புதுதில்லி, ஏப்.23-
விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடியிடம் நேரில் வலியுறுத்தவுள்ளதாக, தில்லி போராட்டக்களத்தில் உள்ள தமிழக விவசாயிகளிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார்.

தில்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை பழனிசாமி சந்தித்துப் பேசினார். அப்போது விவசாயிகளின் பிரச்சனை தொடர்பான கோரிக்கை மனு ஒன்றை விவசாயிகள், தமிழக முதல்வரிடம் அளித்தனர். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அய்யாகண்ணு கூறியதாவது, “41 நாட்களாக இங்கேயே அமர்ந்து போராடி வருகிறோம். தமிழகம் வறட்சி மாநிலம் என தமிழக அரசு அறிவித்துவிட்டது. விவசாயத்தில் அழிந்துவிட்ட பயிர்களுக்கு ரூ.21,000 கோடி கேட்டிருந்தீர்கள். ஆனால், மத்திய அரசு தரவில்லை. அப்பணத்தை மத்திய அரசிடமிருந்து வாங்கி விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும்.

10 ஆண்டுகளாக சரியான மழையில்லை. ஆகையால், விவசாயிகள் வாங்கியக் கடனை கட்ட முடியவில்லை. ஆனால் வங்கி அதிகாரிகள் விவசாயிகளின் வீடுகளுக்கு சென்று அசிங்கமாக பேசுகிறார்கள். தமிழகத்தில் விவசாயிகள் வாங்கியிருக்கும் மொத்த கடன் 6140 கோடி ரூபாய்தான். இதனை தமிழக முதல்வர், பிரதமரைச் சந்தித்து தேசிய வங்கியில் வாங்கியிருக்கும் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரிக்கை வைக்க வேண்டும். இல்லையென்றால் தமிழக அரசே கடனை தள்ளுபடி செய்தாலும் எங்களுக்கு கவலையில்லை” என்றார்.

முதல்வர் பேட்டி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறும்போது, “அய்யாகண்ணு சில கோரிக்கைகளை இங்கே தெரிவித்துள்ளார். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருக்கிற கடன்கள் அனைத்தும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அதனை பிரதமரை சந்திக்கும்பொழுது வலியுறுத்துவேன். தமிழக அரசு விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. 41 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிற தமிழக விவசாயப் பிரதிநிதிகள் போராட்டத்தை கைவிட்டு தமிழகத்துக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். விவசாயிகளின் பிரச்சனையைத் தீர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்” என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிடுவீர்களா என்று அய்யாகண்ணுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு “ முதல்வர் பிரதமரை சந்திக்கிறேன் என்று கூறியுள்ளார். பிரதமரைச் சந்தித்து எங்களையும் அழைத்துப்பேசுவார்கள் என்ற நம்பிக்கையுள்ளது”. பிரதமரை சந்தித்தாலே 99சதவீத பிரச்சனைகள் தீரும். போராட்டத்தை கைவிடுவது குறித்து அனைத்து விவசாயி களிடமும் பேசி முடிவெடுக்கப்படும் என்று கூறினார்

அய்யாகண்ணு பேட்டி
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த உறுதிமொழியின் பேரில் கடந்த 41 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்தை மே 25-ஆம் தேதி வரை தற்காலிகமாக ஒத்திவைக்கிறோம். அதற்குள் முதல்வர் மத்திய-மாநில அரசுகள் எங்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் எங்களது போராட்டம் தொடரும் என்றார். மேலும் தமிழகத்தில் ஏப்.25-ஆம் தேதி நடைபெற உள்ள முழு அடைப்புப் போராட்டத்தில் பங்கேற்கப் போவதாகவும் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

Leave A Reply