திருச்சிராப்பள்ளி,ஏப்.28-
கடும் வறட்சியால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளதால் கல்விநிறு வனங்களின் கட்டணத்தில் 50 சதவீதம் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மே 23 அன்று தமிழகம் முழுவதும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திருச்சியில் நடைபெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் திருச்சி வெண்மணி இல்லத்தில் வெள்ளியன்று மாநிலத் தலைவர் செந்தில் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலச் செய லாளர் பாலா மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளுக்கு அருகில் உள்ள மதுபானக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு மதுபானக் கடைகளை மூடுவதற்கு பதிலாக மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாக பெயர் மாற்றம் செய்து மதுபானக்கடைகளை தொடர்ந்து நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் இத்தகைய செயல் களை கைவிட்டு மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள மதுபான கடைகளை உடனடி யாக மூட வேண்டும். மேலும் கிராமங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்காக நடைபெறும் முயற்சிகளை கண்டித்து தமிழகம் முழுவதும் மக்கள் போராடி வருகின்றனர். இத்தகைய போராட்டங்களை காவல் துறையை பயன்படுத்தி நசுக்குவதற்கு பதிலாக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு புதிய டாஸ்மாக் கடைகளை திறக்கும் முயற்சிகளை தமிழக அரசு கைவிட வேண்டும். தமிழக மாணவர்களை பாதிக்கும் நீட்தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்காக தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறை வேற்றிய சட்டமசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருக் கின்றது. இந்த சட்ட மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். அதற்கு உறுதியான நடவடிக்கைகளை மத்திய- மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான குடிநீர் தட்டுப் பாட்டை போக்க அனைத்து பகுதிகளிலும் அவரசகால நடவடிக்கை மேற்கொண்டு குடிநீர் தட்டுப் பாட்டை போக்க வேண்டும். எவ்வித வரைமுறையும் இல்லா மல் காவிரி ஆற்றில் மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலை தொடர்ந்தால் காவிரி ஆற்றை பாதுகாக்க முடியாத சூழல் ஏற்படும். எனவே மணல் கொள்ளையை தடுக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கடும் வறட்சியால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளதால் கல்விநிறு வனங்களின் கட்டணத்தில் 50 சதவீதம் குறைக்க வேண்டும். கட்டாயக்கல்வி உரிமைச்சட்டப்படி ஏழை மாணவர்களுக்கு தனியார் கல்விநிறுவனங்களில் 25 சதவீத இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி மே 23 அன்று மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.