சமுதாய நிலையில் காலங்காலமாகத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு வழங்கவும், அவர்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்கவும், அத்தகைய வன்முறைகள் குறித்து சுயேச்சையாக விசாரித்து உரிய நடவடிக்கைகளுக்கு ஆலோசனைகளை வழங்கவும் ஏற்படுத்தப்பட்டதே தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம். அதிலும், தற்போது பல மாநிலங்களில், குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் தலித் மக்களுக்கு எதிரான வன்மங்கள் ஊக்கம் பெற்றுள்ள நிலையில் இந்த ஆணையத்தின் பணி மிக முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், சமூக ஒடுக்குமுறையைப் பாதுகாக்கவே நினைப்பது போல, அந்த ஆணையத்தின் செயல்பாட்டை முடிந்த அளவுக்கு முடக்க முயல்கிறது மத்திய அரசு.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 338ன் படி 1952ம் ஆண்டு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டது. இதன் கீழ் நாடு முழுவதும் 12 மாநில (மண்டல) ஆணையங்கள் இயங்குகின்றன. தமிழ்நாடு, புதுச்சேரிக்கென்று சென்னையில் தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் செயல்படுகிறது.

தாழ்த்தப்பட்டோர் மீதான வன்முறை, சமூகப் புறக்கணிப்பு போன்ற பிரச்சனைகள் வருகிறபோது, நடந்தது என்ன என்று மாநில அரசிடம் அறிக்கை கோருவது, தானே முன்வந்து விசாரணை நடத்துவது, குழுக்களை அமைத்து ஆய்வு செய்வது, நடவடிக்கைக்கு பரிந்துரைப்பது உள்ளிட்ட பணிகள் இந்த ஆணையத்தால் மேற்கொள்ளப்படுகின்றன.
வன்கொடுமை தடுப்புச் சட்டம் அமலாக்கம் குறித்தான அறிக்கை, புள்ளி விவரங்களை தேசிய ஆணையத்திற்கும் மாநில அரசுக்கும் அனுப்புவது, இந்த மக்களின் கல்வி நிலை பற்றிய ஆய்வுகளைச் செய்து, புள்ளி விவரங்களை சேகரித்து மதிப்பீடுகளை உருவாக்குவது, இவர்களுக்கான சிறப்பு உட்கூறு திட்டம் செயல்படுத்தப்படுவதைக் கண்காணிப்பது, குறிப்பிட்ட பிரச்சனைகளில் மாநில அரசுகளுக்கு ஆலோசனைகளை வழங்குவது உள்ளிட்ட பணிகளை மாநில ஆணையங்கள் மேற்கொள்கின்றன.

முடக்கப்பட்டுள்ள ஆணையம்
ஆனால் இத்தகைய செயல்பாடுகள் இன்று எழுத்தில் மட்டுமே உள்ளன, நடைமுiயில் இல்லை என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. மேற்கூறிய வலுவான அதிகாரங்கள் கொண்ட தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் இப்போது தலைவர் இல்லாத ஆணையமாக இருக்கிறது. தேசிய ஆணையத்தின் தலைவரும், மாநில அளவில் இயக்குநரும் தீர்மானிக்கும் அதிகாரம் உள்ளவர்கள். அவர்கள் என்ன தீர்மலானிப்பது என்று கருதியோ என்னவோ இந்த உயர் பதவிகளை மத்திய அரசு நிரப்பப்பாமல் உள்ளது. தேசிய ஆணையத் தலைவர், துணைத்தலைவர், 3 உறுப்பினர் பதவியிடங்கள் 6 மாதமாக நிரப்பப்படவில்லை. சட்டத்துறை அதிகாரி, தகவல் தொடர்பு அதிகாரி, ஆலோசனை அதிகாரி, திட்ட அதிகாரி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகப் பணியிடங்களும் காலியாக விடப்பட்டுள்ளன. 12 மாநில ஆணையங்களின் இயக்குநர் பணியிடங்களும் வெறுமையாக விடப்பட்டுள்ளன. இதனால் தேசிய ஆணையமும், மாநில  ஆணையங்களும் முடங்கிப் போயிருக்கின்றன. தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைச் செய்திகள் அடுத்தடுத்து வந்தாலும் அவற்றில் தலையிட முடியாதவையாக இந்த தேசிய – மாநில ஆணையங்கள் கையறு நிலையில் விடப்பட்டுள்ளன. ஏனெனில் உரிய வகையில் தலையிடுவதற்கான உரிய அதிகாரம் உள்ளவர்கள் இல்லையே…

காட்சிப் பொருளான ஆணையம்
மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு ஆண்டிற்கு 2,500 புகார்கள் வரை வருகின்றன. இந்த ஆணையத்தில் முடிவெடுக்கும் அதிகாரமும் பொறுப்பும் உள்ள இயக்குநர் பதவி கடந்த 2 ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. ஓராண்டுக்கும் மேலாக உதவி இயக்குநர் பதவியும் காலியாகவே வைக்கப்பட்டுள்ளது. விசாரணை அலுவலர், உதவியாளர், எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன. மாநில ஆணையப் பொறுப்பை ஆய்வக பணியாளர் (ரிசர்ச் ஆபீசர்) கவனித்து வருகிறார். அவரால் அரசுச் செயலர், காவல்துறை தலைமை இயக்குநர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு ஆலோசனைகள் சொல்கிற அதிகாரம் கூட ஆய்வகப் பணியாளருக்குக் கிடையாது என்று அலுவலக வட்டாரத்தினர் கூறுகின்றனர்.

இது தொடர்பாக குடியரசு தலைவருக்கும் பிரதமருக்கும் புகார் மனு அனுப்பியுள்ளார் தலித் விடுதலை இயக்க மாநில இணைப் பொதுச் செயலாளர் ச.கருப்பையா. “அரசமைப்புச் சட்டப்படி உருவாக்கப்பட்ட ஆணையத்தின் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது சட்டவிரோதம். தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் திட்டமிட்ட முறையில் நுட்பமான வடிவில் இழைக்கப்படுகின்றன. உட்கூறு திட்டச் செயல்பாடுகள் வலுவிழந்துள்ளன. இது போன்றவற்றை கண்காணித்து அதிகாரிகளிடத்தில் கேள்வி எழுப்பி, ஆலோசனை கூற வேண்டிய இயக்குநர் பணியிடம் காலியாக விடப்பட்டுள்ளது. இதனால் ஆணையம் செயல்படாமல் முடங்கி கிடக்கிறது,” என்று கூறுகிறார் அவர். இதற்கெதிராக வலுவாகக் குரல் எழுப்ப வேண்டும் என்று அரசியல் கட்சிகளுக்கும், ஜனநாயக அமைப்புகளுக்கும் அவர் வேண்டுகோள் விடுக்கிறார்.

வேண்டுமென்றே தேசிய, மாநில ஆணையங்கள்  முடக்கப்பட்டிருப்பதாகத்தான் நினைக்க வேண்டியிருக்கிறது என்று தலித் உரிமைகளுக்காகவும் தீண்டாமை ஒழிப்புக்காகவும் களப்பணியாற்றுவோர் விமர்சிக்கிறார்கள். மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு நாடு முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளன. அதனை மறைப்பதற்காகத்தான் ஆணையம் வெறும் காட்சிப்பொருளாக்கப்படுகிறது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இந்தக் குற்றச்சாட்டை மறுத்துவிட முடியாதுதான்.
-செ. கவாஸ்கர்

Leave a Reply

You must be logged in to post a comment.