பள்ளிபாளையம், ஏப். 20 –
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் நகரத்திலுள்ள அக்ரகாரம் பகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி கிளைச் செயலாளராக செயல்பட்டவர் தோழர் வேலுச்சாமி. பள்ளிப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட் டாரப் பகுதிகளில் கந்துவட்டி கும்பலின் அட்டூழியம் அதிகரித்து வந்த நிலையில், அதற்கு எதிராக வேலுச்சாமி தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.

கந்துவட்டிக்கு பணம் பெற்ற குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை கந்துவட்டிக்கும்பல் செல்பேசியில் ஆபாசமாக படம் பிடித்து பாலியல் தொந்தரவு செய்து வந்த நிலையில், பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தினர் வேலுச்சாமியிடம் முறையிட்டனர். வேலுச்சாமி அவர்களை அழைத்துச் சென்று, கடந்த 2010 மார்ச் மாதம் 10-ஆம் தேதி நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வைத்தார்.

இதையறிந்த கந்துவட்டிக் கும்பல் தோழர் வேலுச் சாமிக்கு கொலை மிரட்டல் விடுத்தது. தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதை அறிந்த வேலுச்சாமி, இதுபற்றி பள்ளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், அங்கிருந்து வீடு செல்லும் வழியிலேயே மர்ம கும்பலால் வேலுச்சாமி கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இக்கொலை, தமிழகம் முழுவதும் மக்கள் பிரச்சனைக்காக போராடுவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர் போராட்டங்களை நடத்தியது. அதைத்தொடர்ந்து இந்த கொலை வழக்கு பள்ளிப்பாளையம் காவல்துறையிடமிருந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி, தோழர் வேலுச்சாமி படுகொலை தொடர் பாக, அப்போது விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாவட்ட துணைச் செயலாளராக இருந்த தலசிவா என்கிற சிவக்குமார் உட்பட 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்து சேலம் மத்தியச் சிறையில் அடைத்தனர். சில நாட்களில் ஜாமீனில் வெளிவந்த சிவக்குமார், வேலுச்சாமி கொலையாளிகளில் ஒருவரும், தனது கூட்டாளியுமான ஆமையன் என்பவரை கொலை செய்து விட்டு தலைமறைவானார்.

இந்த இரு கொலை வழக்கு சம்பந்தமாக காவல் துறையினர் சிவக்குமாரை தேடி வந்தனர். கடந்த 2013 ஆம் ஆண்டு சிவக்குமாருக்கு நாமக்கல் நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்தது. கொலையாளி சிவக் குமாரை கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில், ஈரோட் டில் சிவக்குமார் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்த சிபிசிஐடி காவல்துறையினர் சிவக்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை நாமக் கல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, நீதிமன்ற உத்தரவின் பேரில் சேலம் மத்தியச் சிறையில் 15 நாள் காவலில் அடைக்கப்பட்டார்.

வேலுச்சாமி கொலை வழக்கில் 5 ஆண்டுகளாக நீதி மறுக்கப்பட்டு உள்ளதாகவும், மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் வலியுறுத்தலின் பேரிலும் காவல் துறையினரின் தொடர் முயற்சியாலும் தற்போது கொலையாளி சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றவாளி சிவக்குமாருக்கு பிணை வழங்காமல் காவல்துறை இவ்வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் ஏ. ரங்கசாமி வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.