சென்னை,
விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த கிரிதரன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:  2015ம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பயிர் காப்பீட்டுத் தொகையான சுமார் 450 கோடி ரூபாய் இதுவரை வழங்கப்படவில்லை. இந்த தொகை கிடைக்காமல் 23 மாவட்டங்களை சேர்ந்த 6 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட 300 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். காப்பீட்டு தொகைக்கான 1 விழுக்காடு பிரீமியத்தை விவசாயிகளும், 0.45 விழுக்காட்டை மத்திய அரசும் செலுத்தியுள்ளது. விவசாயிகளும், மத்திய அரசும் பிரீமியம் செலுத்திய நிலையில், மாநில அரசு தனது பங்கான 0.55 விழுக்காடு பிரீமியம் தொகையை செலுத்தாததால், இன்சூரன்ஸ் நிறுவனம் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க மறுத்துவிட்டது.

இது குறித்து அரசிடம் கேட்ட பின்னரே, தமிழக அரசு தனது பிரீமியம் தொகையை கடந்த மார்ச் மாதம் காலதாமதமாக செலுத்தியுள்ளது.   பிரீமியம் செலுத்திய பின்னரும் அரசு அளித்த புள்ளி விவரங்கள் முரண்பாடாக இருப்பதாகக் கூறி இழப்பீட்டுத் தொகை தருவதற்கு  காப்பீட்டு நிறுவனங்கள் மறுத்து வருகின்றன. எனவே, இழப்பீட்டுத் தொகையை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு  தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி , நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு முன்பு வியாழனன்று (ஏப். 20)  விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகளும்,  தேசிய வேளாண் காப்பீட்டு கழகமும் இரண்டு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஜூன் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave A Reply