறுதியளிக்க வேண்டும்’ என்றனர்.‘மே 9-ஆம் தேதி விசாரணையின்போது, இதுதொடர்பாக உறுதிமொழிகள் பதிவு செய்யப்பட்டால், ராணுவத்தினரை 15 நாட்களுக்காவது விலக்கிக் கொள்ளுமாறு மத்திய அரசிடம் நீதிமன்றம் அறிவுறுத்த முடியும்; இருதரப்பினருமே முக்கிய பிரச்சனைகளை பேச வேண்டும்; இரு கைகளையும் தட்டினால்தான் ஓசை வரும்’ என்று நீதிபதி கவுல் தெரிவித்தார்.

‘தொடர்ந்து கல்வீச்சு நடக்கும்; பள்ளிகள் மூடப்படும் என்றால் பேச்சு வார்த்தை எப்படி சாத்தியம்? எனவே, முதலில் பேச்சுவார்த்தை நடத்துங்கள்; அந்த பேச்சுவார்த்தைகள் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டதாகவும் இருக்க வேண்டும்’ என்று தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தெரிவித்தார்.  அப்போது, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி ‘பிரிவினைவாதத் தலைவர்களுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்த முடியாது’ என்றார். ‘காஷ்மீர் பிரச்சனையை இந்தியா – பாகிஸ்தான் பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்’ என்று பார் அசோசியேசன் தரப்பினர் கூறுவதை சுட்டிக்காட்டி இவ்வாறு அவர் கூறினார். ‘ஒட்டு மொத்த மாநிலமும் அரச பயங்கர வாதத்தில் சிக்கியுள்ளது’ என்ற பார் அசோசி யேசனின் குற்றச்சாட்டையும் ரோத்கி ஆட்சேபித்தார்.

‘பிரதமரையும், காஷ்மீர் முதல்வரையும் சந்திப்பதிலிருந்து பார் அசோசியேசன் தரப்பினரை யார் தடுத்தது?’ என்றும் கேள்வி யெழுப்பிய ரோத்கி, பேச்சுவார்த்தைகளை காஷ்மீரில் உள்ள அரசியல் தலைவர்கள்தான் முன்னெடுக்க வேண்டும்; பதிவு செய்யப்பட்ட அம்மாநில அரசியல் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது, நீதிமன்றத்தில் அல்ல’ என்றும் கூறினார். அதற்கு பார் அசோசியேசன் தரப்பில் அளித்த பதிலில், ‘தங்களுக்கு காஷ்மீர் பிரிவி னைவாத தலைவர்களிடம் தொடர்பில்லை; எனவே, நீதிமன்றத்தில் கூறும் விஷயங்களை தங்களால் அவர்களிடம் கொண்டு செல்ல முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டது. காஷ்மீர் பிரச்சனையில் பார் அசோசியேசனும் ஒரு தரப்பாக வந்த பிறகு, பின் வாங்க முடியாது என்று நீதிபதி சந்திர சூட் சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மே 9-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அப்போது, காஷ்மீர் தெருக்களில் நடக்கும் கல் வீச்சு, வன்முறை உள்ளிட்ட பிரச்சனையை தீர்ப்பது தொடர்பாக, சம்பந்தப் பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அதனடிப்படையிலான தங்களின் பரிந்துரை களுடன் பார் அசோசியேசன் வரவேண்டும்; காஷ்மீரின் பிரதிநிதி தாங்கள் அல்ல பார் அசோசியேசன் ஒதுக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.