அரியலூர், 
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி செல்வம். கடந்த பல ஆண்டுகளாக இவரது நிலம் மற்றும் இவருக்கு தெரிந்தவர்களின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அதில் நெல், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டார்.

இந்நிலையில், குத்தகைக்கு எடுத்த நிலத்தின் உரிமையாளர் முத்தையன், அவரது மகன்கள் பழனிராஜ், ராமகிருஷ்ணன், கண்ணதாசன் ஆகிய மூன்று பேருக்கும் அந்த நிலத்தை பங்கு போட்டு சொத்தைப் பிரித்துக் கொடுத்துள்ளார்.
விவசாயி செல்வம் மற்றும் அவரது மனைவி தேன்மொழி, ‘‘இங்குள்ள போர் மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சி நாங்கள் இந்த நிலத்திலேயே விவசாயம் செய்கிறோம்’’ என்று கூறியுள்ளனர். இதை முத்தையன் மற்றும் அவரது மகன்கள் ஏற்றுக் கொண்டனர்.

பின்னர் சில நாட்களுக்கு முன்பு, புதுப்பாளையம் கிராமத்தில் வசிக்கும் வைத்திலிங்கம் (60) இவரது மனைவி மல்லியம்பால், மகன்கள் செந்தில், பாலா ஆகியோர் போர் செட்டின் பீஸ் கட்டையை எடுத்துச் சென்று விட்டனர். இதுகுறித்து, செல்வம், அவரது மனைவி தேன்மொழி, வைத்திலிங்கம் வீட்டிற்குச் சென்று, தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகுகின்றன. தயவு செய்து, போர் செட்டிலுள்ள பீஸ் கட்டை பொருத்திவிடுங்கள் என்று கூறியுள்ளனர்.

போர் செட்டின் பீஸ் கட்டையை தர மறுத்த வைத்திலிங்கம் மகன்கள், தர முடியாது, நாங்கள் இதை வேறு ஒருவருக்கு கிரையம் செய்துள்ளோம் என்று கூறியுள்ளனர். இதனால் பயிர்கள் கருகுவதைக் கண்டு விரக்தி அடைந்த செல்வம் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்கொலைக்கு முயன்ற விவசாயி செல்வத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜெயங்கொண்டம் ஒன்றியச் செயலாளர் எம்.வெங்கடாச்சலம், விவசாயிகள் சங்க மாவட்டப் பொறுப்பாளர் கே.மகாராஜன், மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் பி.பத்மாவதி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இதுகுறித்து விவசாயி செல்வத்தின் மனைவி தேன்மொழி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்வத்திற்கு ஐந்து மகள்கள் உள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: