கடலூர்,
மூன்று மாதமாக சம்பளம் வழங்கவில்லையென வேளாண் பட்டதாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
கடலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டப் பயிர் அறுவடை பரிசோதனை ஒப்பந்தப் பணியாளர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனுவில், கடலூர் மாவட்டத்தில் பிரதமரின் பயிர்க்காப்பீட்டு திட்டத்தின் கீழ் பணியாற்றிட ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் மூலமாக 102 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வேளாண்மைப்படிப்பில் பட்டம், பட்டயம் பெற்றவர்களே தேர்வான நிலையில் மாதச்சம்பளமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது.

ஒன்றியம் வாரியாக 8 முதல் 12 பேர் வரையில் பிரிக்கப்பட்டு விவசாயிகளின் வயல்களுக்கு நேரடியாகச் சென்று காப்பீடு குறித்து விளக்குவது, பயிர்களின் விளைச்சல் குறித்து ஆராய்ந்து அதனை மாவட்ட வேளாண்மை அலுவலருக்கு அறிக்கையாக அனுப்பி வைப்பதும் மத்திய அரசின் ஆப் மூலமாகவும் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்படுவதும் நடைபெறுகிறது.

கடந்த ஜனவரி மாதம் இப்பணி துவங்கியதிலிருந்து இதுவரையில் மாதச்சம்பளம் வழங்கப்படவில்லை. அதிலும்  ரூ.2500 வரையில் பிடித்தம் செய்யப்படுமென கூறப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு 102 பேருக்குமான ஓராண்டிற்கான சம்பளத்தை மொத்தமாக மாவட்ட வேளாண்மைத்துறை மூலமாக வழங்கியுள்ளது. வேளாண்மைத்துறை அத்தொகையை தனியார் நிறுவனத்திற்கு அளித்தும் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.
எனவே, இத்திட்டத்தில் நடைபெறும் மோசடியைத் தடுத்து உடனடியாக சம்பளம் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியிருந்தனர்.

Leave A Reply