வேலூர்,
சாதி சான்றிதழ் கோரி இருளர், காட்டு நாயக்கன் பழங்குடியின மக்கள் ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில்,  ராணிப்பேட்டை வருவாய்க் கோட்டத்திற்குட்பட்ட ஆற்காடு, வாலாஜாபேட்டை, அரக்கோணம், நெமிலி ஆகிய வட்டங்களில் வசிக்கும் பழங்குடி காட்டுநாயக்கன், இருளர் இனத்தைச் சேர்ந்த ஆண், பெண்கள், குழந்தைகள் என 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

இதனையடுத்து, வருவாய் கோட்டாட்சியர் ராஜலட்சுமி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் சரவணன் பேசுகையில், “ராணிப்பேட்டை கோட்டத்திலுள்ள பழங்குடி இனத்தை சேர்ந்த காட்டு நாயக்கன், இருளர் இன மக்கள், சாதிச் சான்று கோரி மனு செய்து பல ஆண்டுகளாகியும் வழங்காமல் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்” என்றார்.

சாதிச் சான்று இல்லாததால் பழங்குடியின மாணவர்கள் மேற்படிப்புக்காக விண்ணப்பிக்கவோ, கல்லூரிகளில் சேரவோ முடியவில்லை. பள்ளிகளில் இருந்து சாதிச்சான்று கேட்டு மாணவர் களை ஆசிரியர்கள் திருப்பி அனுப்பி விடுகின்றனர். மாணவர்கள் படும் அவதியைப்  புரிந்து கொண்டு சாதிச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு விளக்கம் அளித்த கோட்டாட்சியர்,“ உங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்கிறேன். ஏற்கெனவே கொடுத்துள்ள விண்ணப்பங்களை பரிசீலித்து அனைவருக்கும் சாதிச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.“சாதிச்சான்று கிடைக்கும் வரை இந்த இடத்திலிருந்து செல்ல மாட்டோம்”, எனக் கூறி கோட்டாட்சியர்  அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.

பிறகு, மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி. டில்லிபாபு தலைமையில் வருவாய் கோட்டாட்சியரை மீண்டும் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், காலதாமதம் செய்யாமல் உடனடியாக சாதிச் சான்று வழங்க வேண்டும். பழங்குடியின மக்களின் குறைகளைக் களைந்திட, செய்யாறு கோட்டத்தில் நடைபெறுவது போல் பழங்குடியினர் குறைதீர்வு கூட்டத்தை மாதம் தோறும் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அப்போது, “ 3 மாதத்திற்குள் ஒவ்வொரு பகுதியிலும் சிறப்பு முகாம்கள் நடத்தி, ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கும், புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு சாதிச்சான்று வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், பள்ளி மாணவர்களுக்கு தனி கவனம் செலுத்தி சாதிச்சான்று மிக விரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக” கோட்டாட்சியர் ராஜலட்சுமி உறுதியளித்தார்.

இதனையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தனர். போராட்டத்துக்கு, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் அரக்கோணம் டி.பன்னீர் செல்வம், ஆற்காடு எஸ்.பத்மினி, வாலாஜா பரிமளா, சோளிங்கர் ரேணு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஏ.சி.சண்முகம், விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் எல்.சி. மணி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் தா.வெங்கடேசன், விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் சி.எஸ். மகாலிங்கம், விவசாயிகள் சங்க வாலாஜாபேட்டை வட்டத் தலைவர் நிலவு குப்புசாமி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

Leave A Reply