திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பெரியகோளப் பாடி கிராமத்தில் விவசாயக் கிணற்றில் மண் வாரும்போது ரோப் கயிறு அழுந்து விழுந்ததில் ஒருவர் பலியானார்.  4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.  தமிகமெங்கும் வரலாறு காணாத வறட்சி நிலவி வரும் நிலையில் குடிநீருக்கே பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று விவசாய கிணறுகளும் நிலத்தடி நீர் குறைந்து வற்றிப்போனதால் விவசாயிகள் விவசாயம் செய்யமுடியாமல் தண்ணீரின்றி தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் செங்கம் அடுத்த பெரியகோளப்பாடி பகுதியில் ஏழுமலை என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் தூர்வாரும் பணியை அதேபகுதியைச் சேர்ந்த அண்ணாமலை, அவரது நண்பர்கள் ந.ஏழுமலை, ந.முனியன், மு.ஏழுமலை, க.ஏழுமலை என்பவர்களுடன் குழுவாக பணியினை மேற்கொண்டனர்.

சுமார் 10 நாட்களாக பணி நடைபெற்று வந்த நிலையில் கடைசி நாளான வியாழக்கிழமை (ஏப்.20) வழக்கம்போல் கிணறு தூர்வாரும் பணியினை மேற்கொண்டனர். அப்போது எதிர்பாராத விதமாக ரோப் கயிறு அறுந்து மண்வாரும் இரும்புக்கூடை அறுந்து விழுந்ததில் உள்ளிருந்த 5 பேரில் அண்ணாமலை என்பவர் சம்பவ இடத்திலேயே கூடை அழுத்தி உயிரிழந்தார். மேலும் 4 பேர் மண் விழுந்து அழுத்தியதில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

பின்னர் சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கிணற்றில் சிக்கியவர்களை உடனே மீட்கும் பணியினை மேற்கொண்டனர். திருவண்ணாமலை தீ அணைப்புத் துறைக்கு தகவல் அளித்து 3 மணி நேரத்திற்கும் மேலாகியும் வராததால் பொதுமக்களே போராடி கிணற்றில் சிக்கியவர்களை மீட்டனர். காயம் அடைந்தவர்களை உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து வந்த திருவண்ணாமலை காவல்துறையினர் இறந்த அண்ணாமலையின் உடலைக் கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் திருவண்ணாமலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave A Reply