இந்திய விடுதலைப் போராட்டத்தில் கப்பற்படை புரட்சிக்கு மகத்தான இடம் உண்டு. பிரிட்டிஷ் பேயாட்சியை நடுங்க வைத்த நிகழ்வு அது. ஆனால், சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஐஎன்எஸ் போர்க் கப்பலில் ஆளுங்கட்சியான அதிமுக-வைச் சேர்ந்த அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் ஏற்றப்பட்டு பின் இறக்கிவிடப்பட்ட பிறகு அதிமுகவில் நடைபெற்றுவரும் நிகழ்வுகள் ஏராளமான கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருக்கின்றது. ஒருகேள்விக்கு விடை தெரியும் முன்னரே அடுத்தடுத்த கேள்விகள் முளைக்கின்றன.

பதவி நாற்காலியைத் தக்க வைத்துக்கொள்வதற்காக பலவேடம் போடுகிற பகல் வேடதாரிகள்.‘‘பன்னீர்செல்வத்தை பார்த்துத்தான் விசுவாசத்தைக் கற்றுக்கொண்டோம். அவரை எப்போதும் நாங்கள் விமர்சித்ததில்லை’’ என்கிறார் ’வருவாய்த்துறை’ அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோதே சின்னம்மா தான் முதல்வராக வேண்டும். கட்சி அதிகாரமும், ஆட்சி அதிகாரமும் ஒருவரிடம்தான் இருக்கவேண்டுமென்று முதன் முதலில் கொளுத்திப்போட்டவரே இவர்தான். இதை பன்னீரே ஒரு பேட்டியின் போது சொல்லி கண்ணீர்விட்டார். கிரீன்வேஸ் சாலையில் அந்த கண்ணீர்த் துளிகள் இன்னமும் காயாமல் கொட்டிக்கிடக்கின்றன.உதயகுமாரின் விசுவாசம் மிகவும் விசாலமானது தான்!.

ஜெயலலிதாவிற்காக காலில் செருப்பே போடமாட்டேன் என்று வெறுங்காலோடு சுற்றியவர் இவர். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு பாலே நடனக்காரர்களே பயப்படும்விதமாக சசிகலாவின் முன்பு தரை வரை குனிந்து தவழ்ந்தவர். இப்போது விசுவாசத்தின் விலாசத்தை மாற்றிக்கொண்டுவிட்டார்.பன்னீர் அணி கர்ப்பம் தரித்ததே விஷத்தாமரையின் வேரில்தான் என்பதை பாஜகவில் மிஸ்டுகால் கொடுத்துச் சேர்ந்த சாதாரண உறுப்பினர் கூட அறிவார்கள்.

ஒரு காலத்தில் ஆர்எஸ்எஸ் பள்ளியில் படித்த மைத்ரேயன் போன்றவர்கள்தான் பன்னீர் அணிக்குத் தண்ணீர் வார்த்தவர்கள். முதல்வர் பதவி கிடைக்கும் போதெல்லாம் பன்னீர் தர்மத்தை தள்ளிவைத்துவிடுவார். இப்போது தர்மயுத்தம் வெற்றி பெற்றுவிட்டதாக புளகாங்கிதம் அடைகிறார். எடப்பாடி அணியோடு பன்னீர் அணி நடத்தும் பேச்சுவார்த்தைக்கான நிபந்தனையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒட்டப்பட்ட அதிமுக இணையவேண்டும் என்பதும் ஒன்று என்கிறது ‘தினமணி’ ஏடு.பன்னீர் அணியைத் தனியாகப் பிரித்து அதிமுகவை ஹார்லிக்ஸ் போல அப்படியே சாப்பிட்டுவிட முயன்றது மோடி வகையறா.
ஆனால், சிக்கியது மூடி மட்டும் தான்.எனவே அடுத்தடுத்து அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தில்லி காவல்துறை என ஒவ்வொன்றாக சின்னம்மா அணி மீது பாய்ந்தது.மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வருமானவரித்துறை ஏவிவிடப்பட்டது. ஆரம்பத்தில் வீறாப்புக் காட்டிப் பார்த்தார். மடியில் கனமில்லை என்று சமாளித்தார். ஆனால், கல்வி நிலையங்கள், குவாரிகள் உள்ளிட்ட சொத்துக்களின் கனத்தை அவரால் தாங்க முடியவில்லை. விடிய விடிய வைத்து விசாரித்ததில் ஆடிப்போனார். இதைத் தொடர்ந்து ஆடிக்கொண்டே சென்ற போர்க்கப்பலில் ஆடாமல் அசையாமல் அமர்ந்துவிட்டார்.

அதனால்தான் ‘‘எங்கள் குடும்பம் வாழவேண்டுமானால் அந்தக்குடும்பம் ஒதுங்கட்டும். எப்படியும் ஒழியட்டும்’’ என்று எடப்பாடி சரணாகதிப் படலம் எழுதத் துவங்கிவிட்டார்கள்.‘‘ஒதுங்கச் சொன்னார்கள், அதனால் ஒதுங்கிவிட்டேன்’’ என்று பெருந்தன்மையின் பேருருவமாக உயர்ந்து நிற்கிறார். காபிபோசா தினகரன்.ஜெயலலிதா காலத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட இவர், பரப்பன அக்ரஹாரம் செல்லும் வழியில் இளைப்பாற இளநீர் குடிப்பது போல சின்னம்மாவால் ஞானஸ்தானம் செய்யப்பட்டு துணைப் பொதுச் செயலாளராகவும் அறிவிக்கப்பட்டவர்.அமைச்சர்கள் அனைவரும் கூடி நாட்டாண்மை குடும்பத்தை ஒதுக்கிவைப்பது என்று முடிவெடுத்த உடனேயே இவர் ஒதுங்கிவிடவில்லை. வெற்றிவேலை வைத்து சவுண்டு கொடுக்க வைத்தார். நாஞ்சில் சம்பத் தனது இன்னோவா வாயைத் திறந்து தினகரன் தலைமையில் அதிமுக விண்ணுக்கும் மண்ணுக்குமாக விஸ்வரூபம் எடுக்கப்போகிறது என்றார்.
இதைக்கேட்டு தினகரனே நடுங்கியிருப்பார். சாதாரணமாக இருக்கும்போதே இப்படியென்றால் விஸ்வரூபம் எடுத்தால் இன்னமும் எத்தனை வழக்குகள் விரட்டுமோ என எண்ணியிருப்பார்.‘‘இலையைப் பெற பணம் வாங்கிக் கொடுத்ததாகச் சொல்லப்படும் சுகேஷ் சந்திரா யார் என்றே எனக்குத் தெரியாது, பாஸ்போர்ட்டே இல்லாத நான் எப்படி வெளிநாட்டிற்கு தப்பமுடியும்’’ என்று படிக்காத மேதை படத்தில் வரும் அப்பாவி ரங்கனைப் போல சிங்கப்பூர் குடிமகன் தினகரன் கேட்டது அவலச் சுவையின் உச்சம்.கடந்த காலத்தில் கஞ்சா வழக்கு தொடரப்பட்டோர், ஆட்டோ படையால் தாக்கப்பட்டோர், சொத்துக்கள் பறிக்கப்பட்டோர் கதறிய கதறல் பின்னணி இசையாக கேட்டுக்கொண்டிருந்தது.
வெற்றிவேல், வீரவேல் என முழக்கமிட்ட இவரது ஆதரவு எம்.எல்.ஏ,. அமைச்சர்கள் என்றால் கொம்பா என்று சீறினார். ஆனால் தலையே தப்பித்தால்போதும் என ஒதுங்கி ஓடும்போது அவர் பாவம் எதற்கு வம்பு என்று பதுங்கிவிட்டார். ‘‘அமைச்சர்களும் எனக்கு எதிராக கலகம் செய்பவர்களும் எதற்காகவோ பயப்படுகிறார்கள். ஆனால், அப்படி பயமுறுத்துவது யார் என்பதுதான் தெரியவில்லை’’ என்று பயத்தை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் சிரித்தபடியே சொல்கிறார் தினகரன். இவரை பயமுறுத்துபவர்கள் தான் அவர்களையும் பயமுறுத்துகிறார்கள் என்பது இவருக்கு நன்றாகவே தெரியும்.

இருந்தாலும் ‘துக்ளக்’ பத்திரிகையின் ஆசிரியரும் ஆர்எஸ்எஸ் பிரமுகர்களில் ஒருவருமான குருமூர்த்தி பயத்திற்கான காரணத்தை விண்டுரைத்துள்ளார். அமைச்சர் பெருமக்களின் ஆவணங்களை வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்றவை கைப்பற்றி வைத்துள்ளதாகவும் அதனால்தான் இந்த அச்சமென்றும் அவர் கூறியுள்ளார். இந்த குரு இப்போது உச்சத்தில் இருக்கிறார். அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

சிறைக்குச் செல்லும்முன் சசிகலா ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று மூன்று முறை ஓங்கி ஓங்கி அடித்தார். அவரை பொதுச்செயலாளராக தேர்வுசெய்தபோது அத்தனை அமைச்சர்களும் வளைந்து குழைந்து படுத்து எழுந்தார்கள். திருவாளர் பன்னீர் காலிலேயே விழுந்து அரைமணி நேரம் கழித்துத்தான் எழுந்தார். இப்போது தன்னுடைய விசுவாசிகள் இப்படியெல்லாம் பேசுவதைக் கேட்டு சசிகலா என்ன நினைப்பாரோ? அக்கா மட்டும் இருந்திருந்தால் இந்த அடிமைகள் இப்படியெல்லாம் நடந்திருக்குமா என்று நினைத்திருப்பார்.

இந்த பரபரப்புகளுக்கிடையில் தலைமைச் செயலகத்திற்கு அனைத்து அதிகாரிகளையும் அழைத்து தினகரன் குடும்பத்தார் கூறிய டெண்டர்களை ரத்துச் செய்துவிடுமாறு அமைச்சர்கள் கூறியதாக ஒரு தகவல்.இப்போது நடந்துகொண்டிருப்பது தர்மயுத்தமும் இல்லை. ஒரு வெங்காயமும் இல்லை. ஒரு வகையில் மகாபாரதத்தில் நடந்த தர்மயுத்தம் கூட பாகப்பிரிவினைக்காக நடந்ததுதான். அதைத்தான் கூறுகிறார்கள் போலிருக்கிறது.இவர்கள் அடிக்கும் கூத்துக்களைப் பார்த்து சிலர், இவர்களையெல்லாம் சமாளித்த அம்மாவும் சின்னம்மாவும் எப்படிப்பட்ட திறமைசாலிகள் என்று வியக்கிறார்கள். இப்படிப்பட்ட சந்தர்ப்பவாத சாக்கடைகளை சேர்த்துவைத்திருந்த இடம் புனிதமான தலமாக இருந்திருக்க வாய்ப்பில்லை.
‘‘தமிழக ஆளுங்கட்சிக்குள் நடக்கும் காட்சிகளுக்கும் எங்கள் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாங்கள் கொல்லைப்புற வழியாக அதிகாரத்தைக் கைப்பற்றுபவர்கள் அல்ல. நேர்வழியில் ஆட்சியை பிடிப்போம்’’ என்கிறார் தமிழிசை.பெருச்சாளிகள் சிக்கிக்கொண்டன. கபடப் பூனை கட்டப்பஞ்சாயத்து செய்துகொண்டிருக்கிறது. ஆனால், அந்தப் பூனைக்குத் தெரியாது தமிழகம் ஒன்றும் கருவாட்டுப் பானையல்ல என்பது.
– மதுக்கூர் இராமலிங்கம்

Leave a Reply

You must be logged in to post a comment.