சென்னை, ஏப். 23 –
விவசாயிகளின் துயர் துடைக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஏப்.25 அன்று அனைத்துக்கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, வணிகர் அமைப்புகள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பேராதரவு தெரிவித்துள்ளனர்.

நடிகர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட தொழிலாளர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. அனைத்து சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் சினிமா காட்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன. இந்நிலையில், முழு அடைப்பு விளக்கப் பொதுக்கூட்டம் அனைத்து கட்சிகள் சார்பில் சனிக்கிழமையன்று (ஏப். 22) சென்னை மயிலை மாங்கொல்லையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சித் தலை
வர் சு.திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மனிதநேயமக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பேசினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் பேசியது வருமாறு:தாகத்திற்கு தண்ணீர் கேட்டால் மேகத்தை காட்டுகிற கல்நெஞ்சக்காரர்கள் மத்திய ஆட்சியில் இருக்கிறார்கள். சென்னை தவிர மற்ற மாவட்டங்களை வறட்சி பாதித்துள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக நிவாரணம் வழங்க வேண்டும்; கடனை தள்ளுபடி செய்து புதிய கடன் வழங்க வேண்டும். வறட்சி நிவாரணமாக மாநில அரசு 39 ஆயிரம் கோடி ரூபாயை கோரினால், மத்திய அரசு 1748 கோடி ரூபாய் மட்டுமேதருகிறது.

இதர மாநிலங்களுக்கு, அம்மாநில அரசுகள் கேட்ட தொகையில் 70 விழுக்காடு அளவிற்கு கொடுத்த மத்திய அரசு தமிழகத்திற்கு வெறும் 4.48 விழுக்காடு மட்டுமே கொடுத்துள்ளது. இதனை மாநில அரசு எதிர்த்துக் கேட்கவில்லை.இந்த முழு அடைப்பு போராட்டத்தை ஆட்சியாளர்களே முன்னின்று நடத்தியிருக்க வேண்டும். அங்கே கட்சியும் இல்லை, காட்சியும் இல்லை. மத்திய பாஜக அரசு பெரிய கங்காரு என்றால், அதன் பைக்குள் உட்கார்ந்து இருக்கும் சின்ன கங்காரு அதிமுக அரசு. இதனால் தமிழக நலன்கள் புறக்கணிக்கப் படுகிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கடன் களை தள்ளுபடி செய்ய வேண்டும்; கடன் தள்ளுபடியில் பாரபட்சம் கூடாது என்று நீதிமன்றம் கூறிவிட்டது. இதற்கு முன்பு கடன் களை தள்ளுபடி செய்ததாக முன்னுதாரணம் இல்லை என்று பாஜகவினர் வாதம் செய்கின்றனர். அமைச்சர் பொன்னார், பொய்யராகவே பேசுகிறார்.

1989ம் ஆண்டு திமுக, இடதுசாரிகள் ஆதரவோடு அமைந்த வி.பி.சிங் அரசு 10ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்தது. 2008 ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு 60 ஆயிரம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்தது. தற்போதைய தேவையில் தமிழகத்தில் உள்ள கடன் 7 ஆயிரம் கோடி. நாடு முழுவதும் உள்ள விவசாயக்கடன் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் தான். கடந்த ஆண்டு மட்டும் 5 லட்சத்து 49 ஆயிரம் கோடி ரூபாய் பல்வேறு பெயர்களில் முதலாளிகளுக்கு மத்திய அரசு அளித்தது. கடந்த 11 ஆண்டுகளில் 47 லட்சம் கோடி ரூபாயை வாரி கொடுத்துள்ளனர்.

ஏழைகளுக்கு சில லட்சம் கோடிகளை தர மறுப்பது ஏன்? மக்களை மதத்தால், சாதியால், மாடு என்ற பெயரால் பிளவுபடுத்தி பாஜக அரசியல் செய்கிறது. தமிழகத்தில் அதிமுகவினர் பிரிந்த போதும் பணம், சொத்து பிரச்சனை. சேருகிற போதும் அதுவேதான் பிரச்சனை. இதையெல்லாம் பயன்படுத்திக் கொள்ள மேலே குரங்கு உட் கார்ந்துள்ளது. சண்டைப்போட்டுக் கொண்ட இரண்டு பூனைகள் அப்பத்தை எடுத்துக் கொண்டு குரங்கிடம் சென்றன. குரங்கு, இங்கே கொஞ்சம் அதிகமாக உள்ளது என்று ஒரு கடி, அங்கே கொஞ்சம் அதிகமாகிவிட்டது என்று ஒரு கடி என கடித்தது. கடைசியில் பூனை களிடம் ஒன்றுமே இல்லை. அதுபோல இந்த இரண்டு பூனைகளும் ஏமாந்து நிற்கின்றன. பூனைகளையும், குரங்கையும் விரட்டி அடிக்க வேண்டும். தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு மறுத்தால், கடுமையான மக்கள் போராட்டத்தை சந்திக்க நேரிடும்.

அய்யாக்கண்ணு போராட்டம் தமிழக விவசாயிகளின் ஒட்டு மொத்த குரல். அவரை அழைத்து பேச வேண்டும். அறவழிப் போராட்டத்தை உதாசினப்படுத்தினால், மாய்த்துக்கொள்ளலாம் அல்லது யாரையாவது மாய்க்கலாம் என்ற சிந்தனைதான் வரும். தீவிரவாதத்தின் ஊற்றுக்கண்ணே இந்த அணுகுமுறை தான். நிதானமாக பொறுத்திருந்து பார்த்து தான் திமுக தலைமையில் ஒன்றுகூடி போராட்டத்திற்கு செல்கிறோம். இந்த போராட்டமும், பொறுப்புணர்ச்சியும் மேலும் உதாசினப்படுத்தினால் போராட்டங்கள் புதுப்புது அவதாரம் எடுக்கும். விவசாயிகளின் உற்பத்திச் செலவு 100 ரூபாய் என்றால், 150 ரூபாய் தருவோம் என்ற பாஜக, தற்போது தரமுடியாது என்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை கூட மத்திய அரசு மதிப்பதில்லை. எதையும் மதிக்காத கூட்டம் அதிகாரத்தில் உள்ளது.

இந்த போக்கிற்கு எதிராக ஏப்.25 முழு அடைப்பு முழு வெற்றி பெறும். கடைகள் அடைக்கப்படும். கோரிக்கையில் அடைகிற வெற்றிதான் உண்மையான வெற்றி. அதை எட்டும் வரை பலப்பல வடிவங்களில் போராட்டம் நடைபெறும். இதை உணர்ந்து ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால், எங்களுக்கு எப்படி வேண்டுமானாலும் அரசியல் சாயம் பூசுங்கள். இது தேர்தல் அணி அல்லது வேறு அணி என்று கூட கூறுங்கள். தமிழகத்தின் ஏழை எளிய மக்கள், விவசாயிகளின் நலன் காக்க இந்த அணி உறுதியாக முன்னோக்கி நடைபோடும். இவ்வாறு அவர் பேசினார்.

Leave A Reply