பேராவூரணி, ஏப். 20 –
நலிவுற்ற நிலையில் உள்ள தென்னை விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் தென்னை மரத்தில் இருந்து “நீரா” பானத்தை உற்பத்தி செய்ய அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  ‘நீரா’ என்பது தென்னை மரங்களின் மலராத பாளைகளில் அரிவாளால் கீறி சாறு வடித்து இயற்கை முறையில் நொதிக்க வைக்காமல் தயாரிக்கப்படும், ஆல்கஹால் கலப்பற்ற இயற்கை பானமாகும். பல்வேறு வைட்டமின்கள் மற்றும் இயற்கை தாது உப்புகள் நிறைந்த ஆரோக்கிய பானமாகும்.

இதன் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட நீரா சர்க்கரை, நீரா வெல்லம், நீரா தேன், நீரா லட்டு, நீரா கேக் உள்ளிட்ட பல்வேறு உணவுப்பொருட்கள் தயாரித்து விற்பனை செய்ய முடியும். இதனால் தமிழகத்தில் சுமார் 11 லட்சம் ஏக்கரில் 8 கோடிக்கும் அதிகமான தென்னை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. அகில இந்திய அளவில் தமிழகம் தென்னை உற்பத்தியில் முன்னணியில் இருந்து வருகிறது. தென்னையில் இருந்து விவசாயிகளுக்கு ஒரு மரத்தில் இருந்து ஆண்டொன்றுக்கு சராசரியாக ஆயிரம் ரூபாய் கிடைக்கும் சூழலில், நீரா மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு மூலமாக ஆண்டுக்கு ரூபாய் 15 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேங்காய்க்கும் நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க முன்னாள் மாநில அமைப்பாளர் ஆர்.சி.பழனி வேலு கூறுகையில், “ தென்னை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தென்னையில் இருந்து ‘நீரா’ பானம் உற்பத்தி செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கி யுள்ளதை வரவேற்கிறோம். இதன் மூலம் சுமார் 2 லட்சம் தென்னை விவசாயிகளும், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், சார்புடையோர் இதன் மூலம் பயனடைவர். அரசின் இந்த உத்தரவின் மூலம் விவசாயிகள் பலனடைவர்.

மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பது குறித்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும். அந்நியச் செலா வணியை ஈட்டித்தரும் அரசின் திட்டத்தை தென்னை விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது” என்றார்.

Leave A Reply

%d bloggers like this: