திருவண்ணாமலை,
வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித்  தவித்து வரும் விவசாயிகளை, மின் கட்டணம் செலுத்துவதற்கு திருவண்ணாமலை மின்வாரிய அலுவலகம் அலைக்கழித்து வருவதால் தற்கொலை செய்துகொள்ள வழிவகுப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் படி அக்கிரகாரம் கொல்ல கொட்டாய் பகுதியில் வசிப்பவர் ராஜேந்திரன் (40). இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் தோட்டப்பயிர்களை சாகுபடி செய்தார். அதற்கு தோட்டக்கலை அடிப்படையில் மின் இணைப்பு (எண்: 3654) பெற்றுள்ளார். கடந்த 6 மாதமாக நிலத்தில் நீர்மட்டம் குறைந்து விட்டது. கிணறு வறண்டு விட்டது. நிலங்கள் தரிசாகிக் போனது. சில நாட்களுக்கு முன்பு அவருக்கு செல்பேசிக்கு மின் கட்டணம் செலுத்த வேண்டும் என குறுஞ்செய்தி வந்தது அதில், மின் கட்டணமாக ரூ.362 கட்டவேண்டும் கடைசி தேதி ஏப்.19 என தகவல் வந்தது.

அதையடுத்து திருவண்ணாமலை மின்வாரிய அலுவலகத்திற்கு, கடைசி நாளான ஏப். 19 அன்று,  மின் கட்டணம் செலுத்தச் சென்றார் விவசாயி ராஜேந்திரன். ஆனால் மின் கட்டணம் செலுத்துமிடத்தில் உங்களுக்கு கூடுதல் லோடு கட்டண வைப்பு தொகை, டெஸ்டிங் பீஸ், டெவலப்மெண்ட் பீஸ் என்று சுமார் ரூ.4500 வந்துள்ளது அதை மொத்தமாக கட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அது குறித்து விவசாயி அருகிலிருந்த ஆன் லைன் சென்டரில் தகவல் கேட்டதன் பேரில், மின் கட்டணம் ரூ.362 கட்டுவதற்கு ஏப் 19 கடைசி தேதியென்றும், கூடுதல் கட்டணங்கள் செலுத்த கடைசி தேதி மே 19 என்றும் தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் மின் கட்டணம் ரூ. 362 மட்டும் இன்று கட்டுகிறேன் என்று கூறியபோதும் மின்வாரிய அலுவலகத்தில் முடியாது என்று மறுத்துவிட்டனர்.

கடைசி நாளில் மின்கட்டணம் கட்டவில்லையெனில், மறு நாள் விவசாய மின் இணைப்பு துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது. என்னை போலவே பல விவசாயிகள் வந்து மின் கட்டணம் செலுத்த முடியாமல் ஏமாந்து சென்றுள்ளனர். என்று வேதனை தெரிவித்த விவசாயி ராஜேந்திரன், கூடுதல் கட்டணம் குறித்து எனக்கு தகவல் ஏதும் வரவில்லை, போனில் எஸ்.எம்.எஸ், அறிவிப்பு கடிதம் ஏதும் வரவில்லை, மின்வாரிய அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலுக்கு விவசாயிகள் பலியாவது நியாயம் தானா என்று கேள்வி எழுப்பினார்.
ஏற்கனவே, மழை இன்றி, கிணற்றில் தண்ணீர் வறண்டு போய், சாகுபடி பயிர்கள் தீய்ந்து போன நிலையில், வாங்கியுள்ள கடன்களை அடைப்பது எப்படி என்று வேதனையில் வாடுகின்றனர் விவசாயிகள்.

இந்நிலையில்  திருவண்ணாமலை மின்வாரிய அலுவலகத்தின் இந்த பொறுப்பற்ற தன்மை விவசாயிகளுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளாதாகவும், ஒரு கட்டத்தில் அவர்களை தற்கொலைக்கு தூண்டுவதாகவும் கூட இத்தகைய நிகழ்வுகள் மாறிவிடும் சூழல் உள்ளது.  எனவே திருவண்ணாமலை மாவட்ட மின்வாரிய அதிகாரிகள், வறட்சியில் மனம் வாடியுள்ள விவசாயிகளை மேலும், வேதனைக்கு ஆளாக்காமல்,  மின்வாரியம் குறிப்பிட்டுள்ள தேதிகளில் முறையாக கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று மாவட்ட விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave A Reply