உளுந்தூர்பேட்டை; உளுந்தூர்பேட்டை நகரில் அரசு ஐடிஐ பின்புறம் அதிகாரிகள்  திறக்க முற்பட்ட டாஸ்மாக் கடையை மார்க்சிஸ்ட் கட்சியினரும், ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் பொதுமக்களையும்  மாணவர்களையும் திரட்டி மறியல் செய்ததால் கடை திறக்கப்படாமல் தடுக்கப்பட்டது.
    உளுந்தூர்பேட்டை நகரில் இருந்த 8 டாஸ்மாக் கடைகளும் உச்சநீதிமன்ற உத்தரவால் மூடப்பட்டன. இதனை மீண்டும் வேறு இடங்களில் திறக்க அரசும், டாஸ்மாக் அதிகாரிகளும் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர், ஆனால் பல இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர். பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால் திறக்கமுடியவில்லை.
   உளுந்தூர்பேட்டை நகரில் தேசிய நெடுஞ்சாலைகள் எண் 45 மற்றும் 67 ஆகிய இரண்டிற்கும் நடுவே ஒரு முழுமையடையாத கட்டிடத்தில் கடையை திறக்க டாஸ்மாக் அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். யாருக்கும் தெரியாமல் மதுபான சரக்குகளை இரவோடு இரவாக  உள்ளே வைத்துள்ளனர்.
    ஏப்ரல் 20 வியாழனன்று கடையை திறக்க முயன்றனர். இதை கேள்விப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.ஆறுமுகம், நகர செயலாளர் கே.தங்கராசு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்  மாவட்ட துணைச் செயலாளர் எம்.கே.பழனி, நகரச் செயலாளர் சதீஷ்குமார், தமுஎகச தலைவர் பி.ஸ்டாலின் உள்ளிட்டோர் விரைந்து சென்று அப்பகுதி பெண்கள், பொதுமக்களை திரட்டி கடையை திறக்க விடாமல் செய்தனர். இக்கடையின் அருகே உள்ள அரசு ஐடிஐ மாணவ, மாணவியரும் திரண்டு வந்து அங்கு கடையை திறக்கக் கூடாது என ஆவேசமாக கோஷமிட்டதால்   டாஸ்மாக் அதிகாரிகள் கடை திறக்க முடியாமல் திரும்பிச் சென்றனர்.
     ஆனால் கடையை திறக்கப்போகிறோம் என்ற தகவலை வழக்கமான மதுபிரியர்களுக்கு முன்கூட்டியே கசிய விட்டுள்ளனர். இதனால்  ஏராளமானோர் அங்கு குழுமினர்.  அதில் பலர் கடையை திறக்கக்கூடாது என்பவர்களிடம் தகராறில் ஈடுபடுகின்றனர். இப்படி சில இடங்களில் டாஸ்மாக் அதிகாரிகள் உயரதிகாரிகளின் நிர்பந்தத்திற்கு உட்பட்டு ஏழைமக்களிடையே மோதலையும், விரோதத்தையும் ஏற்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்,

Leave A Reply