திருப்பூர்,
திருப்பூர் அருகே முதலிபாளையம் ஊராட்சி சிட்கோ பஸ் நிறுத்தம் அருகில் இருந்த டாஸ்மாக் மதுபானக் கடையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய மக்கள், மதுபான கூடத்தை (பார்) அடித்து நொறுக்கினர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்பட சுமார் 200 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர் ஒன்றியம் முதலிபாளையம் ஊராட்சியில் டெக்கிக் எனப்படும் சிட்கோ தொழிற்பேட்டை அமைந்திருக்கிறது. இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த பகுதியில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சிட்கோ பஸ் நிறுத்தம் அருகில் பிரதான சாலையில் டாஸ்மாக் கடை எண் 2307 செயல்பட்டு வருகிறது. நீதிமன்ற உத்தரவினால் சுற்று வட்டாரத்தில் மூன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில், இந்த கடைக்கு அதிக அளவில் கூட்டம் வருகிறது.
 அதிகரிக்கும் துன்ப துயரம்
 குறிப்பாக முதலிபாளையம் ஊராட்சியின் நுழைவுப் பகுதியாக இருக்கும் சிக்டோ பஸ்நிறுத்தத்தில் பெண்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வரும் நிலையில், இந்த மதுபானக் கடையில் குடித்துவிட்டு பலர் தொடர்ந்து ரகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. அத்துடன் குடிபோதையில் இருப்போர் அரை நிர்வாண கோலத்திலும், ஆபாசமாகப் பேசி கூச்சலிட்டும் இப்பகுதி மக்களுக்கு பெரும் இன்னல் ஏற்படுத்தி வந்தனர் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
அத்துடன் விதிமுறைக்குப் புறம்பாக இரவு, பகல், அதிகாலை என 24 மணி நேரமும் இங்கு மது விற்பனை செய்யப்படுகிறது. பார் உரிமையாளரிடம் முறையிட்டால் அவர் அராஜகமான முறையில் மிரட்டுவதாகவும், என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்வாராம். மது குடிக்க வருவோரிடம் விலை உயர்ந்த செல்போன்களைப் பறித்துக் கொள்வது, தாறுமாறான விலை வைத்து மதுபானம் விற்பனை செய்வது என இங்கு நடைபெறும் அத்துமீறல்கள் ஏராளம் என்று மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் 2307 எண் டாஸ்மாக் கடையை இங்கிருந்து அகற்ற வலியுறுத்தி புதன்கிழமை அனைத்துக் கட்சியினர், பொது மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி சிட்கோ பேருந்து நிறுத்தம் அருகில் ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட பொது மக்கள் அங்கு திரண்டனர். பக்கத்திலேயே டாஸ்மாக் கடைக்கும், பாருக்கும் தடுப்பரண்கள் அமைத்து ஊத்துக்குளி காவலர்கள் பாதுகாப்புப் போட்டிருந்தனர்.
 சாலை மறியல்
 டாஸ்மாக் கடையை எதிர்த்து முழக்கம் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டோர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் ஊராட்சித் தலைவர் விஸ்வலிங்கசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மணி என்கிற முருகசாமி உள்பட அனைத்துக் கட்சியினர் இதில் பங்கேற்றனர்.
ஏற்கனவே இந்த கடையினால் இப்பகுதி மக்களுக்கும், பெண்கள், குழந்தைகளுக்கும் இன்னல்கள் அதிகரித்திருக்கும் நிலையில், தினமும் இக்கடையில் கூட்டம் அலைமோதுவதால் மாலை நேரங்களில் வாகனங்கள் செல்லமுடியாத அளவுக்குப் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது. எனவே இக்கடையை அகற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது. ஏற்கெனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டமும் நடத்தப்பட்டது. அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் 15 நாட்களில் கடையை அப்புறப்படுத்துவதாக உறுதியளித்தனர். ஆனால் தொடர்ந்து இந்த கடை நடத்தப்பட்டு வருகிறது. எனவே உடனடியாக இந்த கடையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். இது குறித்து டாஸ்மாக் உதவி மேலாளர் குணசேகரன் பேச்சுவார்த்தை நடத்த அங்கு வந்தார்.
 பெண்கள் கொந்தளிப்பு
 இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், இளைஞர்கள் கோபாவேசத்துடன் டாஸ்மாக் கடையையும், பாரையும் முற்றுகையிட்டனர். அங்கு போடப்பட்டிருந்த தடுப்பரண்களை தூக்கி வீசினர். டாஸ்மாக் கடை பெயர்ப்பலகையை உடைத்து எறிந்தனர். கடையின் முகப்பில் போடப்பட்டிருந்த மேற்கூரையை பெண்கள் இழுத்து கீழே தள்ளினர்.பாருக்கு முன்பாக தடுப்பரண்களை உடைத்துக் கொண்டு, பூட்டுப் போடப்பட்டிருந்த இரும்புக் கதவை உடைத்துத் தூக்கி சாலையில் வீசினர். பெண்கள், இளைஞர்கள் கோபாவேசத்துடன், உள்ளே புகுந்து அங்கிருந்த பிளாஸ்டிக் டேபிள், சேர்களை உடைத்து எறிந்தனர். சமையல் கூடத்தில் இருந்த பொருட்களை எடுத்து வெளியே வீசினர். கண்ணாடி பாட்டில்கள், மேற்கூரை ஆகியவற்றை கற்களை வீசி உடைத்து நொறுக்கினர். சமையல் எரிவாயு சிலிண்டரை வெளியே தூக்கிப் போட்டனர். அந்த மதுபான பாரைச் சுற்றிலும் போடப்பட்டிருந்த அஸ்பெஸ்டாஸ் தடுப்புகளை பெரிய கற்களால் உடைத்து நொறுக்கினர். மேற்கூரை, உள்ளே இருந்த பெட்டிகள் அனைத்தையும் அடித்து நொறுக்கினர்.
டாஸ்மாக் கடையின் பூட்டையும் உடைத்து திறப்பதற்கு பெண்கள் முயன்றனர். பிறர் தடுத்து அவர்களை அழைத்து வந்தனர். சுமார் 20 நிமிடங்களில் அந்த இடம் அடித்து நொறுக்கப்பட்டு போர்க்களம் போல் காட்சியளித்தது. பெண்கள், இளைஞர்களை போராட்டத்திற்கு தலைமை ஏற்ற தலைவர்கள் அமைதிப்படுத்தி மீண்டும் சாலையில் அமர்ந்து கடையை அகற்ற வலியுறுத்தி மறியல் செய்தனர்.
 பொது மக்கள் கைது
 இந்நிலையில் தகவல் அறிந்து மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின், துணைக் கண்காணிப்பாளர்கள் கிருஷ்ணசாமி, மனோகரன் மற்றும் அதிரடிப் படை காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை.
டாஸ்மாக் உதவி மேலாளர் குணசேகரன் இப்பகுதி மக்களிடம் மூன்று மாதங்களில் இக்கடையை இடமாற்றம் செய்வதாக கூறினார். ஆனால் இப்போதே கடையை மூட வேண்டும், திறக்கக் கூடாது என்று மக்கள் உறுதியாக எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து அனைவரையும் கைது செய்வதாக கூடுதல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கூறினார்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட சுமார் 200 பேரை காவல் துறையினர் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர். கடைசியாக சம்பவ இடத்துக்கு காவல் கண்காணிப்பாளர் உமா நேரில் வந்து பார்வையிட்டார்.
 டாஸ்மாக் கடை அகற்றப்படாது
 டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ராஜன் சம்பவம் நடைபெற்ற கடை, பார் ஆகியவற்றைப் பார்வையிட்டார். அவரிடம், பொதுமக்கள் இந்த கடையை அகற்றக் கோருவது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். சட்ட நெறிமுறைகள்படி இந்த கடை அமைக்கப்பட்டுள்ளது. எனவே இக்கடை அகற்றப்படாது. மூன்று மாதங்களில் இடமாற்றம் செய்வதாக மக்களிடம் உறுதியளித்தது பற்றி ஏதும் தெரியாது. மக்கள் சொல்கிறார்கள் என நெறிமுறைப்படி உள்ள இக்கடையை அகற்றினால் இதேபோல் வேறு பகுதிகளிலும் கடையை நடத்த முடியாத நிலை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
பெண்கள் உறுதி
எங்களைக் கைது செய்தாலும் பரவாயில்லை. கட்டாயம் இப்பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். நாங்கள் திரும்பி வரும்போது இங்கு கடை இருந்தால் மறுபடியும் இக்கடையை நொறுக்குவோம் என்று கைதாகிச் சென்ற பெண்கள் கூறினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் “எங்களுக்கு இலவசம் வேண்டாம், டாஸ்மாக் கடையை மூடு!, “கல்விநிறுவனங்கள் தனியார் கையில், டாஸ்மாக் கடை அரசு நடத்துவதா”, “தமிழ்நாடா? டாஸ்மாக் நாடா?” என்று தெளிவாக முழக்கங்கள் எழுப்பினர். இந்த கடையை மூடாமல் ஓட்டுக் கேட்டு எங்களிடம் வரட்டும், அவர்களை கடித்து விரட்டுவோம் என்று ஒரு பெண் கோபாவேசமாகக் கூறினார். காவல் துறைக்கு அச்சமில்லை என்று முழக்கம் எழுப்பினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.