சென்னை,
கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு இடஒதுக்கீடு பெற இணையதளத்தில் பெற்றோர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், மெட்ரிக்குலேசன் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நலிவடைந்த பிரிவு மாணவர்கள் சேர்க்கைக்கு 25 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் சேர்க்கைக்கு வியாழக்கிழமை (ஏப்.20) முதல் மே 18ஆம் தேதி வரையில் நேரடியாகவும், கல்வி அலுவலகங்களின் மூலமும் பதிவேற்றம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு வியாழனன்று (ஏப். 20) ஒரே நாளில் 1,246 ஆன்-லைன் விண்ணப்பங்கள் பெறப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள் பிரிவில் 942 விண்ணப்பங்களும், பின்தங்கியவர்கள் பிரிவில் 299 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளது.
இதில், சென்னையில் 100 விண்ணப்பங்களும், திருவள்ளூரில் 129, சேலம், மதுரை, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் 109, கோவையில் 51 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் போது கவனிக்க…
பதிவேற்றம் செய்யப்படும் மாணவரின் புகைப்படம் 40 கே.பி. அளவுக்கு மேல் இருக்கக்கூடாது. அதேபோன்று பிறப்புச் சான்றிதழ்- முகவரிச் சான்று- அடையாளச் சான்று ஆகியவை ஒவ்வொன்றும் தலா 400 கே.பி.  அளவுக்கு மேல் இருக்கக் கூடாது; ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் போது ஆவணங்களை கண்டிப்பாக ‘ஸ்கேன்’ செய்துதான் இணைக்க வேண்டும். விண்ணப்பத்தின் இறுதியில் உள்ள பாதுகாப்பு குறியீட்டை கவனமாக தட்டச்சு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply