வாஷிங்டன், ஏப். 19-
அமெரிக்காவில் பணியாற்ற வெளிநாட்டின ருக்கான எச்1பி பணி விசா வழங்கும் புதிய கட்டுப்பாட்டுக்கான உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கையொப்ப மிட்டுள்ளார். இதையடுத்து இந்த உத்தரவு புதன் முதல் நடைமுறைக்கு வந்தது. அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப், எச்1பி விசா என்ற நடைமுறையின் மூலம் வெளிநாட்டினர் அனைவருக்கும் அமெரிக்காவில் எளிதாக வேலை கிடைக்கும் வாய்ப்பை பறிக்கும் வகையில், இனி தகுதி உள்ளவருக்கு மட்டுமே இத்தகைய விசாக்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

அமெரிக்காவில், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள பொறியாளர்கள் பலரும் வெளிநாட்டவர்களே. முக்கியமாக, இந்தியர்கள் அந்தப் பணிகளில் அதிகம் பணியாற்றுகின்றனர். எனவே, அதிகமாக உள்ளூர்வாசிகளைப் பணியமர்த்துவதற்காக விசா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இதற்கான அதிரடி உத்தரவில் டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டார். இதற்கு முந்தைய நிலவரப்படி அமெரிக்காவில் பணியாற்றுவதற்காக விசா கேட்டு விண்ணப்பிக்கும் வெளிநாட்டினரின் பெயர்கள் எச்1பி முறையில் குலுக்கலில் போடப்பட்டு, தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு எல்லாம் விசா வழங்கப்பட்டு வந்தது.

தற்போது, டிரம்ப் பிறப்பித்துள்ள இந்த புதிய உத்தரவின்படி, அமெரிக்காவில் பணியாற்ற விரும்புபவர்களுக்குள் அதிகமான சம்பளம் வாங்கும் அளவுக்கு தத்தமது துறைகளில் மிகவும் தேர்ச்சி பெற்ற வல்லுனர்களுக்கு மட்டுமே இனி இதுபோன்ற அவசர விசாக்கள் அளிக்கப்படும். இத்தகையை விசாக்களை யாருக்கெல்லாம் அளிப்பது என்று தேர்வு செய்யும் பொறுப்பு அமெரிக்க உள்துறை அமைச்சர், நாட்டின் தலைமை அரசு வழக்கறிஞர், தொழிலாளர் துறை அமைச்சர், உள்நாட்டு பாதுகாப்புத் துறை தலைமை அதிகாரிகளிடம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முந்தைய நிலவரப்படி அமெரிக்காவில் பணியாற்றுவதற்காக ஆண்டுதோறும் 65 ஆயிரம் வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அமெரிக்காவில் உள்ள பிரபல பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பயின்ற உயர்பட்டதாரிகள் சுமார் 20 ஆயிரம் பேருக்கும் ஆண்டுதோறும் வேலைக்கான விசாக்கள் அளிக்கப்படுகிறது.இந்த (ஏப்ரல்) மாதத்தில் இதுவரை சுமார் 2 லட்சம் வெளிநாட்டினர் விசா கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்கள் தொடர்பான பரிசீலனை இனி டிரம்ப்பால் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள மேற்படி புதிய குழுவினரிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள விஸ்கான்ஸின் மாநிலத்தில் செவ்வாயன்று இதற்கான உத்தரவில் கையொப்பமிடும் போது, அங்கிருந்த அதிகாரிகள் மத்தியில் பேசிய டிரம்ப் கூறியதாவது:- வேலைக்குரிய ஊதியம் அளிக்கப்பட்டால், அமெரிக்க தொழிலாளர்களுடன் போட்டி போட யாராலும் முடியாது. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக இது நடக்காமல் போனது. இங்குள்ள அமெரிக்கர்களுக்கு வேலை அளிக்கப் பட வேண்டும் என நாங்கள் நம்புகிறோம். அமெரிக்க தயாரிப்புகள் அனைத்தும் அமெரிக்க தொழிலாளர்களால் உருவாக்கப்பட வேண்டும். அமெரிக்க பொருட்களை வாங்குங்கள் என்ற முழக்கத்தையும் எனது தலைமையிலான அரசு அதிகாரிகள் இனி முழுமையாக நடைமுறைப்படுத்துவார்கள்.

தற்போதைய நடைமுறையின்படி, இங்குள்ள அனைத்து தரப்பு அமெரிக்க தொழிலாளர்களும் புறக்கணிக்கப்படுகின்றனர். அதே வேலைக்கு குறைந்த சம்பளத்தில் பணியாற்றும் வெளிநாட்டு நபர்கள் எச்1பி விசா மூலம் இங்கு அழைத்து வரப்பட்டு பணியமர்த்தப்படுகின்றனர். இனி மேல் இந்த நடைமுறை முடிவுக்கு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply