விருதுநகர், ஏப்.20 –
விருதுநகர் 6 வது வார்டுக்குட்பட்ட ராமமூர்த்தி சாலை மற்றும் கே.கே.எஸ்.எஸ்.என் நகர் பகுதியில் கடந்த 6 மாதங்களாக குடிநீர் வழங்கப்ப டவில்லை. இதனால் வெகுண்டெழுந்த பொது மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்ட த்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அப்பகுதியில் உள்ள பிரதான குடிநீர் குழாய்கள் சேதமடைந்தன. இதையடுத்து, முத்தம்மாள் சாலை, ராமமூர்த்தி சாலை, படேல் சாலை, சுப்பையா தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. பின்பு, நகராட்சி அதிகாரிகள் பிரதான குடிநீர் குழாய்களை ஓரளவு சரி செய்தனர். எனவே, சுப்பையா தெரு, முத்தம்மாள் சாலை, படேல் சாலை ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் முறைப்படுத்தப்பட்டது.

ஆனால், ராமமூர்த்தி சாலை மற்றும் கே.கே.எஸ்.எஸ்.என். நகர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்களை நகராட்சி அதிகாரிகள் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால், அப்பகுதியினர் கடந்த 6 மாதங்களாக குடிநீரின்றி அவதிப்பட்டனர். பின்பு, விருதுநகர் நகராட்சியில் புகார் செய்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் குழாய்களை சீரமைக்காமல், ஒரு சில நாட்கள் மட்டும் லாரி மூலம் குடிநீர் வழங்கியுள்ளனர்.

எனவே, பொது மக்கள், தனியார் குடிநீர் லாரிகளில் குடம் ஒன்றுக்கு ரூ.10 முதல் ரூ. 15 வரை கொடுத்து தண்ணீர் வாங்கியுள்ளனர். இந்நிலையில், ஆவேசமடைந்த பொது மக்கள் புதனன்று காலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, நகராட்சி ஆணையாளர் (பொ) ராமதிலகம், பொறியியல் பிரிவு அதிகாரி முருகேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்பு, ஒரு வாரத்திற்குள் குழாய் உடைப்புகள் சீரமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: