காரகஸ், ஏப். 20-
18 ஆண்டுகளாக இடதுசாரி கொள்கைகளுடன் ஆட்சி நடந்து வரும் வெனிசுலாவில் கலவரங்களையும் அதைத் தொடர்ந்து அரசியல் கலகத்தையும் தூண்டி, ஆட்சியை கவிழ்க்கும் நோக்கத் துடன் அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது கைக்கூலிகளை ஏவியுள்ளது; அந்தக் கைக்கூலிகள் வெனிசுலாவில் கடந்தசில வாரங்களாக தங்களது வன்முறை வெறியாட்டங்களை தீவிரப்படுத்தி யுள்ளனர். அதை எதிர்த்து இடதுசாரி ஆதரவாளர்களும், முற்போக்கா ளர்களும், பொலிவாரியன் புரட்சியில் நம்பிக்கை கொண்டிருக்கும் லட்சக்கண க்கான பொதுமக்களும் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

வெனிசுலாவில் மறைந்த மகத்தான தலைவர் சாவேசைத் தொடர்ந்து நிக்கோலஸ் மதுரோ தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. சாவேஸ் முன்னெடுத்த பொலிவாரியன் புரட்சி யின் கொள்கைகளை உயர்த்திப் பிடித்து இடதுசாரிப் பாதையில் வீறு நடைபோட்டு வரும் மதுரோவின் ஆட்சியை வீழ்த்தும் நோக்கத்துடன் கடந்த பல்லாண்டுகளாக அமெரிக்க ஏகாதிபத்தியம் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு ள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி மற்றும் சர்வதேச பொருளாதார நெருக்கடி போன்ற பல அம்சங்கள் வெனிசுலாவின் பொருளாதாரத்தையும், பாதித்த பின்னணியில், அங்கு வலதுசாரி சிந்தனைகொண்ட குழுக்களை ஒன்றிணைத்து நிதியும் வழங்கி மதுரோ அரசுக்கு எதிராக இறக்கிவிட்டது அமெரிக்காவின் சிஐஏ உளவு ஸ்தாபனம்.

இந்தப் பின்னணியில் வெனிசுலாவின் வலதுசாரி குழுக்களின் இயக்கமாக ஒன்றிணைக்கப்பட்ட எம்.யு.டி எனும் அமைப்பின் தலைவர் ஜூலியோ போர்ஜஸ், கடந்த சில வாரங்களாக வன்முறை வெறியாட்டம் மிக்க கலவரங்களை தூண்டி வருகிறார். இவரது தலைமையிலான கும்பல்கள் வெனிசுலா தலைநகர் காரகஸிலும், இதர சில இடங்களிலும் பேரணி என்ற பெயரிலும் மதுரோ அரசுக்கு எதிரான போராட்டம் என்ற பெயரிலும் வன்முறையை கட்ட விழ்த்துவிட்டுள்ளனர்.

குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தலைநகர் காரகஸில் ஒரு உயர்நிலைப் பள்ளி, ஒருசமுதாய சுகாதார வளாகம், அரசு மானியத்துடன் செயல்படும் உணவு சந்தை கள் மற்றும் பல்வேறு அமைச்சகங்களின் அலுவலகக் கட்டிடங்களில் இந்த வலதுசாரி கும்பல்கள் தாக்குதல் நடத்தி சூறை யாடியுள்ளனர். மதுரோ அரசுக்கு எதிராக மெகா பேரணி என்ற பெயரில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து வலதுசாரி ஆதர வாளர்களை திரட்டி புதனன்றும் காரகஸ் நகரில் வன்முறையைத் தூண்டினர்.

இவர்களது வன்முறையை பாது காப்பு காவலர்கள் தடுக்க முயற்சித்த போது வன்முறையாளர்கள் துப்பாக்கிச் சூட்டிலும் ஈடுபட்டனர். பொதுச் சொத்துக்களுக்குத் தீ வைத்தனர். அரசு கட்டிக்கொடுத்த வீட்டு வசதி குடியிருப்பு வளாகத்திற்குள் புகுந்து இந்த வன்முறையாளர்கள் சரமாரியாக துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர். இதில் 13 வயது சிறுவன் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து உயிரிழந்தான். இந்த வீட்டு வசதி குடியிருப்புக்குள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 83 வயதான மூதாட்டி ஒருவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சித்தபோது அந்த வாகனத்தைச் செல்ல விடாமல் வன்முறையாளர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் மருத்துவ சிகிச்சை கிடைக்கப் பெறாமல் அந்த மூதாட்டி உயிரிழந்தார்.

ஊடகங்களின் சூதாட்டம்:
ஆனால் இந்த சம்பவங்களின் உண்மைத் தன்மையை முற்றாக திரித்து, ஏகாதிபத்திய ஆதரவு ஊடகங்கள் புதனன்று உலகம் முழுவதும் திட்டமிட்ட பொய்ச் செய்தியை பரப்பின. வெனி சுலாவில் இடதுசாரி மதுரோ அரசு, தனக்கு எதிரான போராட்டத்தை துப்பாக்கிச் சூடு நடத்தி ஒடுக்க முயற்சித்தது என்றும், துப்பாக்கிச்சூட்டில் பலரை கொன்றுகுவித்துவிட்டது என்றும் திட்டமிட்ட பொய்ச் செய்திகளை உலகின் ஒட்டுமொத்த ஊடகங்களும் பரப்பின. மேற்கத்திய ஊடகங்கள் பரப்பிய இந்தச் செய்திகளை தமிழகத்தின் ஊடகங்களும் அப்படியே வாந்தி எடுத்தன. ஆனால் இந்த ஊடகங்கள் மற்றொரு மிக முக்கிய உண்மையை சொல்ல மறுத்துவிட்டன.

காரகஸ் நகரின் ஒரு பகுதியில் வலதுசாரி வன்முறையாளர்கள் வெறியாட்டம் நடத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில் காரகஸ்ஸின் பிரதான பகுதியில் லட்சக்கணக்கான மக்கள் மதுரோ அரசுக்கு ஆதரவாகவும், கடந்த சில வாரங்களாக அமெரிக்க கைக்கூலிகள் நடத்தி வரும் வன்முறை வெறியாட்ட த்திற்கு எதிராகவும் பிரம்மாண்டமான பேரணியை நடத்தினர். இந்தப் பேரணியில் காரகஸ் நகரத்து மக்கள் எவ்வித அழைப்பும் இன்றி தாங்களாகவே வீதியில் இறங்கி சாவேசின் உருவப் படங்களை ஏந்தி, செம்பதாகைகளை உயர்த்திப் பிடித்தவாறு அணிவகுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், வன்முறை வெறியாட்ட த்திற்கு எதிராகவும் முழக்கமிட்டனர். இந்தப் பேரணியில் பங்கேற்று பேசிய ஆளும் மதுரோ அரசை வழி நடத்தும் வெனிசுலா முற்போக்கு கூட்டணியின் தலைவர் டியாஸ்டாடோ காபெல்லா, வெனிசுலாவில் கலகத்தை தூண்ட முயற்சிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். ‘‘இன்றைக்கு காரகஸ் வீதிகளில் இறங்கி யுள்ள எங்களது மக்கள் அமைதியின் செய்தியை கொண்டுவந்திருக்கிறார்கள்; இது இந்த நாட்டின் எதிரிகளுக்கு எதிரான செய்தி; ஏகாதிபத்தியத்திற்கு எச்சரிக்கிறோம்… உங்களுக்கு எதிரான போராட்டக் களத்தில் நாங்கள் தயாராக நிற்கிறோம்; உங்களை வீழ்த்துவதற்காக எப்போதும் வீதிகளில் தயாராக காத்திருப்போம்’’ என்று காபெல்லா முழக்கமிட்டார்.

இந்த பேரணி குறித்து அறிக்கை வெளியிட்ட வெனி சுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, ‘‘வெனிசுலாவின் மக்கள் என்றென்றும் வலதுசாரிக் கொள்கைகளை எதிர்க்கிறார்கள்; வலது சாரிகள் வளர்த்தெடுக்க முயற்சிக்கும் வன்முறை வெறியாட்டப் பாதையை வெறுக்கிறா ர்கள் என்பதையே இந்த மாபெரும் பேரணி உணர்த்துகிறது’’ என்று குறிப்பிட்டார். ‘‘பொலிவாரியன் புரட்சி வெனிசுலாவில் என்றென்றும் நீடிக்கும்; பொலி வாரியன் புரட்சியே அமைதியை பாதுகாக்கும்; கலவரம் தூண்டுபவர்களை ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம்; வெனி சுலாவில் அமைதியை சீர்குலைத்து அரசை வீழ்த்தி ஒட்டுமொத்த நாட்டையும் கைப்பற்றும் நோக்கத்துடன் அமெரிக்க ஏகாதிபத்தியம் திட்டமிட்டு கலகத்தை தூண்டிவருகிறது. ஆனால் அது வெற்றிபெற அனுமதிக்கமாட்டோம்’’ என்று மதுரோ கூறினார்.

காரகஸ் நகரில் புதன்கிழமை நடைபெற்ற இந்த பிரம்மாண்ட மக்கள் பேரணியை பற்றி ஒரு வார்த்தை கூட மேற்கத்திய ஊடகங்கள் சொல்லவில்லை. அது மட்டுமல்ல, இந்த மாதத்தில் மட்டும் இது மதுரோ அரசுக்கு ஆதரவாக நடக்கும் 6வது பிரம்மாண்ட பேரணி என்பதையும் சொல்ல மேற்கத்திய ஊட கங்கள் மறந்துவிட்டன.

டெலிசூர் டி.வி.

Leave A Reply