ஒவ்வொரு குடிமகனின் வாழ்வாதாரத்திற்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டியது அந்த நாட்டு அரசின் முழு முதல்கடமை. ஆனால், சேலம் மாவட்டம் குடுவம்பட்டி மலைக்கிராம மக்கள், இன்னும் தங்களது அடிப்படை வாழ்வாதாரங்களை பெறுவதற்கே போராடும் சூழலில் உள்னர்.

எழுபது ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் பேருந்து வசதி இல்லாத வெகுசில கிராமங்களில் குடுவம்பட்டியும் ஒன்று என்றால், நம்பித்தான் ஆக வேண்டும். இந்த கிராம மக்கள் பழங்குடிகளாக இருந்தாலும், வசிப்பது என்னவோ முல்லை நிலத்தில்தான்.

சேலம் கோரிமேட்டில் இருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ள குடும்வம்பட்டி, ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது. சேலம்-கோரிமேடு- செட்டிச்சாவடி-குரும்பப்பட்டி வழியாக குடுவம்பட்டியை அடையலாம். அதற்கேற்ப தார் சாலை வசதியும் உள்ளது.

இந்த வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்படாததால், குடுவம்பட்டி மக்கள் கிராமத்திலேயே குறுகிக் கிடக்கின்றனர். பேருந்து இயக்கப்பட்டால், டேனீஷ்பேட்டை வழியாக தர்மபுரிக்கும் செல்ல முடியும்.

இந்த கிராமத்தில் சுமார் 62 குடும்பங்களைச் சேர்ந்த 250 பேர் வசிக்கின்றனர். ரேஷன் பொருட்களை வாங்க வேண்டுமானால், குடுவம்பட்டியில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள வட்டக்காடு பகுதிக்குச் சென்றே வாங்கி வருகின்றனர். அங்கிருந்து அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி, தலைச்சுமையாக சுமந்துகொண்டு பெண்களும், முதியவர்களும் நடந்தே குடுவம்பட்டிக்கு வந்து சேர்கின்றனர்.

மழைக்காலங்களில் அப்பகுதியில் ஓடும் சரபங்கா நதி ஓடையை கடக்கையில் பலர் நிலை தடுமாறி விழுந்து எழுந்ததும் உண்டு. “இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாய கூலி வேலையை நம்பியே உள்ளனர். ஒரே நாளில் அனைத்து வகை ரேஷன் பொருட்களும் வழங்கப்படாததால், மாதத்தில் 5 நாட்கள் அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய்க்காக அலைய வேண்டி உள்ளது. அந்த நாட்களில் எல்லாம் குடும்பத்தில் ஆணோ, பெண்ணோ யாராவது ஒருவர் அன்றைய கூலி வேலையை விட்டுவிட்டுச் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

இதனால், குடுவம்பட்டி பகுதிக்கென ஒரு பகுதிநேர ரேஷன் கடை அல்லது நகரும் ரேஷன் கடை வசதி செய்து தர வேண்டும் “, என்கிறார் சிவக்குமார். போக்குவரத்து வசதி இல்லாததால், யாருக்கேனும் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவத்துவ மனைக்கு கொண்டு செல்ல முடியாது.

இப்படி, ‘கோல்டன் ஹவர்’ நேரத்திற்குள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியாததால் பலர் உயிரிழந்துள்ளதாக சொல்கின்றனர். மற்றொரு ஆச்சர்யம் என்னவெனில், குடும்வம்பட்டி மக்களில் யாருக்கும் தங்கள் தொகுதி எம்எல்ஏ, எம்பி பெயர் கூட தெரியவில்லை. சுமார் 120 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்பதற்காக, வேட்பாளர்கள் சார்பாக சிலர் இந்த மலைக்கிராமத்திற்குள் வந்து ஓட்டுக்காக பணம் கொடுத்துச் செல்கின்றனர். ஓமலூர் சட்டப் பேரவை தொகுதிக்குட்பட்ட இந்த பகுதிக்கு ஒருமுறையாவது எம் எல்ஏவோ, அமைச்சரோ வந்துவிடமாட்டார்களா என ஏங்கிக்கிடக்கின்றனர். தனிநபர் கழிப்பறை, தூய்மை இந்தியா குறித்து பேசும் அரசின் கண்களில் குடுவம்பட்டி போன்ற கிராமங்கள் மட்டும் தென்படுவதே இல்லை.

இங்குள்ள பெண்கள் இயற்கை உபாதைகளை கழிக்க தினமும் சூரிய உதயத்தையும், அஸ்தமனத்தையும் கண்காணிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். காளியப்பன், வனிதா, சங்கர், முருகேசன், லாவண்யா, ராஜிவ் காந்தி, லதா ஆகியோர், “மஞ்சையன் காடு செல்லும் வழியில் சரபங்கா நதி ஓடை ஓடுகிறது. வெளியூர்களில் இருந்து வரும் இளைஞர்கள் சிலர் இந்த ஓடையில் ‘எல்லாவற்றையும் அவிழ்த்துப் போட்டு’ குளிக்கின்றனர்.

அவர்கள், அந்த வழியாகச் செல்லும் மலைக் கிராம பெண்கள், பள்ளி மாணவிகளை மடக்கி, குடிபோதையில் தொந்தரவு செய்கின்றனர். மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை ஓடையில் வீசி எறிகின்றனர்.  ஒருமுறை பள்ளிச்சிறுவன் ஓடைக்குள் தவறி விழுந்தபோது, உடைந்த பாட்டில் சில்லுகள் குத்தியதில் காயம் ஏற்பட்டது.

ஓடை மட்டுமின்றி, குரும்பப்பட்டியில் இருந்து குடுவம்பட்டி வரும் வழியில் பாலங்களில் அமர்ந்தும் வெளியூர்க்காரர்கள் மது அருந்துகின்றனர். அவர்கள் மலைக்கிராம பெண்களிடம் பாலி யல் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து போலீசாரிடம் புகார் சொல்லியும், எந்தப்பலனும் இல்லை,” என்கிறார்கள். அரசாங்கமும் கார்ப்பரேட்தனமாக லாப, நட்டக் கணக்குடன் யோசிக்கத் தொடங்கியதன் விளைவுதான், தொலைந்துபோன கிராமமாகவே இருக்கிறது, குடுவம்பட்டி.

ஓராசிரியர் பள்ளி…!

அரசுப் பள்ளிகளில் ஓராசிரியர் முறையை ஒழித்து, ஈராசிரியர் முறையை அமல்படுத்தி வெகுகாலம் ஆகிவிட்டது. ஒரு பள்ளியில் ஒரு குழந்தை படித்தாலும் குறைந்தபட்சம் இரண்டு ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும்.

ஆனால், குடுவம்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை 14 குழந்தைகள் படித்து வந்தாலும், ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் இருக்கிறார். இப்பள்ளிக்கு தலைமை ஆசிரியர் பணியிடத்திற்கு வர பலர் மறுத்துவிட்டபோதிலும், ரேவதி என்பவர் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று மாறுதலில் வந்துள்ளார்.

கிராமம் கிராமமாகச் சென்று மாணவர் சேர்க்கைக்கு முயற்சித்து வரும் ரேவதியிடம், “வாகன வசதி இருந்தால் குடுவம்பட்டி பள்ளியில் படிக்க வைக்கத் தயாராக இருக்கிறோம்,” என மலைக்கிராம மக்கள் சொல்கின்றனர்.

வாகன வசதி செய்து கொடுத்தால் இந்தப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கையை உயர்த்த முடியும். அதன்மூலம் நடுநிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்த வாய்ப்பு உள்ளது என்கிறார் தலைமை ஆசிரியர் ரேவதி.  இந்தப்பள்ளியை தரம் உயர்த்தினால், குடும்வம்பட்டி குழந்தைகள் பலர் 5ம் வகுப்புடன் இடைநின்று விடுவதையும் தடுத்திட முடியும்.

Leave A Reply