தரங்கம்பாடி, ஏப். 20 –
நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட டேனிஷ் கோட்டையை ஏப்ரல் 18 முதல் 24 வரை கட்டணமின்றி இலவசமாக பார்வையிடலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. கி.பி.1600 முதல் 1634 வரை சோழ நாட்டை ஆண்ட ரகுநாத நாயக்கர் மன்னர், வெளிநாட்டு வணிகம் தரங்கம்பாடியில் பெருகும் வகையில் டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு அளித்த அனுமதியின் பேரில் அப்போதைய டேனிஷ் கவர்னர் ஓவ்கிட்டியால் 1620இல் டேனிஷ் கோட்டை கலை நுணுக்கத்துடன் கட்டப்பட்டது.

இரண்டு தளங்களுடன் அமைக்கப்பட்ட இக்கோட்டையில் மேல் தளத்தில் கவர்னர்கள், இராணுவ அதிகாரிகள், பாதிரிமார்கள் தங்கும் வசதியுடனும், கீழ்தளத்தில் பண்டக வைப்பறை, சிறைச்சாலை, சமையலறை, வீரர்கள் தங்கும் அறை என 10க்கும் மேற்பட்ட அறைகளுடன் கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து கோட்டையின் முன் தளத்தில் டேனிஷ் கால வரலாறுகளை தெரிந்து கொள்ளும் வகையில் டேனிஷ் பத்திரங்கள் 300 ஆண்டுகள் பழமையான பானைகள், ஓலைச்சுவடிகள், தங்கத்திலான ஓலைச்சுவடியின் மாதிரி, கவர்னர் பயன்படுத்திய பாத்திரங்கள், தரங்கம்பாடியில் ஆட்சி செய்த டேனிஷ் கவர்னர்களின் புகைப்படங்கள் மற்றும் பல்வேறு பழங்கால பொருட்கள் பாதுகாக்கப்பட்டு அகழ் வைப்பகமாக செயல்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் இரண்டுமுறை உலக மரபு சின்னங்கள் பாதுகாப்பு வாரவிழாவை கடைப்பிடித்து கட்டணமின்றி வரலாற்றுச்சின்னங்களை பார்வையிடுவதற்கு தொல்லியல் துறை அனுமதித்து வருகிறது. அதன்பேரில் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை மற்றும் கோட்டைக்குள் வைக்கப்பட்டுள்ள அகழ் வைப்பகத்தை ஏப்ரல் 18 – 24 ஆம் தேதி வரை கட்டணமின்றி பார்வையிடலாம் என தொல்லியல்துறை அறிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பழமையான வரலாறுகளை தெரிந்து கொள்ள வேண்டுமென தொல்லியல் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.