தேனி,
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அளித்த வாக்குறுதியின் படி நூறு நாள் வேலை திட்டத்தை பேரூராட்சி பகுதிக்கு விரிவுபடுத்தாவிட்டால் மே இறுதியில் சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிடப்படும் என அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர் அறிவித்துள்ளார்.

தேனியில் நடந்த மனுக்கொடுக்கும் போராட்டத்தில் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் 12,560 ஊராட்சிகளும், 528 பேரூராட்சிகளும் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியுள்ளன. விவசாயம் இல்லாமல் விவசாயத் தொழிலாளர்கள் வருமானமின்றி அவதிப்பட்டு வருகிறார்கள். ஊரக வேலை திட்டத்தை 150 நாட்களாக அதிகரித்து உத்தரவிட்ட மாநில அரசு, மார்ச் மாதம் 20ஆம் தேதியோடு கணக்கு முடிந்ததாக கூறி கூடுதலாக அறிவித்த 50 நாட்களுக்கு பணி தராமல் துரோகம் செய்துவிட்டது. இது சட்டத்திற்கு புறம்பான செயலாகும்.

மாநிலத்தில் நவம்பர் மாதம் வரை இத்திட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு  சம்பள பாக்கி நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக  ஊரக வளர்ச்சித்துறை செயலர் மற்றும் ஆணையரிடம் நேரில் தொடர்பு கொண்டு பேசியபோது அரசின் வேறு கணக்குகளில் உள்ள பணத்தை எடுத்து சம்பள பாக்கியை கொடுக்க சொல்லி மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டதாக தெரிவித்தார். ஆனால் பல மாவட்டங்களில் அது நடக்கவில்லை. அதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வங்கி இருப்பு வரவு வைத்தது கூட தெரியவில்லை.

பேரூராட்சி பகுதிக்கு விரிவுபடுத்துக!

தமிழகத்தில் 528 பேரூராட்சிகள் உள்ளன. இதில் பெரும்பகுதி விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ளது. தேனி மாவட்டத்தை பொறுத்தவரையில்  22 பேரூராட்சிகளும் முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்தவை. 22 பேரூராட்சிகளில் வசிக்கும் 4.50 லட்சம் பேரில் சுமார் 1.25  லட்சம் பேர் சிறு, குறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களாக உள்ளனர். விவசாய வேலை இல்லாமல் சுமார் 95 ஆயிரம் பேர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர். கடந்த 10 ஆண்டுகளாக ஊராட்சிகளில் அமல்படுத்தப்படும் நூறுநாள் வேலைத் திட்டத்தை பேரூராட்சி பகுதி தொழிலாளர்களுக்கும் அமலாக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் கோரிக்கை எழுந்துள்ளது.

பேரூராட்சி என்பது பல்வேறு மாநிலங்களில் இல்லை. தமிழகத்தில் தான் கூடுதலாக இருக்கிறது. நூறுநாள் வேலை திட்டத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். இது சாத்தியமில்லை என்றால் பேரூராட்சியை ஊராட்சியாக வகை  மாற்றி தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும். இதை செய்ய மறுத்தால் மே இறுதி வாரம் அல்லது ஜூன் முதல் வாரத்தில் சென்னை தலைமை செயலகத்தை லட்சக்கணக்கான விவசாய தொழிலாளர்களை திரட்டி முற்றுகையிடுவோம்.
அது போல தமிழகத்தில் சட்டக்கூலி அமல்படுத்தப்படுவதில்லை. சட்டக்கூலி  ரூ.205 அறிவிக்கப்படும். ஆனால் ரூ. 110 முதல் ரூ. 130 வரை மட்டுமே தரப்படுகிறது. விலை  உயர்வால் அவதிப்பட்டு வரும் தொழிலாளர்களுக்கு  விலை உயர்விற்கு ஏற்ப ரூ. 400 கூலி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Leave A Reply