கடலூர்,
என்எல்சி நிலக்கரி சுரங்கத்தில் சுரங்கப்பாதை இருப்பதாக வெளியான தகவல் குறித்து என்எல்சி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்தியஅரசின் என்எல்சி இந்தியா நிறுவனம் சுரங்கம் அமைத்து பழுப்பு நிலக்கரி வெட்டி எடுத்து வருகிறது. தரைமட்டத்திலிருந்து சுமார் 150 முதல் 200 அடி ஆழம் வரையில் பெரிய அளவிலான பள்ளம் தோண்டப்பட்டு நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி நடைபெறும். அதன்படி புதன்கிழமையன்று முதலாவது சுரங்கத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது நிலக்கரிக்குள் சுரங்கம் போன்ற கட்டுமானம் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த தகவல் புகைப்படங்களுடன் ‘வாட்ஸ்அப்’ மூலமாக நெய்வேலி, கடலூர் பகுதியில் வேகமாக பரவியது. இதுகுறித்து சுரங்கத்திலிருந்தவர்கள் கூறியதாவது, முதலாவது சுரங்கப்பணியின் போது நிலக்கரிப் படுகையின் கீழ்ப் பகுதியில் சுமார் 1 மீட்டர் அகலம் கொண்ட கட்டுமானம் சுரங்கப்பாதை போன்ற தோற்றத்துடன் காணப்பட்டது. சுமார் 20 மீட்டர் நீளம் வரையில் பாதை இருக்கலாம். செங்கற்களால் அமைக்கப்பட்டு மரப்பலகைகள் இணைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து அப்பகுதியில் சுரங்கப்பணி நிறுத்தப்பட்டது என்றனர்.
இதுகுறித்து என்எல்சி அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், முதலாவது சுரங்கத்தில் சில கட்டுமானங்கள் தெரிந்ததாக கிடைத்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் அப்பகுதியில் பணி நிறுத்தப்பட்டது. மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.

Leave A Reply