சென்னை;
இந்தியன் வங்கி கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த 2016-2017-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் ரூ. 319.70 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
இது குறித்து இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான கிஷோர் காரத் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  இந்தியன் வங்கி கடந்த 2016-2017-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் ரூ. 319.70 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. 2015-2016-ஆம் நிதியாண்டில் ரூ.711.38 கோடியாக இருந்த நிகர லாபம் கடந்த நிதியாண்டின் முடிவில் ரூ.1,405.68 கோடியாக அதிகரித்துள்ளது. வங்கியின் மொத்த டெபாசிட் 2.37 சதவீதம் அதிகரித்து ரூ.1,82,509 கோடியாக உள்ளது.
இந்தியன் வங்கியில் தற்போது மத்திய அரசுக்கு 82 சதவீதப் பங்கு உள்ளது. வங்கியின் சார்பில் பொதுமக்களுக்கான பங்குகளை வெளியிடும்போது அரசு பங்கு 75 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும். தற்போது ரூ.3.15 லட்சம் கோடியாக உள்ள வங்கியின் மொத்த மொத்த வர்த்தகத்தை நிகழ் நிதியாண்டின் (2017-2018) இறுதியில் ரூ. 3.60 லட்சம் கோடியாக அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். நடப்பு நிதி ஆண்டில், வங்கியின் கடனளிப்பில் மொத்த வாராக் கடன் விகிதம் 7 சதவீதத்துக்கு கீழும், நிகர வாராக் கடன் விகிதம் 4 சதவீதத்துக்கு கீழும் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
கடந்த காலாண்டில் வறட்சி காரணமாக வங்கியின் கடனளிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. நிகழ் நிதியாண்டில் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் மேம்பாட்டுக்கும், சில்லறை வர்த்தகத்துக்கும் அதிக அளவு கடன் வழங்கப்படும். வங்கியின் பரிவர்த்தனைகள் உள்பட அனைத்து செயல்பாடுகளையும் டிஜிட்டல் மயமாக்கத் திட்டமிட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
படம் உள்ளது இந்தியன் பேங்க்

Leave a Reply

You must be logged in to post a comment.