சென்னை;
தொழில்நுட்ப கோளாறு காரணமாக, காலதாமதமாக விண்ணப்பித்த மாணவர்களையும் ‘நீட்’ தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை செயல்படுத்தாவிட்டால், சிபிஎஸ்இ இயக்குநர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முகுந்தன் உள்ளிட்ட 38 மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

அதில், “மருத்துவ படிப்பிற்கான தகுதி மற்றும் நுழைவுத்தேர்வான ‘நீட்’ தேர்வு தமிழக மாணவர்களுக்கு உண்டா? இல்லையா? என்பது தெரியாத நிலையில் கடைசி நாளில் ஆன்-லைன் மூலமாக விண்ணப்பித்தோம்; ஆனால், எங்கள் பகுதியில் உள்ள இணையதளம் தொழில்நுட்ப கோளாறினால், எங்களது விண்ணப்பம் காலதாமதமாக சென்றுள்ளது; இதனால், எங்களது விண்ணப்பங்கள், ‘நீட்’ தேர்வை நடத்தும் சிபிஎஸ்சி இயக்குநர் அலுவலகத்துக்கு சென்றதா? என்று தெரியவில்லை;

அங்கிருந்து எந்த தகவலும் இதுவரை வரவில்லை; தொழில்நுட்ப கோளாறு காரணமாகத்தான் எங்களது விண்ணப்பம் காலதாமதமாக சென்றுள்ளது; எனவே, எங்களது விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டு, நடைபெற உள்ள ‘நீட்’ தேர்வில் எங்களையும் அனுமதிக்க சிபிஎஸ்சி. இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

இந்த மனு நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, “ ஆன்லைன் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத்தான் 38 மாணவர்களின் விண்ணப்பங்கள், குறித்த நேரத்திற்குள் சென்றடையவில்லை என்று தெரியவந்துள்ளது; எனவே, காலதாமதமாக விண்ணப்பித்த 38 மாணவர்களின் விண்ணப்பத்தை ஏற்று, அவர்களை ‘நீட்’ தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்” என்று நீதிபதி புஷ்பா சத்யநாராயணா உத்தரவிட்டார்.

“அவ்வாறு அனுமதிக்கவில்லை எனில் சிபிஎஸ்இ இயக்குநருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும்; சிபிஎஸ்சி இயக்குநர், நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராக வேண்டியது இருக்கும்” என்றும் அவர் எச்சரித்தார்.

மே 7-ல் ‘நீட்’ தேர்வு;                                                                                                                                                                              நாடு முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில், இளநிலை படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் தகுதி மற்?றும் பொது நுழைவுத்தேர்வு மாணவர்களை எழுத வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதனடிப்படையில், மே 7-ஆம் தேதி ‘நீட்’ நடைபெறவுள்ளது.
இத்தேர்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கடந்த மார்ச் 1-ஆம் தேதியுடன் விண்ணப்பம் செய்வதற்கான கால கெடு முடிந்தது.

25 வயதுக்கு மேற்பட்டோர் ‘நீட்’ தேர்வு எழுத விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனன் அடிப்படையில், ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை கூடுதலாக ஐந்து நாட்கள் நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, ஏப்ரல் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை நீட் நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பித்தனர். அப்போது, இணையதள தொழில்நுட்ப கோளாறு காரணமாக பலர் விண்ணப்பிக்க முடியாமல் போனது. அவர்களில் 38 பேர்தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தற்போது தேர்வு எழுதுவதற்கான உத்தரவை பெற்றுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: