காவி அலை (saffron surge) என்ற ஆங்கில நூலின் ஆசிரியரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான தருண் விஜய்க்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். சவர்க்கார், கோல்வால்கர் வகையறாக்களின் அழுகல் கருத்துக்களை வேகவைத்து தயாரித்த மோடியிச அரசியலின் திசையை அவரது இன ஆணவ உளறல் காட்டிக்கொடுத்துவிட்டது. இந்த தடுமாற்றம் ஒரு ஆபத்தான எதிர்காலத்தை அடையாளம் காட்டுகிறது என்பதை இந்தியாவின் தொன்மை வரலாறு, இரண்டு உலக யுத்தங்களின் வரலாறு, அறிவியல் ஆய்வுகளின் வரலாறு ,இம் மூன்றையும் அறிந்தவர்களே உணரமுடியும்.

அறிவியல்செய்திகள் இந்திய மக்களிடையே குறிப்பாக வட மாநிலங்களிலே பரவாத காரணத்தினால் வாஜ்பாயிசம், மோடியிசமாகி, மோடியிசம் கோரக்நாத் வம்ச யோகி ஆதித்யநாத்யிசமாகி இன்று உ.பி யில் ருத்ர தாண்டவம் ஆடுகிறது. நாளை பொருளாதார வளர்ச்சியை 10 சதமாக உயர்த்த மண்டை ஓட்டை பூசிக்கும் அகோர வம்சவழியில் ஒரு பைரவா அவதாரம் மைய ஆட்சியில் அமர்ந்து துஷ்ட நிக்ரக. இஷ்டபரிபாலனம் செய்ய வாய்ப்பு உண்டு என்பதையே இந்த உளறல் காட்டுகிறது, கேள்விக்கு உட்படுத்தவேண்டிய அறிவியல் விளக்கங்களை, மத நம்பிக்கைபோல் மூடநம்பிக்கைகளாக ஆக்கும் வேலையை இந்துத்துவா செய்கிறது என்பதை மறந்துவிடலாகாது.

நாடு அடிமைப்பட்டிருந்த காலத்தில் நடந்ததை பொருளாதார வளர்ச்சியின் பெயரால் மீண்டும் திணிக்கும் முயற்சி என்பதையே தருண் விஜய் பிராய்டியன் நாக்கு தடுமாற்றம் காட்டுகிறது. 1857ல் இந்திய சிப்பாய்களின் எழுச்சியால் பிரிட்டிஷ் ஆட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியானது. பிளவுபடுத்தி ஆள்வது என்ற கொள்கைக்கு பழைய சம்பிரதாயங்களை புகுத்துவதோடு புதிய உக்திகளும் தேவைப்பட்டன. அன்று ஐரோப்பாவை கலக்கி வந்த இனவாரி கோட்பாடு உதவும் என்று கருதிபிரிட்டிஷ் அரசு அதனை ஏற்றுக்கொண்டது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் இந்திய மக்களை இனவாரியாக பிரித்துக் கணக்கிட முடிவு செய்தனர். ராணுவத்திற்கும், அரசு பதவிகளுக்கும் ஆள் எடுப்பதற்கும்பதவி உயர்வு கொடுப்பதற்கும் இனவாரி கோட்பாடு அடிப்படையானது. இதைவைத்து குற்ற இனம்என்று ஒருபகுதிமக்களை ஒடுக்கியது 1871ம்ஆண்டு கிரிமினல் டிரைப்ஸ்ஆக்ட் ( குற்ற இனச்சட்டம் )கொண்டு வந்தது. பிராமணர்களை ஆரிய இனமாக கருதி உயர்பதவிகள் வழங்கினர். மற்றவர்களை நீக்ரோய்டு இனமாக முத்திரை குத்தினர் மட்டரக இனப்பட்டியலிலே வைத்து உயர்பதவிகளை மறுத்தனர்.

பிரிட்டிஷ் அரசின் இன ஆணவ கோட்பாடு சில ஆய்வாளர்களால் அன்றே கேள்விக்குறியானது. 1899ம் ராட்செல் என்ற மனித இயல் ஆய்வாளர் எழுதிய மனிதகுல வரலாறு என்ற நூல் பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் பின்பற்றும் கொள்கை அறிவியல் அடிப்படை கொண்டதல்ல அரசியல் என்பதை அன்றைய கண்டுபிடிப்புக்களை வைத்து சுட்டிக்காட்டியது. இந்திய வட்டாரத்திற்குள் பல இனங்கள் நுழைந்து வாழ முற்பட்டதால் இன அடையாளங்கள் உடைக்கப்பட்டு உருட்டப் பட்டுவிட்டன. பலஇனங்கள் கலந்து கட்டிய மக்களாக உள்ளனர். ராட்செல் முன்மொழிந்த இந்த விளக்கத்தை தொடர்ந்து ஆய்வாளர்கள் இந்திய மக்கள் பல இனங்களின் கலவை என்பதை ஏற்றுக்கொண்டனர்.

\ஆனால் இனவாதம் என்பது அறிவியலடிப்படையற்ற அரசியல் சித்தாந்தம் என்பது பிரிட்டன் மட்டுமல்ல ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அரசுகளின் அரசியல் சித்தாந்தம் என்பதை அவர்களது சட்டங்களின் வரலாறு கூறுகிறது. 1924ல் அமெரிக்க அரசு கருப்பின மக்களை வெள்ளை இன மக்கள் திருமணம் செய்வதை தடுக்கும் சட்டமியற்றியது. கருப்பர்களை ஒடுக்கும் சட்டங்கள் 1967 வரை ரத்துசெய்யப்படாமல் இருந்தன

மானுட உடல் ஆய்வும் இனவாதமும்:
19ம் நூற்றாண்டில் பிரெஞ்சு நாட்டை சார்ந்த ஜீன்-பாபிட்சே- லமார்க், பிரிட்டன் நாட்டு டார்வின் மற்றும் ஆல்ஃபிரெட் ரசல் வாலெஸ் போன்றோர் அலைந்து திரட்டிய ஆய்வுகளால் ஜீவ ராசிகளின் ‘பரிணாம வளர்ச்சி’ மற்றும் ‘இயற்கை தேர்வு செய்யும் உயிரினங்கள்’ பற்றிய கோட்பாடுகள் உருவாகின. இந்த ஆய்வுகளில் குறிப்பாக, ‘இயற்கையின்தேர்வு’ (natural selection)என்ற கோட்பாட்டை டார்வின் முன் மொழிந்தார், இதன் மூலம் சிலஉயிரினங்கள் மறைந்து போன தற்கான காரணங்களை விளக்கிட முயன்றார்.

டார்வின் முன்மொழிந்த கோட்பாட்டை ஹெர்பர்ட் ஸ்பென்சர் என்ற சமூக இயலாளர் தகுதி உள்ளதே வாழும் (survival of the fittest) என்பது இயற்கையின் அசைக்க முடியாத நியதி என்று திருத்துகிறார். டார்வினும் அதனை ஏற்கிறார் (இது தவறான விளக்கம் என்று அன்றே மார்க்ஸ் விமர்சித்தார்) ஹெர்பர்ட் ஸ்பென்சர் அதனை மானுடத்திற்கும் பொருத்துகிறார். மானுடர்களையும் இனங்களாக பிரித்து வாழத் தகுதி உள்ள மானுடம் வாழத்தகுதியற்ற மானுடம் என பிரித்தார். வாழத் தகுதியற்ற மானுட இனங்களை இனவிருத்தி ஆகாமல் பார்த்துக் கொள்வதா? கால் நடைகள் போல் பேணுவதா என்ற சர்ச்சையில் அரசியல் நிபுணர்கள் இறங்கினர்.

இவரைத் தொடர்ந்து ஜார்ஜ் வாச்சர்-டே-லாபவுஜ் (பிரான்ஸ்)மேடிசன் கிரான்ட் (அமெரிக்கா) வில்லியம்-இசட்-ரிப்பிலி (பிரிட்டன்) போன்றவர்கள் மானுடத்தை இனவாரியாக பிரிக்க மண்டை ஓட்டின் அமைப்பை அளவுகோலாக்கினர். அதோடு புத்தி கூர்மையை கணக்கிடும் ஒரு கோட்பாட்டையும் உருவாக்கினர். அதன் படிமூளைக்கு கவசமாக இருக்கும் மண்டை ஓட்டுக்கும் புத்தி கூர்மைக்கும் தொடர்பு இருப்பதாக கணக்கிட்டு செஃபாலிக் இன்டெக்ஸ் என்ற சூத்திரத்தையும் உருவாக்கினர்.

ஐரோப்பாவில் மூன்று வித மானுட இனங்கள் இருப்பதாக அறிவித்தனர். அமெரிக்க ஆய்வாளர் மேடிசன் கிரான்ட் என்பவர் செஃபாலி இன்டெக்ஸ்படி வெள்ளையர்களே உலக நாகரீகத்தை உருவாக்கும் புத்தி கூர்மை படைத்த இனம் என்ற கோட்பாட்டை உருவாக்கி ஆரிய இன ஆணவப் பார்வைக்கு வித்திட்டார். ஹிட்லர் ஒரு படிமேலே போய் மானுடம் தூய்மையான புத்தி கூர்மையுள்ள அழகான இனமாக உரு வாக மட்டரக யூத மற்றும் ஆரிய இனமல்லாத இனங்களை களையெடுக்க வேண்டுமென முடிவு செய்தான் அதன் விளவை உலகம் அறியும். இன்றும் மானுடத்தை இன அடிப்படையில் வகுத்துப் பார்க்கும் ஆய்வு ஒரு அரசியல் குண்டாக வெடிக்கும் ஆபத்தோடு தொடர்கிறது.

ஹோமோ சாப்பியன்:
முதலில் 1960 களில் ஆய்வாளர்கள், ஹோமோ சாப்பியன் என்ற மானுடமே ஆப்பிரிக்காவில் தோன்றி உலகெங்கும் பரவியதாக உலகெங்கிலும் புதைந்து கிடக்கும் எலும்புகளை வைத்து முடிவிற்கு வந்தனர். மரபணு ஆய்வு வந்த பிறகு ஐரோப்பாவிலும் ரஷ்யாவிலும் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த புதிய தடயங்களை வைத்து புதிய விளக்கம் தருகின்றனர். அதன்படி மூன்றுவகை குரங்கு இனங்கள் மானுடமாக மாறியதாகவும் இவைகளில் இரண்டு அழிந்துவிட்டதாகவும் ஹோமியோ சாப்பியன் மட்டும் மிஞ்சியதாகவும் மரபணு நிபுணர்கள் கூறுகிறார்கள்,

வேறு சில ஆய்வாளர்கள் இந்த மூன்றின் மரபணுக்கள் கலந்தே இன்றையமானுடம் உள்ளது என்று சுட்டிக்காட்டு கிறார்கள். சமூக இயலாளர்களும் அரசியல் நிபுணர்களும் இதை சர்ச்சைக்குரிய பொருளாக உருட்டி வருகின்றனர். வெள்ளையர்கள் ஹோமோ சாப்பியன்கள் அல்ல அவர்கள் நியான்டர்த்தல் என்ற மூளையும் உடல் அமைப்பும் ஆற்றல் மிகுந்த இனம், அதனை மட்டரக ஹோமியோ சாப்பியன்கள்அழித்துவிட்டனர் என்ற கதையை கட்டவிழ்த்து விடுகின்றனர். (Harari, Yuval Noah. Sapiens: A Brief History of Humankind. HarperCollins. Kindle Edition.) இதன் மூலம் வெள்ளையர்களே உலகை ஆளப் பிறந்தவர்கள் என்ற இன ஆணவத்தை மக்கள் மத்தியில் மீண்டும் விதைக்க முயலுகின்றனர், இனவாத அரசியலுக்கெதிரான போர் வலுப்படவேண்டும் என்ற நிலை நீடிக்கிறது.

ஹிட்லரின் இனத் தூய்மை கோட்பாடு அரசியல் ரீதியாக ஆபத்தானது என்பதை உலகம் அறிந்து கொண்டது, ஆனால் இனத்தூய்மை பேணுதல் மனித குலத்திற்கே ஆபத்தானது என்பதை இப்போதைய ஆய்வுகள் கூறுகின்றன. சாதி தூய்மை பாராட்டும் இந்தியாவில் ஆய்வுகள் நடத்தி முடிவுகளை விளக்கி ‘நேச்சர்’ என்ற ஆங்கில இதழ் 2009ல் வெளியிட்ட செய்தி நம்மை எச்சரிக்கிறது. அதன்படி இந்தியாவில் சாதி தூய்மையை பேண அகமண முறை நிலவுவதால் ஐரோப்பியர்களைவிட மரபணுக்களின் சாயல் வேறுபாடுகள் அதிகம் உள்ளன. ஆண் மலட்டுத்தன்மை, நீரிழிவு, கண் அழுத்தம் போன்ற 67 வகைநோய்கள் பரம்பரை வியாதிகளாக ஆகும்போக்கிற்கு இதுவே அடிப்படை என்கிறது.

பல இனங்களின் கலவையாக இருந்த காலத்தில் தத்துவத்திற்கும் நோய் சிகிச்சைக்கும் ஏன் பிரெஞ்சு புரட்சிக்கே ஆதர்சமாக இருந்த இந்தியா வர்ணாஸ்ரம தர்மத்தால் நோய் கிடங்காகி விட்ட கொடுமையை உணரும் தருணம் வந்துவிட்டது.
பிரெஞ்சு புரட்சியின் தத்துவ மேதைகளில் ஒருவரான வால்டேருக்கு சமத்துவம் சகோதர த்துவம் ‘நேர்மை, எளிமை பற்றி உணர’ புத்தரின் தத்துவமே ஆதர்சமாக இருந்தது என்பதை அவரது தத்துவ அகராதியை படித்தவர்கள் அறிவர். பிற மதங்களை கடுமையாக தாக்கிய வால்டேர் புத்தமதத்தை விமர்சிக்கையில் மத ஓட்டை உடைத்து தத்துவத்தை பிரித்துப் பார்க்க கூறுகிறார். வேதாந்திகளை எதிர்த்த சிரமணர் வழிவந்த புத்தத்தை பிராமண சம்பிரதாயங்கள் துரத்திவிட்டு வர்ணாஸ்ரம தர்மத்தை திணித்த வரலாறு வால்டேருக்கு தெரியாது, தெரிந்திருந்தால் நெப்போலியன் என்ற சர்வாதிகாரி தோன்றுவது குறித்து எச்சரி த்திருப்பார். ஆனால் நமக்கு அந்த வரலாறு தெரியாவிட்டால் பைரவாவின் துஷ்டநிக்ரக இஷ்ட பரிபாலனம் என்ற சர்வாதிகார ஆட்சி காத்துக் கிடக்கிறது என்பதையே காவி அலை காட்டுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.