தரங்கம்பாடி;
நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார்கோவில் அடுத்துள்ள இளையாளூர் ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கரையில் வசிக்கும் பொதுமக்களின் ஆதார் அட்டையில் ஊர்பெயர் மற்றும் பின்கோடு எண் தவறுதலாக உள்ளதால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து சரிசெய்ய மனு அளித்தும் பலனில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.
இளையாளூர் ஊராட்சிக்குட்பட்ட வடக்கரையில் 600க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வழங்கபட்ட ஆதார் அட்டையில் இரண்டு அஞ்சல் குறியீட்டு எண் பதிந்துள்ளது.
குறிப்பாக வடகரைக்கு 609314 என்பது நிரந்தரமான குறியீட்டு எண்ணாகும். ஆனால் 609302 என தவறுதலாக அனைத்து அட்டைகளிலும் பதியப்பட்டுள்ளது. அதே போன்று வடக்கரைக்கு அருகே உள்ள கிராமங்களான கடக்கம், குளிச்சார், செருதியூர், கோடங்குடி போன்ற ஊர்களில் பெயர்கள் பதிந்து தரப்பட்டுள்ளது.
இதுபோன்ற தவறுதலால் மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு எடுத்து செல்லும்போது வீண் குழப்பமும் நேர விரயமும் ஏற்படுவதாக குற்றம் சாட்டும் அப்பகுதி மக்கள், இந்த தவறுதல் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்து பல மாதங்கள் ஆகியும் எந்தவித பலனும் இல்லை என புகார் கூறுகின்றனர்.
சேவை மையங்கள் மூலமாக ஆதார் அட்டையில் உள்ள தவறுகளை திருத்தம் செய்தாலும் மீண்டும் தவறுதலாகவே அட்டை வருகிறது. அனைத்து சேவைக்கும் ஆதார் முக்கியம் என அரசு வலியுறுத்துகிறது. ஆனால் இத்திருத்தத்தை செய்யவேண்டிய வருவாய்த்துறை உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளதாக கூறும் பொதுமக்கள், உடனடியாக சரியான அஞ்சல் குறியீட்டு எண்ணான 609314 என்றும் வடக்கரை என சரியான முகவரியை பதிவு செய்து தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.