தேனி, ஏப்.19-
பேரூராட்சி பகுதிகளில் குடியிருக்கும் விவசாய தொழிலாளர்களுக்கும் நூறுநாள் வேலை திட்டத்தில் பணி வழங்கவேண்டும் என்று கோரி ஏ.லாசர் தலைமையில் விவசாயத் தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சிகள் முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்த பகுதியாகும். வறட்சி காரணமாக சுமார் ஒரு லட்சம் பேர் வாழ்வாதாரமின்றிதவித்து வருகிறார்கள். ஊராட்சிகளில் அமல்படுத்தப்படும் நூறுநாள் வேலை திட்டத்தை, பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்தினால் விவசாய கூலித்தொழிலாளர்களுக்கு உதவியாக இருக்கும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் புதனன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாரை சாரையாக மனு அளித்தனர். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நேரில் வந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் மனுக்களை பெறுவதற்கு பெட்டிகள் வைக்கப்பட் டது. காலை 11 மணிக்கு மனுக்கள் போட துவங்கியது பிற்பகல் 1.30 மணிவரை நீடித்தது. மனுக் கொடுக்க பல்லாயிரக்கணக்கானோர் திரண்டதால் காவல் துறையினர் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர் .

மனு கொடுக்கும் போராட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் டி.வெங்கடேசன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.மொக்கராஜ், மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை, மாவட்ட பொருளாளர் சி.வேலவன், விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் கே.ராஜப்பன், மாவட்டத் தலைவர் டி.கண்ணன், மாவட்டச் செயலாளர் என்.சுருளிநாதன், சிஐடியு மாவட்டத் தலைவர் சி.முருகன், மாவட்டச் செயலாளர் எம்.ராமச்சந்திரன், விதொச மாவட்ட நிர்வாகிகள் பி.கருப்பசாமி, ஜி.முத்துகிருஷ்ணன், சி.சடையாண்டி, எஸ்.அய்யர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .

Leave A Reply