வணக்கம்.
தாமிரபரணி ஆற்றிலிருந்து பெப்சி மற்றும் கோகோ கோலா கம்பெனிகள் தண்ணீரை எடுத்து விற்பதற்கு தடை இல்லை என்று மார்ச் மாதம் 2ம் தேதி தீர்ப்பளித்து விட்டீர்கள். அரசு தவறு செய்தால் கூட எல்லாத்தரப்பு மக்களும் நிவாரணம் தேடி உங்களைத்தான் அணுகுகிறார்கள். எனவே, தங்களின் தீர்ப்பில் அனைத்தையும் அலசி ஆராய்ந்து தீர்வு சொல்லியிருப்பீர்கள். ஆயினும், ஒரு எளிய மனிதனாக தாமிரபரணி தீரத்தில் மக்கள் அனுபவிக்கும் சில துயரங்களை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருவது அவசியம் என்று நினைக்கிறேன்.

தங்களுக்கு தெரிந்திருக்கும். தாமிரபரணி ஆற்றில் பெப்சியும், கோக்கும் தண்ணீர் எடுத்து விற்க தடை இல்லை என்று தாங்கள் தீர்ப்பெழுதிய அந்த தினத்தில் தூத்துக்குடி அனல்மின்நிலையத்தின் 2 அலகுகள் உற்பத்தியை நிறுத்தி வைத்திருந்தது. காரணம் அதற்கு தண்ணீர் கிடைக்கவில்லை. தாங்கள் தீர்ப்பளித்த 2 நாட்களுக்குள் கோவில்பட்டி நகராட்சி ஆணையர் ஒரு ஆணை வெளியிட்டிருந்தார். அதன்படி நிலைமை சீரடையும் வரை கோவில்பட்டி நகராட்சிப்பகுதிக்குட்பட்ட திரையரங்குகள், மற்றும் திருமண மண்டபங்களுக்கு தாமிரபரணி தண்ணீர் நிறுத்தப்பட்டிருக்கிறது என்று அவர் அறிவித்திருந்தார். தாங்கள் தீர்ப்பெழுதிய அன்றைய தினத்திலும் குடிநீருக்காக மக்கள் தனியார் லாரிகளை எதிர்பார்த்தபடி வேலைக்கு செல்லாமல் வழிமேல் விழி வைத்து காத்திருந்ததை நீங்கள் அறியாதிருக்க மாட்டீர்கள்.

தீர்ப்பு சொல்வதற்கு முன்பாகவே பாசனத்திற்கான தண்ணீர் நெல்லுக்குத்தான் முன்னுரிமை, வாழைக்கு கிடையாது என்று நிர்வாகம் சொல்வதையும் அதை எதிர்த்து விவசாயிகள் போராடியதையும் ஒவ்வொரு ஆண்டும் தூத்துக்குடி மாவட்டம் கண்டு வந்திருக்கிறது. அரசு இதை உங்களிடம் சொல்லியிருக்க வேண்டும். இல்லை என்றாலும் தாங்கள் கேட்டிருக்க வேண்டும்.

தாமிரபரணியிலிருந்து தூத்துக்குடியைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் தண்ணீர் கடைசி குளமான பேய்க்குளத்திலிருந்து ஒரு காலத்தில் எடுக்கப்பட்டது. ஆண்டுதோறும் தாமிரபரணித்தண்ணீர் சில மாதங்கள் அந்த குளத்தை எட்டிப்பார்க்காததால் இப்போது ஸ்ரீவைகுண்டம் அணையின் உட்பகுதியிலிருந்து ராட்சத பம்புகள் மூலம் உறிஞ்சி செல்கின்றனர். முப்போகம் இருபோகமாகி இப்போது ஒருபோகமாகிக் கொண்டிருக்கிறது. மணல்கள் அள்ளப்பட்டதன் காரணமாக ஆற்றின் மட்டம் கீழிறங்கி வழியோரத்தில் பல பகுதிகளில் தென்னை மரங்கள் பட்டுக்கிடக்கின்றன. தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்கிக் கொண்டிருந்த பைப் லைன் பழுதாகி புதிய திட்டம் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. கோவில்பட்டியில் இப்போதும் மாதம் ஒருமுறைதான் வீடுகளுக்கு தண்ணீர் கொடுக்கப்படுகிறது. இதுபோhன்று மற்ற மாவட்டங்களிலும் நிகழ்ந்திருக்கிறது.

தாமிரபரணி தண்ணீர் விநியோகிகக்கப்படும் எட்டயபுரத்தில் தனியார் லாரிகள் தண்ணீர் வியாபாரத்தின் மூலம் நல்ல லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி பற்றாக்குறையை இன்னும் தாமிரபரணி செல்ல வேண்டிய இலக்கை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். ஆனால்,

இது தவிரவும், அரசு தங்களிடம் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் கடந்த 30 ஆண்டுகளில் பெய்த மழையின் சராசரியை குறிப்பிட்டிருக்கிறீர்கள். கனம் கோர்ட்டார் அவர்களே, 30 ஆண்டுகள் என்று சொன்னதற்கு ஒரு காரணம் இருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையின் அளவைவிட, தற்போதைய மழையின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. கடைசி 10 ஆண்டுகளில் சராசரி மழைப்பொழிவு என்னவென்று பார்த்து அதனடிப்படையில் தாங்கள் தீர்ப்பெழுதி இருக்க வேண்டாமா?

மாண்புமிகு நீதிபதியவர்களே, ஓராண்டு 100 சென்டி மீட்டரும், அடுத்த ஆண்டு எதுவுமே மழை பொழிவே இல்லாமலிருந்தால் சராசரி 50 சென்டி மீட்டர் என்று சொல்வது கணக்குக்கு சரியாக இருக்கலாம். வாழ்க்கைக்கு உதவாது என்பதை தாங்கள் அறிவீர்கள். ஓராண்டு முழுவதும் பெய்யும் மழைத்தண்ணீர் முழுவதையும் எவராலும் சேர்த்து வைத்து விட முடியாது. ஓராண்டில் எத்தனை சென்டி மீட்டர் மழை பெய்தாலும் அவ்வளவையும் தேக்கி வைக்க முடியாது. எனவே, அதிகபட்சம் தேக்க வைக்க வாய்ப்புள்ள மழை அளவை மட்டுமே அந்த ஆண்டின் மழை அளவாக கணக்கிட வேண்டும். இல்லையென்றால், வாழ்க்கை கணக்கு தவறாகி விடும். ஆனால், தங்கள் தீர்ப்பில் அத்தகைய தவறு நிகழ்ந்திருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

கனம் கோர்ட்டார் அவர்களே, தொழிற்சாலைக்கு தண்ணீர் வேண்டாமா? வேலை வாய்ப்பு பெருக வேண்டாமா? என்று கரிசனத்தோடு கேட்டிருக்கிறீர்கள். அது நியாயம்தான். ஆனால், ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்கான இடுபொருளாக தண்ணீர் இருப்பதற்கும், தண்ணீரையே விற்பனை பொருளாக மாற்றுவதற்கும் எந்தவித வேறுபாட்டையும் தாங்கள் பார்க்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

ஒட்டுமொத்தமாக 900 பேருக்கு வேலை வாய்ப்பின் மூலம் இந்த கம்பெனிகள் வாழ்வளிப்பதாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஒருவர் ஒரு கம்பெனியில் வேலை பார்க்கிறார் என்றால் அந்த குடும்பமே வாழ்வு பெற்று விட்டதாக குதூகலித்து சொல்கிறீர்கள். அதில் 350 பேர் நேரடியாக அந்த வளாகத்திற்குள் வேலை பார்ப்பதாகவும், 600 பேர் விறபனை, விநியோகம் மற்றும் போக்குவரத்தில் மறைமுகமாக வேலை பெற்றிருப்பதாகவும் சொல்கிறீர்கள். இந்த எண்ணிக்கை உங்களுக்கு பெரிதாக தோன்றலாம். ஆனால் ஒரு நிரந்தரத் தொழிலாளி கூட இல்லாத நிறுவனங்கள் எல்லாம் வந்து விட்டதை தாங்கள் அறிவீர்கள். ஒப்பந்தம், தினக்கூலி, கேசுவல் என்றெல்லாம் இருப்பதை தாங்கள் அறியமாட்டீர்கள். வெளிநாட்டு கம்பெனி, நிரந்தர வேலை என்ற கனவுகளோடு பல பேர் இத்தகைய நிறுவனங்களில் தங்கள் வாழ்க்கையை தொலைத்து கொண்டிருக்கிறார்கள். அவற்றை பற்றிய வழக்குகள், போராட்டங்கள் எல்லாம் தற்போது நீர்த்துப்போய் சக்தியற்று கிடக்கின்றன.

நீதிபதி அவர்களே, கடைசி புகலிடமாக நீதிமன்றத்தை நம்பிக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள் பல பேர் அதை மறந்து விட வேண்டும்- அது கெட்ட கனவு என்கிற நிலைக்கு போயிருக்கிறார்கள். நவீன தாராளமய கொள்கைகள் அமல்படுத்துப்படுவதற்கு முன்பு அநியாயமாய் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றங்கள் நிவாரணம் வழங்க ஆணையிட்டிருக்கின்றன. சமீப காலத்தில் அப்படி ஏதும் நடந்து விடவில்லை என்பதை தாங்கள் அறிவீர்கள்.

நீதிபதி அவர்களே, தங்கள் தீர்ப்பில் உபரி நீர் பற்றியும் குறிப்பிட்டுள்ளீர்கள். இதுவெல்லாம் உங்கள் கணக்கு மட்டுமே. இந்த உபரி நீர் 16 சதவிகிதமென்று அரசும், நிர்வாகமும் சொலலியிருக்கும் இந்த கால கட்டத்தில்தான் முதல் பத்தியில் சொன்ன அத்தனையும் நடந்திருக்கிறது. தங்களது தீர்ப்பில் கடலில் வீணாக கலக்கும் தண்ணீர் என்று ஒரு வார்த்தை பிரயோகம் இருக்கிறது. நீரியல் சுழற்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இதற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு.

இறுதியாக, மாண்புமிகு நீதிபதிகளே, ஒரு காலம் இருந்தது, அப்போது தண்ணீர் கொள்கை என்று ஒன்று அரசாங்கத்திற்க இருந்தது. அதில் எந்த நீராக இருந்தாலும், பயன்பாடு குறித்த முன்னுரிமை தீர்மானிக்கப்பட்டு இருந்தது. குடிநீர், விவசாயம், புனல்மின்சாரம், போக்குவரத்து இதற்கு பின்னர்தான் தொழிற்சாலைகள் மற்றும் இதர தேவைகளுக்கு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர், இது சடடப்புத்தகங்களில் இருந்தாலும் நடைமுறையில் மாற்றப்பட்டது. அதிகாரம் படைத்தோரால், அந்நியக்கம்பெனிகளால், பணத்திற்கு விலை போன அதிகாரிகளால், அரசியல்வாதிகள் 2012க்குப் பிறகு இதில் மாற்றம் வந்தது. இப்போது தண்ணீருக்கான பயன்பாட்டு முன்னுரிமையை அந்தந்த பகுதியில் உள்ள அதிகாரிகள் தீர்மானித்து கொள்ளலாம் என்று விடப்பட்டிருக்கிறது. 1987 தேசிய நீர்க்கொள்கையில் தண்ணீர் என்பது பிரதான இயற்கைவளம், அடிப்படையான மனிதத்தேவை, மதிப்புமிக்க தேசிய சொத்து என்று வரையறுக்கப்பட்டிருந்தது. இதோ 2016 நகல் தேசிய நீர்க்கொள்கை சட்டகம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தண்ணீர் ஒரு பொருளாதாரப் பண்டம் என்று வகைமாற்றம் செய்து விட்டார்கள். தண்ணீரைப் பொறுத்த அளவில் சேவை அளிப்பவர் என்கிற நிலையிலிருந்து சேவை அளிப்பதற்கு தனியாருக்கு வசதி செய்து கொடுப்பவர் என்கிற நிலைக்கு அரசு தன்னை தாழ்த்திக் கொண்டுள்ளது.

இவையெல்லாவற்றையும் விட குடிதண்ணீர் உட்பட அனைத்து தண்ணீர் தேவைகளுக்கும் விலை வைக்கப்பட்டுள்ளது. சமூகத்தின் கீழடுக்குகளில் உள்ளவர்களுக்கு மானிய விலையில் அல்லது இலவசமாக கொஞ்சம் போல தண்ணீரும் மற்ற தண்ணீருக்கு விலை வைத்தும் கொள்கை அறிவிப்பு செய்திருக்கிறார்கள். நடுத்தர வர்க்கத்தினருக்கு அதை விட கூடுதல், மேல்தட்டினருக்கு அதனினும் கூடுதல் என்று வரையறுத்திருக்கிறார்கள்.

வீட்டிற்கு இப்படி தரப்படும் நீரின் அளவின் அடிப்படையில் அதனால் ஏற்படும் கழிவு நீரை சுத்திகரிப்பதற்கான பணத்தையும் சேர்த்து பெற்று கொள்ளலாம் என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, தண்ணீர் மனிதனின் ஜீவாதாரத் தேவை என்பதிலிருந்து பொருளாதார பண்டம் என்று மாற்றப்பட்டதால் இனி ஒவ்வொரு துளி தண்ணீருக்கும் எங்கள் உழைப்பின் ஒருபகுதியை விற்றுத்தான பெற வேண்டியதிருக்கும். இதில் இனிமேல் அரசு ஈடுபடாதாம். பப்ளிக், பிரைவேட் பார்ட்னர்ஷிப் எனப்படும் பி.பி.பி வழி கடைபிடிக்கப்படுமாம். அதாவது நம்மூரில் உள்ள டோல்கேட்டுகள் போல ஆண்டுதோறுமோ, அல்லது தற்போது பெட்ரோல் விற்கப்படுவது போன்று தினசரி விலை உயர்த்தியோ அவர்கள் பணம் பறிப்பார்கள். இவையெல்லாம் தங்களுக்கு தெரியாததோ? அல்லது தங்கள் கவனத்திற்கே வராத விஷயங்களா?

மாண்புமிகு நீதிபதிகளே, கல்விகூடங்கள் தனியாரிடம் போய் விட்டது, நிர்வாகத்தின் சிலபகுதி தனியார் கட்டுப்பாட்டிற்கு போய் விட்டது, தண்ணீர் விற்பனையில் பல இடங்களில் தனியார் வந்து விட்டார்கள். நீதிபதி அவர்களே, ஆறுகளை விற்று கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன், சத்தீஷ்கர் மாநிலத்தில் பாஜக அரசாங்கம் இருக்கிறது, அந்த மாநிலத்தில் ஷியோநாத் என்றொரு ஆறும் இருக்கிறது. அதில் 23 கிலோ மீட்டர் தூரத்தை 22 ஆண்டுகளுக்கு அந்த அரசாங்கம் தனியாரிடம் கொடுத்து விட்டது. இவையெல்லாம் கொள்கை முடிவுகள் என்று சொல்லக்கூடும். மிகச்சாதாரண விஷயங்களில் தங்கள் வரையறையையும் மீறி நிர்வாகத்தின் அல்லது பாராளுமன்றத்தின் எல்லைக்குள் தயக்கமின்றி தலையிடுகிற நம் நீதிமன்றங்கள் ஏழை, எளியவர்களை மட்டுமன்றி, எல்லாத்தரப்பு மக்களையும் பாதிக்கிற ஒரு பிரச்சனையில் இப்படி ஒரு நிலைபாடு எடுத்திருப்பது மிகவும் வருந்தத்தக்கது. தூக்கு தண்டனை விதிப்பதற்கு கூட கூட்டு மனச்சாட்சியை துணைக்கு அழைக்கிறீர்கள். குடிதண்ணீருக்கு மட்டும் மனச்சாட்சியற்ற அரசு நிறுவனங்களின் கூற்றுக்களை அப்படியே ஏற்றுக் கொள்கிறீர்கள். சற்று மறுபரிசீலனை செய்யுங்கள்.

***

Leave A Reply