விருதுநகர், ஏப்.20 –
விருதுநகரின் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ள தெப்பக்குளம் சுட்டெரிக்கும் வெயிலால் வேகமாக வறண்டு வருகிறது. இதனால், அதனைச் சுற்றியுள்ள ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விருதுநகரின் மையப் பகுதியில் தனியார் டிரஸ்டுக்கு சொந்தமான தெப்பக்குளம் உள்ளது. இந்த தெப்பக்குளத்திற்கு மழைக் காலத்தில் பேராலி கண்மாய் மற்றும் வடமலைக் குறிச்சியில் உள்ள கௌசிகா ஆற்றுப்படுகை ஆகிய இடங்களிலிருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு சேமிக்கப்படுகிறது. இந்த தெப்பக்குளத்தின் நான்கு திசைகளிலும் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் பொது மக்கள் இலவசமாக தண்ணீர் பிடித்து வருகின்றனர். மேலும் தெப்பக் குளம் நிறைந்தால், அதிலிருந்து வெளியேறும் உபரி நீர், நகராட்சி அலுவலகம், பெரிய பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் உள்ள கிணறுகளில் அந்த தண்ணீர் கிடைக்கும் வகையில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதனால், சிறந்த மழை நீர் சேமிப்பு மையமாக இந்த தெப்பக் குளம் திகழ்ந்து வருகிறது.

இந்நிலையில், பருவ மழை பொய்த்துப் போனதால், கடுமையான வறட்சி நிலவுகிறது. மேலும், எக்காலத்திலும் இல்லாத வகையில் கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால், தெப்பக் குளத்தில் உள்ள தண்ணீரின் அளவு வேகமாக குறைந்து வருகிறது. இதனால், குளத்தைச் சுற்றியுள்ள 13,14,15,21,22,24,29 ஆகிய வார்டுகளில் உள்ள நகராட்சி ஆழ்துளை கிணறு மற்றும் குடியிருப்புகளில் உள்ள ஆழ்துளை கிணறுகள் நிலத்தடி நீரின்றி வறண்டு விட்டன. இதனால், பொதுமக்கள், பயன்பாட்டிற்கு தண்ணீரின்றி அவதிப்படுகின்றனர்.

Leave A Reply