‘சாதிப்புத்தி மாறாது’ என்று வீடுகளிலும் பொது இடங்களிலும் தங்களுக்கு வேண்டாதவர்கள் பற்றிச் சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். சாதியம் புரையோடிப்போயிருக்கிற சமுதாயத்தில் பல்வேறு பிரிவுகளையும் சேர்ந்தவர்கள் மற்றவர்கள் பற்றி இப்படிச் சொல்கிற பழக்கம் ஊறிப்போயிருக்கிறது. நாட்டின் அரசமைப்பு சாசனம் எந்தவொரு சமூகத்தையும் குற்ற மனப்பான்மை உள்ளதாகக் கருதவில்லை. எந்தக் குற்றமானாலும் அதன் தன்மை, ஆதாரம் என்ற அடிப்படையில் குற்றவாளிகளைத் தீர்மானிக்கவே சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. குற்றத்திற்குரிய தண்டனையை யும் சாதி அடிப்படையில் அல்லாமல், குற்றத்தின் தன்மையைப் பொறுத்து அளிப்பதற்கு த்தான் விதிகள் உள்ளன.

ஆதாரங்களை ஆராய்ந்து சட்ட விதிகளின் படி தண்டனை அளிக்க வேண்டிய இடம் நீதிமன்றம். அந்த நீதிமன்றமே, தெருப் பஞ்சாயத்து போல, குற்றம் சாட்டப்பட்டவர்களின் சாதிப் பின்புலத்தைப் பார்த்துத் தீர்ப்பளிக்குமானால் அது மக்களின் நம்பிக்கைக்குரியதாக இருக்க முடியுமா? அப்படிப்பட்ட நீதிமன்றங்கள் அரசமைப்பு சாசனத்தை உயர்த்திப் பிடிக்கிற இடங்களாகத் திகழ முடியுமா? காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 2015இல் அப்படித்தான் தீர்ப்பளித்தது. 2010இல் காஞ்சிபுரம் கோவில் ஒன்றில் நடந்த கொலை, திருட்டு தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள், அந்தச் சாதியினர் பரம்பரையாகவே குற்றச் செயல்களில் ஈடுபடுகிறவர்கள்தான் என்று அந்த நீதிபதி கருதியதால், அவர்களுக்கு ஆயுள்சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறார்.

சாதி அடிப்படையில் விடுவிக்கப்படுவதும் நடந்திருக்கிறது. கீழ வெண்மணியில் 44 தலித் விவசாயத் தொழிலாளிகள் எரித்துக் கொல்ல ப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மரியாதைக்குரிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அவர்கள் இப்படிப்பட்ட குற்றங்களில் ஈடுபடமாட்டார்கள் என்ற விளக்கத்தின் பேரி ல்தான், நிலவுடைமையாளர்களையும் அவர்களது அடியாட்களையும் நீதிமன்றம் விடுதலை செய்தது. பிரிட்டிஷ் ஆட்சியில் குற்றப்பரம்ப ரையினர் என்ற பட்டியலே தயாரிக்கப்பட்டு அந்தச் சமூகங்களைச் சேர்ந்த ஆண்கள் காலையிலும் மாலையிலும் காவல்நிலையம் வந்து கைநாட்டு வைத்துவிட்டுப் போக வேண்டும், ஆணையிடப்படும்போது காவல்நிலைய வாசலிலேயே இரவைக் கழிக்க வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. சுதந்திர இந்தியாவில் அந்த ஆணை போராட்டம் மூலம் விலக்கப்பட்டது.

தற்போது, சென்னை உயர்நீதிமன்றம் காஞ்சிபுரம் வழக்கில் ஆயுள் சிறை தீர்ப்பளிக்கப்பட்ட ஐந்து பேரையும் விடுவித்து, அமர்வு நீதிபதியைக் கடுமையாக விமர்சித்திருக்கிறது. ‘குற்றம் சாட்டப்பட்டவர்களின் முன்னோர் எப்படிப்பட்ட குற்றச் செயல்க ளில் ஈடுபட்டார்கள் என்பதைத் தேடிப் பார்த்து நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது. எந்த நீதிமன்றமும் ஒரு சமூகத்தையே குற்ற மனப்பான்மை கொண்டதாகக் களங்கப்படுத்த முடியாது,’ என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். அனைத்துத் துணை நீதிமன்றங்களும் இப்படிப்பட்ட நம்பிக்கைகளைக் கைவிட வேண்டுமென்றும் ஆணையிட்டுள்ளனர்.

தொடர்ச்சியான சமூக நீதி, சமூக மரியாதைப் போராட்டத்தில் உயர்நீதிமன்றத்  தீர்ப்பு ஒரு மைல்கல். நீதித்துறையில் உள்ளவர்கள் மட்டுமல்ல, இதரதுறையினரும், பொதுமக்களும் இந்தத் தீர்ப்பின் பொருளைப் புரிந்துகொண்டு தங்கள் பார்வையை மாற்றிக்கொள்வது, ஒட்டுமொத்த சமுதாய முன்னேற்றத்திற்குத் தேவைப்படுவதாகும்.

Leave a Reply

You must be logged in to post a comment.